Sunday, August 28, 2011

பெண்பால் ஒவ்வாமை


பசுவுக்குப் பூஜை
பெண்சிசுவுக்கு கள்ளிப்பால்
தொல்காப்பியன் அறியாத
பால்வேற்றுமை
என்று 11 வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கவிதை இப்போது நினைவுக்கு வருகிறது. 26 ஜூன் 2011 ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான பெண்பால் அழித்தல், பால் மாற்று அறுவைச்சிகிக்சை என்ற அதிர்ச்சிதரும் செய்தியும் அச்செய்தி குறித்து வந்துக் கொண்டிருக்கும் எதிர்வினைகளும் மறுவினைகளும் மருத்துவ துறை மீது நமக்கிருக்கும் ஒரு சில நம்பிக்கைகளையும் கேள்விக்குட்படுத்துகிறது.

இந்தச் செய்தி தொடர்பான கள ஆய்வில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்கள் தரும் செய்திகள் ஒரு மாஃபிய கும்பலின் அதிகார வளையத்திற்குள் மருத்துவமும் சிக்கிக்கொண்டு விட்டதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

சொத்துடமை சமுதாயம் ஒவ்வொரு ஆணுக்கும் தன் உதிரத்தில் உதித்த வாரிசுகளுக்கு மட்டுமே சொத்துடமையாக வேண்டும் என்ற எண்ணத்தில் திருமண உறவு, பெண்ணுக்கு கற்பொழுக்கம் என்று சில சமூகக்கட்டுப்பாடுகளை ஏற்படுத்திய போதும் கூட பெண்பால் ஒவ்வாமை வளர்த்தெடுக்கப்படவில்லை.

போரில் ஆண்களை இழப்பதும் சிசு மரணங்களும் மிகவும் அதிகமாக இருந்தக் காலத்தில் ஒரு பெண் ஆண்குழந்தையைப் பெற்றெடுப்பது அவளுக்கான கட்டாயமாக மட்டுமல்ல சமூகத்தின் தேவையாகவும் இருந்திருக்க முடியும். அதிலும் குறிப்பாக அதிகார வர்க்கத்தில், அரச குடும்பங்களில் ஆண்வாரிசைப் பெற்றெடுக்கும் கட்டாயம் அரசிக்கு இருந்திருக்கும். இதுவே கூட அரசனின் மனைவியரின் அந்தஸ்த்தை நிர்ணயித்திருக்கும்.

பால் அழித்தல் என்பதும் பால் மாற்று அறுவைச்சிகிச்சையும் இக்கருத்துகளின் பின்புலத்தில் நடந்தேறி இருக்கின்றன. குறிப்பாக சீனத்தில் இப்பழக்கம் குறித்த வரலாற்று பதிவு கி.மு. 8ஆம் நூற்றாண்டுவரைப் பின்னோக்கிப் போகிறது. அதற்கும் முன்னரே இப்பழக்கம் வழக்கில் இருந்திருக்க வேண்டும் என்றே அப்பதிவு காட்டுகிறது. இவர்கள் நபுஞ்சகர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். ஆண்பால் அழித்தல்/ அறுவைச்சிகிக்கை மூலம் ஆண்பால் உறுப்புகளை அகற்றப்பட்டவர்கள் தான் நபுஞ்சகர்கள்.

தாய்மையடையக்கூடிய பெண்கள் இருக்கும் அரசனின் அரண்மனையில் வேறு எந்த ஆணுடைய விந்தும் விழுந்து எந்தப் பெண்ணின் கருமுட்டையிலும் கலந்து துளிர்த்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே நபுஞ்சகர்கள் உருவாக்கப்பட்டார்கள். அதையும் மீறி சிநேகங்கள் உருவான கதைகள் பல உண்டு. ஆனாலும் கரு உருவாக முடியாது என்பதால் அரசனின் வாரிசு தூய்மை பேணப்பட்டது எனலாம்.

மிங்க் முடியாட்சியில் மட்டும் 70,000 ஆண் குழந்தைகளுக்கு பால் அழிப்பை அறுவைச்சிகிச்சை மூலம் செய்திருக்கிறார்கள்! இந்த அறுவை நிபுணர்கள் அறுவைச்சிகிச்சையை பரம்பரை பரம்பரையாக குடும்பத்தொழிலாகவே செய்துவந்திருக்கிறார்கள். நரம்புகளை மரக்க வைக்கும் மூலிகைக் கஷாயங்கள் கொடுத்து உறுப்புகளை மிளகுக்கலந்த சுடுநீரால் கழுவுவார்களாம்.

