Monday, July 16, 2012
மதம் என்ற குருட்டுப் பூனையும் , பெண் உடலும், கொற்றவை
படச்சுருளில் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கம் என்ற எனது கட்டுரைக்கு இருவிதமான கருத்துக்கள் பகிரப்படுகிறது. துரதிஷ்டவசமாக இரண்டுமே மதவாதமாக இருக்கிறதே ஒழிய பெண் உடல் சுரண்டப்படுவது குறித்த கண்டனங்களையோ அல்லது அதை மாற்றுவதற்கான தீர்மானங்களாகவோ இல்லை. இசுலாமிய பின்னூட்டம் “இதனால் தானே இசுலாம் உடம்பை மூட சொல்கிறது, புர்க்காவை அணியச் சொல்கிறது”...”முதலில் மேலாடை வேண்டி சுதந்திர போராட்டம், இப்போது ஆடையே வேண்டாம் என்று போராட்டம்...சுதந்திரம் என்றால் என்ன தெரியுமா...” என்பது
இந்துத்துவ பின்னூட்டம் ”கட்டுரையின் மையப்பொருள் பெண்களை நுகர்வு பொருளாய் பார்ப்பதை பற்றி பேசுகிறது, ஆனால் கட்டுரையின் இறுதியில் இஸ்லாமிய கிராமத்தை பற்றி சொல்லியிருக்கிறீர்கள், பெண்களை போகப்பொருளாய் பார்ப்பதற்கு மாற்றாய் பெண்களை புர்காவில் அடைத்து வைக்க சொல்கிறது இஸ்லாம் இதை பற்றி கட்டுரையில் சொல்லமால் விட்டுவிட்டீர்களே? புர்கா பற்றிய உங்கள் பார்வையையும் அறிய விரும்புகிறேன்”
எல்லா மதமும் பெண்களை ஆணாதிக்கக் கோட்பாட்டுக்குள் அடைத்துத்தான் வைத்திருக்கிறது, புர்க்கா என்பது வெறும் பௌதிக குறியீடு அவ்வளவுதான். எனது கட்டுரைகள் எந்த மதம் மேன்மையானது என்று பேசும் பொருட்டு எழுதப்படவில்லை, ஏனென்றால் மதங்கள் வேற்றுமையை வளர்த்து ஒடுக்குமுறையை ஏவ பயன்படுகிறதே ஒழிய சமத்துவத்தை நடைமுறைபடுத்த அவை உதவவில்லை. கடவுள் பற்றாளர்கள் தங்கள் மதத்தில் உள்ள நன்மைகளைப் பின்பற்றும் பொழுது, மற்ற கடவுள் போதனைகளையும் பின்பற்றுவதில் ஏன் தயக்கம் கொள்கின்றனர்? ஏன் ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு முறையால், சடங்குகளால், குறிப்பிட்ட பூசாரிகள் மூலம் மட்டுமே கடவுளை அடைய முடியும் என்று நம்புகின்றனர். கடவுள் ஒருவனே அவன் சிவனே, விஷ்னுவே, ஏசுவே, அல்லாவே, யெகோவாவே என்று சொல்லும் நபர்கள் ஏன் இவர்கள் அணைவரையுமே கடவுளாக ஏற்றுக்கொண்டு, எல்லா மதங்களின் வழிபாட்டு முறையையும் பின்பற்ற தயங்குகின்றனர். எல்லா பிரார்த்தனை முறைகளையும் பின்பற்றினால் ஒருவேளை கடவுளை எளிதில் சென்றடைந்துவிடலாமே. ஒரு கடவுளே எல்லோரையும் படைத்திருந்தால் ஏன் ஒவ்வொரு இனமும், கூட்டமும் தங்களுக்கான கடவுள்களை தனித்தனியே பிரித்து மோதிக்கொள்ளும் பொழுது தன்னை வெளிக்காட்டிக் கொண்டு தான் ஒருவனே, தனக்காக எல்லோரும் அடித்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்லவதில்லை...ஏன் எல்லா இறைத் தூதர்களும் ஆண்களாகவே இருக்கின்றனர். பிறப்புக்கு பெண் காரணமாயிருந்தாலும் அவளது கரு மட்டும் தெய்வீகத்தன்மையினால் உருவாகியது என்று பிதற்றும் மதவாதிகள் பெற்றெடுத்த அன்னையை ஓரம் கட்டிவிட்டு அவளுக்குப் பிறந்த ஆண்மகனை, அல்லது அவளது கணவனை மட்டும் மூலக் கடவுளாக வழிபடச் சொல்வது ஏன்?
