Saturday, July 30, 2011

Yi Yŏn-ju கவிதைகள்




தென்கொரியாவில் 1953 பிறந்த Yi Yŏn-ju வின் படைப்புகள் அந்நாட்டு பெண்கவிஞர்களின் படைப்புகளில் முக்கியமானதாக கருதப்படுகின்றது. பெரும்பாலான கவிதைகள் புறநகர்ப்பெண்களின் நிலையை பேசும் படைப்பாகவும் ஒடுக்கப்பட்ட பெண்களின் குரலாகவும் அமைந்துள்ளது. இவரின் முதல் கவிதைத் தொகுப்பு ‘A Night Market where there are Prostitutes’ 1991ல் வெளியானது. இரண்டாம் தொகுப்பான ‘Juda, a Lamb of Redemption’ 1993ல் இவரது தற்கொலைக்கு பிறகு வெளியானது. இவர் பல கலைகளில் தேர்ந்தவராக இருந்தார். இலக்கிய வட்டங்களில் மட்டுமல்லாது ஓவியர்கள், பாடகர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மத்தியிலும் நன்கு அறியப்பட்டார். இவரின் இரு கவிதைகள்……



மனநோய்


‘நிச்சயமாய் நான் எதுவுமே செய்யவில்லை’
என ஒரு பெண்மணி விம்மியழுதாள்

‘தொழிற்சாலையின் அருகிலும் செல்லவில்லை
ஒருமுறை கூட பேரணியில் பங்கேற்கவில்லை’
என கதறினாள்

‘யார்… ஏன் தீக்குளிந்து இறந்தார் என்றோ
கட்டிடத்தின் மேற்தளத்திலிருந்து குதித்தார் என்றோ
அறிந்துக்கொள்ளவும் எனக்கு விருப்பமில்லை’
என தலைமுடியை விரித்து புலம்பியழுதாள்

‘ஒரு விலங்கைப்போல்
வெறுமனே அமர்ந்திருப்பதைத் தவிர
வேறு எதுவுமே நான் செய்யவில்லை

என்னை யார் இங்கழைத்து வந்தது?
எதற்காக அடைப்பட்டிருக்கின்றேன்?

என் கருவறை ஒரு துருபிடித்த இரும்புத்துண்டு
தீக்குளிக்க ஒரு மகனையோ அல்லது
போராட்டம் நடத்த ஒரு மகளையோ
கூட என்னால் பிரசவிக்க இயலாது’
என நிலைகுலைந்து தரையை உரசினாள்

மருத்துவர் வந்து சென்றார்
ஒரு வார்த்தை கூட உரைக்காமல்

செவிலி வந்து அவளை அறைந்தாள்
பின் வெளியேறினாள்
படாரென கதவு மூடப்பட்டது

‘நிச்சயமாய் நான் எதுவுமே செய்யவில்லை’
என வாடிய அவள் முணுமுணுத்தாள்
மனநோய்ப்பிரிவின்
இரும்புக்கதவுகளை பற்றிக்கொண்டு

1970ல் ஏழைத்தொழிலாளிகள் சுரண்டப்படுவதை எதிர்த்து Chŏn T’ae-il, என்ற தொழிலாளி தீக்குளித்துக்கொண்டார். தென்கொரியாவில் இச்சம்பவம் நாடு முழுவதுமான தொழிலாளர் இயக்கத்தை முடுக்கிவிட்டது. காவலர்களையும் வாடகைக்கு குண்டர்களையும் கொண்டு அரசாங்கம் தொழிலாளிகளின் வேலைநிறுத்தப்போராட்டங்களை முறியடித்தது. சமயங்களில் நம்பிக்கையிழந்த தொழிலாளிகள் கட்டிடத்தின் மேற்தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டனர். இத்தனை வலுவான அடக்குமுறைகள் இருந்தும் 1970 – 1980 காலகட்டங்களில் பெண் தொழிலாளிகள் தனி இயக்கத்தை துவங்கினார்கள்.