ஆணுறுப்பை முழுக்க அறுத்தெறிவது ஒரு வகை, பீஜக்கொட்டை மட்டும் அகற்றப்படுவது இன்னொரு வகை என்று இரண்டு வகையான அறுவைச்சிகிச்சை முறைகள் நடைமுறையில் இருந்திருக்கின்றன. இந்த அறுவையின் போது நிறையபேர் இறந்தும் போயிருக்கிறார்கள். இதெல்லாமே ஆண் தன் சொத்துடமைக்கு வாரிசாக தன் உதிர வழி வாரிசு மட்டுமே இருந்தாக வேண்டும் என்ற எண்ணத்தின் உச்சக்கட்டம்! அரண்மனையில் மற்ற வேலைகள் செய்ய ஆண்களும் வேண்டும் அதே நேரத்தில் எங்காவது அந்த இருட்டில் ஏதாவது நடந்துவிடுமோ என்ற அச்சத்தின் விளைவு தான் ஆண்பால் அழித்த நபுஞ்சர்களின் வரலாறு. 19 ஆம் நூற்றாண்டில் சீனத்தில் போய் வசித்த ஆங்கிலேயர் மூலம் தான் வெளியுலகுக்கு சீனாவின் இந்த வழக்கம் தெரியவந்தது.

ஆண்பால் அழிப்பு அன்று நடந்ததற்கு எப்படி சொத்துடமை வாரிசுடமை காரணமாக இருந்ததோ அதன் இன்னொரு பக்கம் தான் பெண் சிசுக்கொலை, பெண்கருவை அழித்தல், அண்மையில் கழிவோடையில் கண்டெடுக்கப்பட்ட பெண்கரு அழிப்புக்குவியல்கள், இப்போது ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் பெண் குழந்தைகளை அறுவை மூலம் ஆண்குழந்தைகளாக மாற்றும் அசிங்கம், அருவெறுப்பு…
மத்திய பிரதேசத்தில் இந்தூரில் இதற்கெனவே புகழ்ப்பெற்ற 7 அறுவைச்சிகிச்சை நிபுணர்கள் இருக்கிறார்கள் .

ஓராண்டுக்கு இதுவரை 200 முதல் 300 வரை இம்மாதிரி அறுவைச்சிகிச்சைகள் நடந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக மும்பை, டில்லி போன்ற பெருநகரங்களிலிருந்து இதற்காக செல்லும் பெற்றோர்களின் எண்ணிக்கை 8 விழுக்காடு. இதற்காகும் செலவு 1.5 இலட்சம். ஒரு பெண் குழந்தையை வளர்த்து ஆளாக்கி திருமணத்திற்கு சீர்வரிசையாகக் கொட்டிக்கொடுக்கும் செலவுடன் ஒப்பிட்டால் இந்த அறுவைச்சிகிச்சைக்கு ஆகும் செலவு மிகவும் குறைவு என்றும் அந்தச் செய்தி பதிவு செய்துள்ளது.

இச்செய்தி வெளிவந்தவுடன் குழந்தைகள் நலன் காக்கும் பிரதமரின் அலுவலகம், இந்திய மருத்துவக் கழகம், மத்திய பிரதேசம் அனைத்தும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றன. பெண் குழந்தைகளை அறுவை மூலம் ஆணாக மாற்றும் போது அப்படி மாற்றப்பட்ட ஆண், ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியாது என்றும் சொல்லப்படுகிறது. இக்கருத்து இன்னொரு சந்தேகத்தையும் நமக்கு ஏற்படுத்துகிறது. பெற்றோர்கள் ஆண்வாரிசை விரும்புவதன் அடிப்படை நோக்கம் தன் வம்சாவளி விருத்தியும் அது தொடர வேண்டும் என்ற ஆசையிலும்தான்.

