Saturday, July 30, 2011

Yi Yŏn-ju கவிதைகள்




தென்கொரியாவில் 1953 பிறந்த Yi Yŏn-ju வின் படைப்புகள் அந்நாட்டு பெண்கவிஞர்களின் படைப்புகளில் முக்கியமானதாக கருதப்படுகின்றது. பெரும்பாலான கவிதைகள் புறநகர்ப்பெண்களின் நிலையை பேசும் படைப்பாகவும் ஒடுக்கப்பட்ட பெண்களின் குரலாகவும் அமைந்துள்ளது. இவரின் முதல் கவிதைத் தொகுப்பு ‘A Night Market where there are Prostitutes’ 1991ல் வெளியானது. இரண்டாம் தொகுப்பான ‘Juda, a Lamb of Redemption’ 1993ல் இவரது தற்கொலைக்கு பிறகு வெளியானது. இவர் பல கலைகளில் தேர்ந்தவராக இருந்தார். இலக்கிய வட்டங்களில் மட்டுமல்லாது ஓவியர்கள், பாடகர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மத்தியிலும் நன்கு அறியப்பட்டார். இவரின் இரு கவிதைகள்……



மனநோய்


‘நிச்சயமாய் நான் எதுவுமே செய்யவில்லை’
என ஒரு பெண்மணி விம்மியழுதாள்

‘தொழிற்சாலையின் அருகிலும் செல்லவில்லை
ஒருமுறை கூட பேரணியில் பங்கேற்கவில்லை’
என கதறினாள்

‘யார்… ஏன் தீக்குளிந்து இறந்தார் என்றோ
கட்டிடத்தின் மேற்தளத்திலிருந்து குதித்தார் என்றோ
அறிந்துக்கொள்ளவும் எனக்கு விருப்பமில்லை’
என தலைமுடியை விரித்து புலம்பியழுதாள்

‘ஒரு விலங்கைப்போல்
வெறுமனே அமர்ந்திருப்பதைத் தவிர
வேறு எதுவுமே நான் செய்யவில்லை

என்னை யார் இங்கழைத்து வந்தது?
எதற்காக அடைப்பட்டிருக்கின்றேன்?

என் கருவறை ஒரு துருபிடித்த இரும்புத்துண்டு
தீக்குளிக்க ஒரு மகனையோ அல்லது
போராட்டம் நடத்த ஒரு மகளையோ
கூட என்னால் பிரசவிக்க இயலாது’
என நிலைகுலைந்து தரையை உரசினாள்

மருத்துவர் வந்து சென்றார்
ஒரு வார்த்தை கூட உரைக்காமல்

செவிலி வந்து அவளை அறைந்தாள்
பின் வெளியேறினாள்
படாரென கதவு மூடப்பட்டது

‘நிச்சயமாய் நான் எதுவுமே செய்யவில்லை’
என வாடிய அவள் முணுமுணுத்தாள்
மனநோய்ப்பிரிவின்
இரும்புக்கதவுகளை பற்றிக்கொண்டு

1970ல் ஏழைத்தொழிலாளிகள் சுரண்டப்படுவதை எதிர்த்து Chŏn T’ae-il, என்ற தொழிலாளி தீக்குளித்துக்கொண்டார். தென்கொரியாவில் இச்சம்பவம் நாடு முழுவதுமான தொழிலாளர் இயக்கத்தை முடுக்கிவிட்டது. காவலர்களையும் வாடகைக்கு குண்டர்களையும் கொண்டு அரசாங்கம் தொழிலாளிகளின் வேலைநிறுத்தப்போராட்டங்களை முறியடித்தது. சமயங்களில் நம்பிக்கையிழந்த தொழிலாளிகள் கட்டிடத்தின் மேற்தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டனர். இத்தனை வலுவான அடக்குமுறைகள் இருந்தும் 1970 – 1980 காலகட்டங்களில் பெண் தொழிலாளிகள் தனி இயக்கத்தை துவங்கினார்கள்.

***************************


குடும்ப புகைப்படம்


எல்லோரையும் துரோகித்துவிட்டு
ஓடிப்போகிறாள் தாய்
கைகளை தரையில் அடித்து
அழுகிறார் தந்தை
பின் எல்லா இரவுகளையும்
சீட்டாட்டத்தில் கழிக்கிறார்
தந்தையைத்தேடி குழந்தை
சூதாட்ட விடுதியின் கதவைத் தட்டுகிறது

தமக்கை பசையை விழுங்குகிறாள்
கிழிந்த உள்ளாடையை புரட்டி அணிந்துக்கொண்டு
அடித்தளத்தில் குப்பைக்குவியலுக்கு அருகில்
தன் மணிக்கட்டை கத்தியால் அறுத்துக்கொள்கிறாள்

அக்குடும்பத்தின் மூன்று வயது குழந்தை
தட்டுத்தடுமாறி வளர்ந்து
தாயின் தந்தையின் தமக்கையின் செய்கைகளை
விரைவில் பற்றிக்கொள்கிறது

ஒவ்வொரு இரவிலும் நகரங்கள்
ஒன்றன்பின் ஒன்றாக வீழ்ச்சியடைகின்றன
மேலும் இன்று
ஒரு எண்ணெய் விளக்கின் முன்
நான்
திரியை துண்டு துண்டாக்குகின்றேன்

நன்றி : அகநாழிகை சமூக கலை இலக்கிய இதழ் - டிசம்பர் 2009

ஜனவரி 18, 2010 nathiyalai

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.