***************************


குடும்ப புகைப்படம்


எல்லோரையும் துரோகித்துவிட்டு
ஓடிப்போகிறாள் தாய்
கைகளை தரையில் அடித்து
அழுகிறார் தந்தை
பின் எல்லா இரவுகளையும்
சீட்டாட்டத்தில் கழிக்கிறார்
தந்தையைத்தேடி குழந்தை
சூதாட்ட விடுதியின் கதவைத் தட்டுகிறது

தமக்கை பசையை விழுங்குகிறாள்
கிழிந்த உள்ளாடையை புரட்டி அணிந்துக்கொண்டு
அடித்தளத்தில் குப்பைக்குவியலுக்கு அருகில்
தன் மணிக்கட்டை கத்தியால் அறுத்துக்கொள்கிறாள்

அக்குடும்பத்தின் மூன்று வயது குழந்தை
தட்டுத்தடுமாறி வளர்ந்து
தாயின் தந்தையின் தமக்கையின் செய்கைகளை
விரைவில் பற்றிக்கொள்கிறது

ஒவ்வொரு இரவிலும் நகரங்கள்
ஒன்றன்பின் ஒன்றாக வீழ்ச்சியடைகின்றன
மேலும் இன்று
ஒரு எண்ணெய் விளக்கின் முன்
நான்
திரியை துண்டு துண்டாக்குகின்றேன்

நன்றி : அகநாழிகை சமூக கலை இலக்கிய இதழ் - டிசம்பர் 2009

ஜனவரி 18, 2010 nathiyalai

Friday, July 29, 2011

பெருந்தோட்டப் பெண்களும் பெண்ணிய கருத்துகளும்


(நன்றி படம் சூரியா சிறிதரனின் அல்பத்திலிருந்து)

மலையக வரலாற்றுப் பார்வையில் சமூக இருப்பிற்காய் வாழ்ந்து மறைந்த பெண்ணியல் சிந்தனையாளர்களில் கோ நடேசய்யரின் பாரியாரான மீனாட்சியம்மாள் என்றென்றும் நன்றியோடு நினைத்துப்பார்க்கப்பட வேண்டியவராவார் சமூகமாற்றத்திற்காய் வர்க்கப் போராட்டத்தின் தத்துவார்த்தங்களுடன் பெண் விடுதலை நோக்கிய நகர்வுகளை மலையக பெண்கள் மத்தியில் பரவ செய்த சாத்வீகப் பெண் போராளி மீனாட்சியம்மாள் என்றால் மிகையாகாது.

இதனைத் தொடர்ந்து பல பெண் படைப்பாளிகள் தங்களின் இலக்கியங்களினூடாக பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரான பல நகர்வுகளை செய்துள்ளனர் மலையகத்தில் இருந்து பெண்ணியல் சார்ந்த கவிதைகள் சிறுகதைகள் கட்டுரைகள் சிலவும் வந்திருந்த போதிலும் ஒரு முழுமையான இலக்கியப்படைப்போ ஆய்வு நூலோ வெளிவராமை பெரும் குறையாகவே காணப்படுகின்றது.

பெண் படைப்பாளிகள் பலர் தங்களின் படைப்புகளில் விடுதலை பேசியதுடன் தங்களின் விடுதலை வேட்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு பெண்ணியல் சிந்தனைகளில் இருந்து நகர்ந்து குடும்ப சுமை சுமக்கும் சுமைத்தாங்கிகளாகி விட்டனர். அவர்களின் படைப்புக்கள் பயனற்றதாகி போய் வெறுமனே தாள்களில் பதியப்பட்ட எழுத்துக்களாக மாத்திரமே முடங்கி விட்டது. .மீனாடசியம்மாள் தனது படைப்பகளுடன் மக்களிடம் சென்று மக்களுக்காக இயங்கியதன் காரணத்தினாலேயே அவரின் பெயர் வரலாற்றில் பேசப்படுகின்றது என்பது படைப்பாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும்;.