செயற்கை குழாய்வழி குழந்தை ஜனிக்கும் இன்றைய காலக்கட்டத்திலும் பெண் வழி வாரிசுகளை தங்கள் வாரிசுகளாக ஏற்றுக்கொள்ள அறிவார்ந்த சமூகமும் முன்வரவில்லை . எனவே பெண் குழந்தையை ஆண் குழந்தையாக்கி தங்கள் வாரிசுரிமையை நிலைநாட்டத்துடிக்கும் பெற்றோர்கள் அப்படி மாற்றப்பட்ட ஆண் வாரிசால் தன் வம்சம் தளைக்கும் வாய்ப்பில்லை என்றால் அவர்கள் இந்தப் பால் மாற்று அறுவைச்சிகிச்சையை செய்வார்களா? அவர்களின் நோக்கம் நிறைவேறாத போது இந்த அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் என்ன?

இந்தச் செய்திக்கு எதிர்வினையாக வைக்கப்பட்டிருக்கும் இக்கேள்வி மிகவும் கனமானது. மிகவும் யோசிக்க வைப்பதும் கூட.
மற்றபடி, பிறப்பிலேயே சில பெண் குழந்தைகளின் உடல் உறுப்பில் ஆண் குழந்தைகளின் அடையாளம் காணப்படுவதுண்டு.

(a child with abnormal or ambiguous genitals. A girl may be born with a noticeably large clitoris giving impression of a penis or lacking a vaginal opening. A boy may be born with a notably small penis or with a scrotum that is divided so that it looks like labia, a part of female sexual organ)

எனவே வளர்ந்தப் பின் அக்குழந்தைக்கு ஏற்படும் பால் வேற்றுமை குழப்பம் தீர்க்கவே பால் மாற்று அறுவைச்சிகிச்சைகள் (genitoplasty)நடக்கின்றன என்கிறார்கள்
பால்மாற்று அறுவைச்சிகிச்சையில் புகழ்பெற்ற இந்திய மருத்துவர் டாக்டர். எஸ்.வி. கோட்வால் “ஒரு குழந்தைக்கு இம்மாதிரியான பால்மாற்று அறுவைச்சிகிச்சை செய்வது சாத்தியமே இல்லை” என்று உறுதியாகச் சொல்கிறார்.

இக்கருத்துகளை எல்லாம் முன்வைத்து பார்க்கும் போது எனக்குச் சில ஐயப்பாடுகள் எழுகின்றன. குழந்தைகளுக்குச் செய்ய முடியுமா ? செய்ய முடியாதா? என்ற கேள்விகளை மருத்துவர்கள் பேசித்தீர்த்துக் கொள்ளட்டும்.
*இம்மாதிரி அறுவைச்சிகிச்சைக்கு தங்கள் பெண் குழந்தைகளை எடுத்துச் செல்லும் பெற்றோர்களின் குழந்தைகள் வரலாறு. ஒருவேளை அவர்களுக்கு வாரிசை வளர்த்தெடுக்க ஏற்கனவே ஆண்குழந்தை இருந்தால், நமக்கெதற்கு இந்தப் பெண் குழந்தையை வளர்க்க வேண்டிய சிக்கல்? என்று எண்ணி ஒன்றரை இலட்சத்தில் தங்கள் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள முன்வருகின்றார்களா? என்பதைக் கவனிக்க வேண்டும்.

* இந்த அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட குழந்தைகளுக்கெல்லாம் உடல் ரீதியான பால் உறுப்பு சம்பந்தமான குறைபாடுகள் இருந்தது என்பதற்கான சான்றுகள் இந்தூர் மருத்துவமனைகளில் இருக்கின்றனவா?
* ஓராண்டில் சற்றொப்ப 200 முதல் 300 அறுவைச் சிகிச்சை நடக்கிறது இந்தூரில் என்றும் புதுடில்லியில் இருக்கும் சர்.கங்காராம் மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு 2 முதல் 5 வரை இம்மாதிரியான குறைபாடுகளுக்கு அறுவைச்சிகிச்சை செய்யப்படுகிறது என்றும் செய்திகள் சொல்கின்றன. இந்தப் புள்ளிவிவரங்களின் வரலாறு என்ன? இக்குறைபாடு அண்மையில் அதிகரித்திருக்கிறதா? எந்தப் பகுதியில் வாழ்ந்த/பிறந்தக் குழந்தைகளுக்கு இக்குறைபாடு பொதுவாக அதிகமாக இருப்பதாக தெரிகிறது? இக்குறைபாட்டின் காரணம் என்ன? மூலம் என்ன? பரம்பரை வியாதியா?