தாய் தெய்வங்களை, தாய்வழிச் சமூகத்தை குலைத்து ‘லிங்க வழிப்பாட்டை (ஆண் தெய்வ) நிறுவுவதற்கு, சமூக அதிகாரத்தை, பொருளாதார அதிகாரத்தைக் கைபற்ற ஆண்கள் உருவாக்கியதே ‘ஒரு கடவுட் கோட்பாடு, ஆண் இறைத்தூதர் கோட்பாடு’. //யூத மதம், பௌத்தம், கன்பூசிய மதம், கிறித்தவ மதம் மற்றும் இஸ்லாம் ஆகிய ஐந்து பிரதான நம்பிக்கை அமைப்புகள் ஒவ்வொறும் அதனதன் வழியிலேயே, தமது இயல்பினாலேயே பெண்களின் தாழ்ந்த நிலைமையை வலியுறுத்தி, ஆண்களின் மேலாதிக்கத்தை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட மதிப்புகள் மற்றும் ஆணைகளுக்கு அவர்கள் கீழ்படியவேண்டுமென்று கோரின//
பெண்ணின் உற்பத்தி திறன் மீதிருந்த பொறாமையினால் பெண்ணின் உடற்பாகங்கள் பற்றிய அருவருப்பான, தாழ்வான கருத்துக்களை உடல் மீது ஏற்றிவைத்து பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமைகளை சார்ப்புத் தன்மையை உறுவாக்கியதற்கு உதவியதே மதக் கோட்பாடுகள். //பெண்ணினது உடம்பில் எந்த பாகமும் ஏதாவது ஒரு வழியில் பீதி, அச்சம், கோபம் அல்லது ஆழமான பயத்தை தோற்றுவிக்காமலிருக்கவில்லை//.
பெண்ணின் தலைமுடி உட்பட சிற்றின்ப வேட்கையை தூண்டிவிடமுடியும் எனும் மதக் கோட்பாடே புர்க்காவை அணிந்து கொள்வதற்கான அடிப்படை, அதாவது பெண் உடல் பாலுறுவுக்கு அழைப்புவிடக்கூடியது என்று பெண்ணை தன் உடலை புர்க்கா போட்டு மூடச் சொல்கிறது. பெண் உடல் பாவத்தின் சின்னம் என்று மநு ஸ்மிருதி ஒரு விதமாக சொல்கிறது, குரான் வேறு விதமாக சொல்கிறது, பைபிள் வேறுவிதமாக சொல்கிறது அவ்வளவுதான். “கன்னிகள் பூப்படைவதுதான் தேவதூதர்களின் வீழ்ச்சிக்கு காரணம்” என்று டெர்ர்டுலின் எனும் கிறத்தவ பாதிரியார் சொல்லியிருக்கிறார். “ஒரு பெண் குளியலறைக்குச் செல்லும் போதெல்லாம் சைத்தான் அவளுடனிருக்கிறான் அவளது உடம்பு சைத்தானின் விளையாட்டரங்கம்” என்று முகம்மது அறிவித்தார். ஆண்களின் உடம்பு பற்றி, மனம் பற்றி ஏன் இத்தகைய கருத்தாக்கங்கள் இல்லை.
ஒரு பெண் நபி கூட இல்லாமல் இருக்கும் வரலாற்று சூழலில், இஸ்லாமிலும் பெண் தெய்வம் இருந்திருக்கிறாள் என்பதை சர் ரிச்சர் பர்ட்டன் விவரிக்கிறார்:
“அரேபியாவின் ஆற்றல் மிக்க முத்தொகுதி தேவதையின் ஓர் அம்சமான அல்-உஸ்ஸா மெக்காவில் காபா என்ற ஸ்தலத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருக்கிறாள். அங்குப் பண்டைக் காலப் பெண் மதக்குருக்கள் அவளுக்கு சேவை செய்தனர். அவள் விசேஷ தெய்வமும், பெண்களின் பாதுகாவலனும் ஆவாள். இன்றும் அந்த காபா இருந்து வருகிறது. இஸ்லாம் சமயத்தின் மிகவும் புனித ஸ்தலமாகக் கருதப்படுகிறது.