மலையகத்தைப் பொறுத்த மட்டில் பல அரச சார்பற்ற நிறுவனங்கள் பெண்ணியல் கருத்துக்கள் தொடர்பான சில பத்திரிகைகளையும் செய்திக்கடிதங்களையும் வெளியிட்டு இருக்கின்றன சில மனித உரிமை அமைப்புக்கள் சில சஞ்சிகைகளையும் வெளிக் கொண்டு வந்திருப்புதுவும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இவை எந்த அளவிற்கு மலையக பெண்களின் வாழ்வியல் மாற்றத்திற்கும் விடுதலைக்கும் உந்து சக்தியாய் அமைந்தன என்பது ஆய்விற்குட்படுத்தப்பட வேண்டிய விடயமே.

குறிப்பிட்ட அரச சார்பற்ற நிறுவனங்களில் பெண் செயற்பாட்டாளர்கள் எந்த அளவிற்கு பெண்ணியம் தொடர்பான கருத்தியல்களை உள்வாங்கியுள்ளார்கள் என்பதுவும் இவர்களுக்கு பயிற்சி வழங்கும் பயிற்றுவிப்பாளர்கள் பெண்ணியல் கருத்துக்களை எந்த அடிப்படையில் வழங்கியுள்ளனர் என்பதுவும் பல சந்தேகங்களை ஏற்படுத்தி வருகின்றது அது மட்டும் இன்றி மலையக பெண்களின் வளர்ச்சிக்கென பெறப்பட்ட பல கோடி ரூபாய் பணமும் மலையகத்தில் சரியாக பயன் படுத்தப் பட்டிருந்தால் மலையகப் பெண்கள் மத்தியில் கலைக் கலாச்சாரப் பண்பாட்டு பொருளாதார வளர்ச்சி ஓரளவேனும் உணரக்கூடியதாய் இருந்திருக்க வேண்டும்.

பெண்களுக்காய் சேவை செய்கின்றோம் என்று கூறும் சில அமைப்புக்கள் சேமிப்புத்திட்டங்கள் சிறுகுழுக்கள் கடனுதவிகள் என்று திட்டங்களை செய்த போதிலும் அவை மலையகப் பெண்களின் அடிப்படைவ வாழ்வியல் மாற்றங்களுக்கு எந்த அளவு துணை நிற்கின்றன என்பது விமர்சனத்திற்குரிய விடயமாகும் மலையகத்தில் காணப்படும் பல அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைமைப்பீடம் ஆணாதிக்க சிந்தனையாளர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதுவும் குறிப்பிடத்தக்கது.

மலையகத் தொழிற்சங்கங்கள் வாக்குகளுக்காகவும் மாதாந்த சந்தா பணத்திற்காகவும் மாதர்சங்கங்களை வைத்திருப்பதுடன் உழைக்கும் பெண்களுக்கு சமமான அரசியல் பிரதி நிதித்துவத்தினை வழங்குவதற்குரிய மனப்பாங்கற்றவர்களாக காணப்படுகின்றனர் மலையகத் தொழிற்சங்கங்களுக்கு அதிக விசுவாசமானவர்களும் பெண்களே தொழிற்சங்கங்களுக்கு கிடைக்கும் சந்தா பணத்தில் கிட்டத்தட்ட 78 வீதம் பெண்கள் வழங்கும் சந்தாவாகவே உள்ளது இந்த நிலையில் பல தொழிற்சங்கங்களில் இருக்கும் ஓரிரண்டு பெண் பிரதி நிதிகளும் படு பிற்போக்கான அடிமை சிந்தனைக் கொண்டவர்களாகவும் உழைக்கும் பெண்களை ஆணாதிக்கவாதத்தின் கோரப்பற்களுக்கு இரையாக்கும் கைங்கரியத்தினை செவ்வனே செய்து வருபவர்களாகவுமே பெரும்பாலும் காணப்படுவது கவலைக்குரிய விடயமாகும்.

இந்த குறிப்பிட்ட பெண்களும் அடிமைசிந்தனையில் மூழ்கிப் போயிருப்பதுடன் தொழிற்சங்கங்களில் இருந்து வெளியேறியதும் எந்த வித சமூகப்பாதுகாப்பும் இல்லாமல் பலிவாங்கப்படுவதும் கேவலப்படுத்தப்படுவதும் பொதுவாக காணப்படும் விடயமாகும்.மலையக தொழிற்சங்கங்களின் சில முக்கிய பிரமுகர்கள் சிறுமிகளை தலைநகர பணக்காரர்களின் வீடுகளில் வேலைக்கு சேர்க்கும் கீழ்த்தரமான செயலையும் செய்து வருகின்றனர்.