சமூகத்தின் மீது அக்கறைக்கொண்ட ஒவ்வொருவருக்கும் இம்மாதிரியான ஆயிரம் கேள்விகள் எழுகின்றன. கத்தரிகாயிலிருந்து பூச்சி மருந்து வரை உலகக் கண்டு பிடிப்புகளின் சோதனைக்கூடாமாகி விட்டது இந்தியச்சந்தை. இப்போதெல்லாம் நம் மனித வளம் வெள்ளை எலிகளுக்கு மாற்றாக மாற்றப்பட்டிருக்கிறதோ என்று அச்சமாக இருக்கிறது .

ஆண் பெண் எண்ணிக்கை விகிதம் மும்பையில் 1000 : 874 டில்லியில் 1000 : 866. சமீபத்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தற்போது இந்தியாவில் பெண்குழந்தைகளை விட ஆண்குழந்தைகளின் எண்ணிக்கை 7 மில்லியன் அதிகம்! என்ற புள்ளிவிவரமும் இந்த நேரத்தில் என் நினைவுக்கு வந்து என்னை அலைக்கழிக்கிறது.

எங்கேயோ ஏதோ ஒரு மூலையில் என்னவொ நடக்கிறது ….
நடந்ததும் நல்லதாக இல்லை
நடப்பதும் நல்லதாக இல்லை
நாளை.. ?
——–
துணை நின்ற பதிவுகள்:
Hindustan Times , 26/6/11
Asian Tribune , 27/6/11 by R Vasudevan
பால் அழித்தல் – சிங்கை ஜெயந்தி சங்கரின் கட்டுரை,
இருவாட்சி பொங்கல் மலர் 2, 2010


Wednesday, July 13, 2011 @ 6:49 AM
OODARU

Sunday, August 21, 2011

(பெண்கள்) பண்பாடும் பெண்களும்


பண்பாடென்பது குறிப்பிட்ட தொகுதியோர் ஒன்றாக பின்பற்றும் பழக்க வழக்கம் வழக்காறுகள் சம்பிரதாயங்கள் என்பவற்றினை ஒன்றாக கொண்ட தொகுதியாகவே காணப்படுகின்றது.இப்பண்பாடு தனியாளின் மூலமோ சமூக நிகழ்வுகள் தனியாள் நிகழ்வுகளின் மூலமோ காலம் காலமாக காத்து சுமந்து வளர்த்தப் பெருமையில் பெண்களுக்கு பாரிய பங்குண்டெனலாம்.

ஒரு சமூகத்தில் ஆண்களைவிட பெண்களே பண்பாட்டுக் கூறுகளை ‘தலையில் சுமந்து செல்லும்’ மிகப் பெரிய பணியை செய்து கொண்டுள்ளனர்.பண்பாட்டின் கூறுகள் நன்மை கொன்டனவாக இருப்புக்களை அடையாளப்படுத்துவனவாக காணப்பட்ட பொழுதிலும் அவை அறிவியல் சிந்தனைகளை கருத்துக்களை அர்த்தப்படுத்தும் தோரனையில் எத்தகை வலிமை கொண்டவைகள் என்பதை சிந்தித்தல் மிக அவசியமானதாகும்.

சற்றே நிதானமானது சிந்திப்பதற்குரியதாகிற. பண்பாட்டைமிக நுணுக்கமாக(?)பின்பற்றும் பெண்கள் அதன் ஒவ்வொரு கூறுகளையும் தனக்கும் தன் குடும்பத்துக்கும் தான் சார்ந்த குறுகிய நிலையிலேயே பிரயோகிப்பதனை நாம் அவதானிக்க முடிகின்றது. தனக்கேயரித்தான அவற்றை குடும்பத்துக்குள்ளேயும் வணக்கத் தலங்களுக்குள்ளேயும் முடக்கிப் போடுவது யதார்த்தமாகவே காணப்படுகிறது. ஆவ்வாறூக முடக்கி வைக்கப்பட்டிருக்கும் பண்பாடுகள் இருப்புக்கலுக்கு செய்யும் பங்களிப்பு எத்தகையது என்பதையும் மனங்கொள்ள வேண்டும்.