ஆற்றல் மிக்க அம்மனின் பெண்குருக்கள் அப்புறப்படுட்தப்பட்டு அந்த இடத்தை ஆண் குருக்கள் கைப்பற்றிக் கொண்டனர்.
அதேவேளை பெண்களை பள்ளிவாசலுக்குள் அனுமதிக்க மறுக்கிறது, சில இஸ்லாமிய நாடுகளில் பெண் உறுப்புக்கு சுன்னத் என்ற பெயரில் கிளிட்டோரிஸை அறுத்தெரியப்படுகிறது, சிறு துவாரத்தை மட்டும் விட்டு பாலியல் உறுப்பை தைத்து விடப்படுகிறது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது பெண் புணர்ச்சியில் உச்ச நிலையை உணரக்கூடாது என்பதுதான். பெண் உடல் பலகீனமானது, பாதுகாப்புத் தேவை என்று சதா ஓதிக்கொண்டேயிருக்கும் ஆண் பலசாலிகள் ஆரம்பக்கால இஸ்லாமியப் பெண்கள் ஆயுதமேந்தி ஆண்களோடு சேர்ந்து நின்று கடுமையான போர்களில் ஈடுபட்டுள்ளனர் எனபதை அறிந்திருக்கின்றனரா என்று தெரியவில்லை . ஒரு கௌரவிக்கப்பட்ட வீராங்கனையும் போர்த் தலைவியுமான சலாயம் பிண்ட் மல்ஹான், கர்ப்பம் தரித்துள்ள தனது வயிற்றைச் சுற்றிலும் உடைவாள்களையும், குத்தீட்டிகளையும் கட்டிக் கொண்டு முகம்மதுவுடனும் அவரைப் பின்பற்றுபவர்களுடனும் சேர்ந்து அக்கம்பக்கமாக நின்று போர் செய்திருக்கிறாள். மற்றொரு பெண், பைஸாண்டியர்களுக்கெதிரான கடுமையான போராட்டத்தில் போரின் நிலவரத்தைச் சாதகமாக மாற்றியிருக்கிறாள். அப்பொழுது ஓர் உயரமான குதிரை வீரன் முகத்தையும் கழுத்தையும் கறுப்புத் துணியால் மூடிக் கொண்டு, தள்ளாடிக் கொண்டிருந்த இஸ்லாமியப் படைகளை ஒன்று திரட்டி உற்சாகப்படுத்தி அசகாய வீரட்துடன் போராடியிருக்கிறான். அந்த வெற்றிக்குப் பின்னர், காவ்லாபிண்ட் – அல்-அஸ்வார் அல்-கிண்டிய்யா என்ற அரபு இளவரசிதான் அந்த ‘குதிரை வீரன்’ என்று தயக்கத்துடன் தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள்”//
//மற்றொரு இஸ்லாமியப் பெண் வீராங்கனை தன்னுடைய உடைவாளைப் போன்றே நாவன்மையுடையவள், புகழ்பெற்ற ‘ஆயிஷா ஆவாள், நபிகளின் மனைவிகளில் ஒருவர். நல்லொழுக்கமுடைய இஸ்லாமிய மனைவிகள் உட்படுகிற அடிமைத்தனத்திற்கு எதிராக வீரமான மதி நுட்பத்துடன் போராடியவள் என்று ஆயிஷா புகழ்பெற்றாள். முகம்மதுவையே எதிர்ப்பதற்கும் திருத்துவதற்கும் அவள் தயக்கம் காட்டவில்லை.....இதனால் முகம்மதுவே தன்னைப் பின்பற்றுபவர்களிடம் ‘உங்களுடைய பாதி சமயஞானத்தை இந்த சிவந்தமுகமுடைய பெண்ணிடமிருந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஆணையிட்டார்”//
பெண்கள் பற்றிய மதிப்பீட்டில் சில ஆணாதிக்க கருத்துக்களை நபிகள் வெளிப்படுத்தியிருந்தாலும் நபிகள் பெண்களை நேசிக்கச் சொன்னார், தனக்கு சமமாக கருதச் சொன்னார். (ஏசுவும், புத்தரும் கூட). நபிகள் சொன்ன அணைத்தும் அப்படியே பின்பற்றப்படுகின்றனவா என்பது முதல் கேள்வி, குறிப்பாக சொத்து சேர்க்கும் வழிமுறையில்? பெண்களிடமிருந்து பாதி சமயஞானத்தைப் பெற சொல்கிறார் நபி, அப்படி ஒரு பெண் சமயஞானத்தை முழுக்க முழுக்க பெண்ணிய நோக்கில் பெண்களை முதன்மை படுத்தி ஆணாதிக்க தாக்கமின்றி, பெண்களுக்கு சமத்துவத்தை வலியுறுத்தி போதித்தால் ஆண்கள் அதை பின்பற்றத் தயாராக இருக்கின்றனறா. அப்படி ஒரு பெண் ஆண்களுக்கு பாதுகாப்புக் கருதி புர்க்கா அணியச் சொன்னால் அணிந்து கொள்ள உடன்படுவரா?