பெண் விடுதலைப்பற்றி புரட்சிகரமாக பேசும் சில அரசியல் அமைப்புகள் பெண்கள் தொடர்பான அதிகாரத்தினை பெண்களுக்கு வழங்காமல் ஆண்களே கையில் வைத்துக் கொண்டு ஆணைப்பிறப்பிப்பவர்களாக செயற்பட்டு வருவதும் கண்டனத்துக்குரிய விடயமாகும் பெண்களின் ஆளுமை மீது நம்பிக்கையில்லாத ஆணாதிக்க சிந்தனையாளர்களால் உண்மையான பெண் விடுதலையை நோக்கிய நகர்வினை என்றுமே செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும.;

மத்தியத்தரவர்க்கப் பெண்களும் பெண்ணியவாத கருத்துக்களும் தொடர்பாக நோக்குமிடத்து தங்களை அனைத்து புறத்தாக்கங்களிளிருந்தும் பாதுகாத்துக் கொண்டு கௌரவத்திற்காக மாத்திரம் புரட்சி பேசும் பெண்ணிய வாதிகளாகவே காணப்படுகின்றனர் இவர்களே அதிகமாக பெண்கள் தொடர்பான அமைப்புகளை வைத்து நடத்துபவர்களும் உழைக்கும் வர்க்கப் பெண்களை உண்மையான போராட்டப்பாதையிலிருந்து நகர்த்தி ஆண்களுக்கு எதிரான கருத்து மாத்திரமே பெண் விடுதலை என்னும் மாயையை விதைக்கும் பின்நவீனவியலாளர்களாகவும் பணத்தை மையமாகக் கொண்டு பெண்ணியம் பேசி வருபவர்களாகவும் இருக்கின்றனர்.

இந்த மத்தியத்தரவர்க்கப் பெண்ணியவாதிகள் சாதி சமய மூடத்தனமான கலாச்சாரப்பண்புகள் பிற்போக்கு பண்பாடு என்பவற்றில் மூழ்கி போனவர்களாக தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் வாழ்ந்து வருபவர்களாகவும் காணப்படுவதுடன் மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையையப் பற்றியும் உழைக்கும் பெண்கள் பற்றியும் மோசமான விமர்சனங்களை முன் வைத்தும் வருகின்றனர் பொருளாதார பின்னடைவுகள் தொடர்பாக எதுவித தர்க்க ரீதியான ஆய்வுகளையும் செய்யாது விமர்சித்து வருபவர்களாகவும் காணப்படுகின்றனர்

தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கத்தயங்கும் இவர்கள் சேலைக்கேற்ற ரவிக்கை அணியாதது பற்றியும் கிழிந்த சேலையைப்பற்றி ரொட்டியைய்ப்பற்றியும் பேசுபவர்களாகவும் தங்களின் நாகரீக பாங்கினை பிரச்சாரம் செய்பவர்களாகவும் காணப்படுகின்றனர் தொழிற்சங்கங்களுக்கும் அரசாங்கத்திற்கும் மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக சிறிய அழுத்தத்தைக் கூட கொடுக்க முடியாத இவ்வமைப்புக்கள் போசாக்கின்மைப்பற்றியும் மதுபாவனைப்பற்றியும் பற்றியும் ஆணுக்கு எதிராக பெண்ணை தூண்டி விடும் செயற்பாடுகளையும் செய்வதில் எந்தப் பயனும் இல்லை.