குடும்பத்துக்குள் முடக்கி ஆளப்படும் பண்பாடுகளை பொதுவாழ்வுகுள்ளும் பரவச் செய்வது சமூகத்தின்கூறாகிய பெண்களின் மிகப்பெரிய பணியாகும். கலை இலக்கிய படைப்பிலக்கியம் அரசியல் சமூகம் பொருளாதார சிந்தனைகளின் மாற்றத்துக்கு இப்பண்பாடுகளின் மாற்று பண்பாடுகளையும் புகுத்துதல் அவசியமாகிறது.மாற்று பண்பாட்டை புகுத்துதல் மூலம் புதிய பண்பாட்டு கோலத்தையும் வளமான மாற்று பண்பாட்டையும் சமூகத்தில் பிரயோகிக்க முடியும்;. பெண்கள் மத்தியில் பண்பாடுகளை மையமாகக் கொண்ட அதிகாரப்பண்பு பரவலாகக் காணப்படுவது கண்கூடு.

குடும்பச்சூழல் கணவன் பிள்ளைகள் குடும்ப அங்கத்தவர்கள் மீது தம்மாலான உச்ச பண்பாட்டு அதிகாரத்தை திணிப்பதுவும் அதிகாரத்தினை பெற்று கொள்ளும் நோக்கில் செலுத்தப்படும்ஃபின்பற்றும் பண்பாடுகளும் அதிகம் உள்ளது.மேலும் தம் அதிகாரத்தினை நிலைநிறுத்திக் கொள்வதற்கும் இந்தப்பண்பாட்டை பிரயோகப்படுத்துவதும் உண்டு. தனிக் குடும்ப வாழ்வும் சமூக முன்னேற்றதிதிற்காகவும் கூறுகளை விதைப்பதாக எண்ணி கூட்டுக்குடும்ப வாழ்வு அன்பு பாசம் கூட்டுழைப்பு கூட்டுத் தீர்மானம் என்பவற்றை இப்பண்பாடு சார்ந்த அதிகார தன்மை அள்ளிச் சென்று விடுகிறது.

மேலும் பண்பாட்டை ஊடு கடத்தும் பெரும் ஊடகமாகவே பெண்கள் காணப்படுகின்றனர். பெண்கள்-தாய் மனைவி மூத்தோர் மூலமாகவே பண்பாடுகள் பெரும்பாலும் இன்னோர் பரம்பரைக்கு கடத்தப்படுகிறது.ஒரு சந்ததியிலிருந்து இன்னோர் சந்ததிக்கு பண்பாட்டை ஊடுகடத்தும் பணியை செய்யும் பெண்கள் அறிவியல் ரீதியாக அவற்றை கடத்துவது மிகவும் அவசியமான பணியாகிறது.பண்பாட்டை பரம்பரைபரம்பரையாகதூக்கிச்செல்லும் பாரிய பணியைய்ச் செய்யும் பெண்கள் இணியாவதுபாட்டி முப்பாட்டி பூட்டி அம்மாவிடம் இருந்து பலக்கப்பட்ட பழக்கங்கள் சம்பிரதாயங்கள் வரையரைகள் ஆசாரங்கள் என்பவற்றை கடத்தும் கட்டாய நோக்குடன் செய்யாத அறிவியல் கண் கொண்டு அவற்றை நோக்குவதும் தம் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுப்பதுவும் காலத்தின் தேவையாகும்.

சுதந்திரம் என்றும் விடுதலை என்றும் வாய் கிழிய கதறி அவை கிடைத்துவிடப் போவதில்லை உபை;புகதை;தகர்த்தெறிய தைரியம் கொண்டுல்ல பெண்ணாலே தான் சதந்திர காற்றையும் விடுதலை கீதத்தையும் துணிவாக சுவாசித்து மகிழ முடியும்.

பண்பாடுகளை கடத்தியே ஆகவேண்டும் என்பதற்காகவும் அவ்வாறு செய்யாது விடுவது தெய்வக் குற்றமாகவும் சிந்திக்கும் மன நிலைகளை மாற்றியமைக்க வேண்டும். ஊடுகடத்தும் கருவியாக செயற்படும் பெண்கள் பண்பாட்டை சரியாக புரிந்து மிக நுணுக்கமாக அப்பணியை செய்தல் அவசியமாகும்.
இவ்வாறான பண்பாடுகள் கடத்தப்படுவது என்பது எவ்விதமான நோக்கங்களையும் உள்ளீர்க்காது வெறுமனே கடத்தப்படுவது அர்த்த புஸ்டியில்லாத செயலாகும். பெண்ணின் எண்ணக்கருத்தையும் ஆளுமையை நோக்கமில்லாத இச்செயற்பாடு சிதைப்பதாக அமைந்து விடும் இவை காத்திரமாக பரப்பப்படுவதற்கும் சிந்திக்கப்படுவதற்கும் நோக்கங்களை வரையறுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.செய்யப்படும் செயல்கள் நோக்கத்தினை தெளிவாக கொண்டிருக்கும் பொழுது தான் செயற்றிறன் வலிமை கொண்டதாக மதிப்பபீடு செய்யப்படும். எனவே பண்பாட்டை நோக்கத்தடன் பரப்பச் செய்வதே பெண்ணக்குரிய காத்திரமான பணியாகும்.