பெண்களுக்கு திருமணத்தின் போது கொடுக்கவேண்டிய மஹர் என்பதை சில ஆண்கள் தங்கள் சௌகரியத்திற்கு மாற்றிக் கொண்டு அவளுக்கு அநீதி இழைப்பது, தலாக் சொல்வதை சாதகமாக்க்கிக் கொண்டு நஷ்டஈடு வழங்காமல் விடுவது பற்றிய வழக்குகள் நீதி மன்றத்திற்கு சென்றிருக்கின்றன. வேறு திருமணம் செய்து கொள்வதற்காக பெண்களை இப்படி கைவிடச் சொல்லி நபிகள் கற்றுக் கொடுத்திருக்கமாட்டார் என்றே நம்புகிறேன்.
ஆண்களின் கைப்பாவைகளாக சுதந்திரம் பற்றியப் தவறான புரிதலினால் மீண்டும் ஆண்களுக்கே இறையாகிறீர்கள் என்று சொன்னவுடன் பெண்ணின் உடல் விசயத்தில், கற்பு விசயத்தில் ஆண்கள் உருவாக்கிய மதக் கேடயத்தை பிடித்துக் கொண்டு வரும் மதப்பற்றாளர்கள், தங்கள் கடவுள்கள், இறைத் தூதர்கள் சொல்லவில்லையென்றாலும், தங்களது சுயசிந்தனையின் மூலம், மனசாட்சியை பயன்படுத்தி பெண்களின் சமத்துவத்திற்கு, சுதந்திரத்திற்கு, சுயமரியாதைக்கு அவசியமாகும் சிபாரிசுகளை, திருத்தங்களை மேற்கொள்வார்களானால் அல்லாவும், ஏசுவும், சிவனும், விஷ்ணுவும், மோசசும் செவிமடுக்க தயங்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். அப்படி அவர்கள் மறுப்பார்களேயானால் அவர்களையும் ஆணாதிக்கவாதிகள் என்றே கருதவேண்டியிருக்கிறது.
(இஸ்லாமிய நம்பிக்கையாளர்களின் பின்னூட்டங்களே அதிகமாக இருந்ததால் இஸ்லாம் பற்றிய குறிப்புக்கள் இதில் அதிகமாக இருக்கிறது. மேலும் இதில் பின்னூட்டமிட்ட அவர்கள் பெண்கள் சுதந்திரம் குறித்துப் பேசினாலே அது பாலியல் என்ற அடைவுக்குள்தான் கொண்டுவருகின்றனர். பெண்களை எச்சரிக்கும் விதமாக சில கட்டுப்பாடுகளை பரிந்துரைத்தால் உடனே தங்கள் மதப் பெருமைக்கு சாதகமாக அதைப்பயன்படுத்திக்கொள்ள விழைகின்ற்னர். பெண்களின் சுதந்திரம் மட்டுமல்ல இஸ்லாம்...குரான் ஆண்களுக்குச் சொன்ன அனைத்தையும் அவர்கள் பின்பற்றுகிறார்களா என்ற கேள்வியையும் இதனுடன் இணைக்கிறேன்.)
உதவிய நூல்: உலக வரலாற்றில் பெண்கள், ரோஸ்லிண்ட் மைல்ஸ்.
நன்றி- சாவின் உதடுகள்
Subscribe to:
Posts (Atom)