மலையகப் பெண்களின் போராட்ட குணாம்சம் மலையக ஆண்களை விட மிக உயர்ந்ததாகவே காணப்படுகின்றது இதற்கு சிறந்த உதாரணமாக இலத்திரனியல் ஊடகங்களில் கருத்து கூறும் பெண்கள் சரியானதையும் உண்மையையும் எந்தத் அழுத்தங்களக்கும் பயப்படாமல் தாங்களாகவே முன் வந்து கூறுவதனை காணலாம் தங்கள் குறைப்பாடுகளை உலகிற்கு தெரிவிப்பதில் பெண்களே முதலிடம் வகிக்கின்றனர் மலையகப் பெண்களின் போராட்ட குணம் கலந்த சக்தி ஒன்றிணைக்கப்பட்டு மக்களின் தேவைக்காக குரல் கொடுக்க மாத்திரம் அல்ல சுயமாய் சிந்திக்கவும் போராடவும் தயார்ப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.


நன்றி ஊடறு
Friday, March 4, 2011 @ 6:40 PM
By - சை.கிங்ஸ்லி கோமஸ்

பெண்களை அடிமைகளாகவே இருக்க வலியுறுத்தும் புலவர்கள்




மனிதன் ஆக்க வேலைக்குப் பயன்பட வேண்டியவன். மனிதன் பகுத்தறிவு பெற்றிருப்பது, உலகிலுள்ள மனித சமுதாயத்தின் ஆக்கத்திற்குப் பாடுபடவேயாகும். ஆக்க வேலையென்றால் பண்பட்ட நிலமாக இருந்தால் அதனைப் பயன்படுத்தி வாழலாம்.

ஆனால், முள்ளும் புதரும் நிறைந்த காடு போன்ற நிலத்தில் உள்ள முட்கள், புதர்களை ஒழித்து நிலத்தைப் பண்படுத்தி, அதன்பின் பயன்படுத்த வேண்டி இருக்கின்றது. அதுபோன்று நம் மனிதர்கள் மனதில் நிறைந்திருக்கின்ற முட்டாள்தனம், மூடநம்பிக்கை, மடமை, அறிவற்றத் தன்மை ஆகிய முட்களையும், புதர்களையும் அழித்து ஒழித்துப் பண்படுத்தி மனிதனை அறிவுப் பாதையில் செலுத்த வேண்டியவர்களாக இருப்பதால் இப்போது நாம் மனிதனிடமிருக்கும் மடமை, முட்டாள்தனம், மூட நம்பிக்கைகளை அழிக்கும் அழிவு வேலையில் ஈடுபட்டிருக்கிறோம்.

ஒருவன் தனக்கிருக்கிற பழைய காரை வீட்டை மாற்றி, வில்லை வீடாக்க வேண்டுமானால், பழைய வீட்டை இடித்து ஒழித்துவிட்டு அஸ்திவாரத்தையே மாற்றியமைக்க வேண்டும். இதைச் செய்யாமல் மாடி வீடு கட்டுவது என்பது இயலாது என்பதோடு, கூரை வீட்டிலுள்ள சாமான்கள் எதுவும் மாடி வீட்டிற்குப் பயன்படுத்த முடியாது.

அதுபோன்ற கூரை வீட்டை அழித்து மாடி வீடு கட்டும் காரியத்தில் தான் நாம் இறங்கி இருக்கின்றோம். மனிதனின் அறிவுக் கேட்டுக்கு, வளர்ச்சிக் கேட்டிற்குக் காரணமான பழமையை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றோம். ஆனதால் நம்மிடமிருக்கின்ற பழமைகள் அத்தனையையும் மாற்றியமைப்பதில் ஒன்றாகத்தான் இத்திருமண முறையையும் மாற்றியமைத்திருக்கின்றோம். பொதுவாக ஒரு ஜீவன், தன் உணர்ச்சிக்காகவும் இனவிருத்திக்காகவும் ஒன்றோடு ஒன்று கூடியதே ஒழிய, இரண்டும் கூடி வாழ்ந்தது என்பது கிடையாது.

மனிதனும் முன்பு அப்படித்தான் வாழ்ந்திருக்கின்றான். கணவன் மனைவியாகக் கூடி வாழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது. இச்சைப்பட்ட போது ஒருவருடன் ஒருவர் கூடி பிரிந்தார்களே ஒழிய, குடும்பம், இல்லறம், கணவன், மனைவி என்று வாழ்ந்தார்கள் என்பது கிடையாது. இவையெல்லாம் இடைக்காலத்தில் அதுவும் மற்றவர்களால் நம்மிடையே புகுத்தப்பட்டவையே ஆகும். கல்யாணம் ஆனால் அதோடு பெண்களின் தனி உரிமை (இண்டிவிஜுவலிசம்) ஒழிக்கப்பட்டு விடுகின்றது.

ஒருவன் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டால், அவள் சாகிற வரை அவனோடேயே வாழ்ந்து தீர வேண்டுமென்றிருக்கின்றது. இடைக் காலத்தில் தான் அதுவும் தங்களை உயர்ந்த ஜாதி என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களிடையே ஒருவன் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டால், அவள் தன் உயிர் போகிறவரை அவனுடன் இருந்து தீர வேண்டும். கணவன் அவளுக்கு முன் இறந்து விட்டால், கடைசி வரை விதவையாக வேறு எவனையும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டியது என்பது முறையாகிவிட்டது.

இப்படிப் பெண்கள் சமுதாயத்தை எதற்கும் பயன்படாமல், தங்களின் அடிமைகளாக உரிமைப் பொருளாக ஆக்கிக் கொண்டு விட்டனர். நம் புலவர்கள் என்பவர்கள் மூட நம்பிக்கையைப் பரப்புகின்றவர்களாக இருக்கின்றார்களே தவிர, புதுமையைப் பரப்பக் கூடியவர்களாக இல்லை. நம் புலவர்கள் எல்லாம் குறையில்லாமல் ஏற்றுக் கொள்ளக்கூடிய பெரும் அறிவாளி புலவர் வள்ளுவர்.

அவர் முதற்கொண்டு அத்தனைப் புலவர்களும் பெண்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்துகின்றவர்களாக இருக்கின்றார்களே ஒழிய, ஒருவன் கூட பெண்கள் உரிமையோடு, சுதந்திரத்தோடு, சமத்துவத்தோடு வாழ வேண்டுமென்று சொல்லவில்லை. இந்த வள்ளுவர் தான் பெண் தன் கணவனைத் தொழ வேண்டுமென்று சொல்லியிருக்கின்றார்.

வள்ளுவன் பெண்களைத் தான் கற்போடிருக்க வேண்டுமென்று சொன்னாரே தவிர, ஆண்கள் இப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று சொல்லவில்லை என்று ஒரு திருமணத்தில் இதுபோன்று குறிப்பிட்டேன். அந்தத் திருமணத்தில் திருக்குறள் முனுசாமி அவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். நான் அவரிடம், “சொன்னது தவறாகக் கூட இருக்கலாம். வள்ளுவர் ஆண்கள் கற்போடு இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டினால், நான் எனது தவறை மாற்றிக் கொள்கிறேன்” என்று சொன்னேன்.

அதற்கு அவர் “திருக்குறளிலிருந்து “பிறன் இல்விழையாமை” என்ற அதிகாரத்தைக் காட்டி, “வள்ளுவர் ஆண்களுக்கும் அறிவுரை கூறி இருக்கிறார்” என்று சொன்னார். நான் உடனே, “பிறன் மனைவியிடம் போக வேண்டாமென்று சொன்னாரே ஒழிய, கல்யாணம் ஆகாத பெண்களிடமோ, கணவன் இல்லாத பெண்களிடமோ போகக்கூடாது என்று சொல்லவில்லையே. கல்யாணம் ஆன பெண் இன்னொருவனுடைய சொத்து என்பதால், பிறர் சொத்தைத் திருடக் கூடாது என்று சொல்லியிருக்கிறாரே தவிர, மற்றப்படி பெண்களுக்குச் சொன்னது போல எந்த ஆணிடமும் செல்லக்கூடாது என்று சொல்லவில்லையே” என்று சொன்னதும் அவரால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை.


பெரியார்-
18.5.1969 அன்று இரும்புலிக்குறிச்சியில் நடைபெற்ற திருமணத்தில் ஆற்றிய உரை