பொதுவாகவே ‘சாதியம்’ தூக்கிப்பிடிக்கும் பணியை முனைப்பாக செயற்படுவது பெண்களே. சடங்கு நிகழ்வுகள் திருமணம் விழாக்களில் கலந்து கொள்ளும் பொழுதும் ‘சாதியம்’ கலந்தே சகல விடயங்களையும் நோக்குவது பெருமையானப் பணியாக கொள்வதும் பெண்களின் அறிவீனத்தையே சுட்டிக் காட்டுகிறது. அவ்வாறான சாதியத்தினை ஒத்தப் பண்பாட்டை கட்டியெழுப்புவது கூட அறிவியல சிந்தனையற்ற செயல்பாடாகும்; . எனவே மாற்று பண்பாட்டையும் மாற்று சிந்தனையையும் விதைக்கப் புறப்படும் பெண்கள் புதிய பண்பாட்டை விதைப்பதிலும் அறிவார்த்தமாக செயற்படுபவர்களாயின் பெண் விடுதலையென்பது பயனுறுதி மிக்கதாக அமையும்

வரலாறுகள் படைப்பதென்பது இருப்பவைகளை சுமப்பது அல்ல உடைப்பை ஏற்படுத்தி புதிய பண்பாட்டை புகுத்தி அவற்றை நிதானமாக கைய்யாண்டும் இன்னோர் பரம்பரைக்கு கையளித்தும் பயணிப்பதாகும்.உயர் பதவிகளிலும் அரசியல் வாழ்விலும் பொது வாழ்விலும் கொள்கை வகுத்தலிலும் பங்கு கொள்ளும் பெண்கள் தம்மைச் சுற்றியுள்ள அரசியல் பொருளாதாரம் சமூக கலாசார பண்பாடுகளில் மாற்றப்பண்பாடுகளை விதைப்பதனூடாக சரியான பெண் விடுதலைக்காட்டும் பாதையை தரிசிக்க முடியும் .


சந்திரலேகா கிங்ஸ்லி –மலையகம் இலங்கை.
Sunday, September 26, 2010 @ 9:20 AM

Wednesday, August 17, 2011

பகிரங்க விபச்சாரம் : இந்தியாவில் தேவதாசி முறைமை



சமூக பாரம்பரிய முறைமைகள், சமய வழக்காறுகள் ஆகியன தொன்று தொட்டு நின்று நீடித்து நிலைத்து வருகின்ற ஒரு நாடு இந்தியா ஆகும். இங்கு மிகவும் பழைமையான சமய நடைமுறைகளில் ஒன்றுதான தேவதாசி முறைமை. தேவதாசி என்பதற்கு கடவுளின் அடிமை என்று அர்த்தம். கடவுள் அல்லது உள்ளூர் தெய்வத்த்துக்கு மணப் பெண்ணாக தாரை வார்த்துக் கொடுக்கப்படுகின்றனர்.

கர்நாடகா மாநிலத்தில் அமையப் பெற்று உள்ளது தார்வாட் நகரம். இந்நகரத்தில் Saundatti என்று ஒரு கிராமம் உண்டு. இங்கு ஜெல்லம்மா என்கிற தெய்வத்துக்கு ஒரு சிறிய கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்றும் தேவதாசி முறை உயிரோடு உள்ளது. சிறுமிகள் காலம் காலமாக ஆனால் இரகசியமாக ஜெல்லம்மா தெய்வத்துக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்படுகின்றனர். இச்சிறுமிகள் வேறு யாரையும் திருமணம் செய்கின்றமை முடியாது.குடும்பத்துடன் தொடர்பு வைத்து இருக்க முடியாது.

ஆலய குருக்கள், கிராமத் தலைவர்கள் , நகரத்திலும் ஊரிலும் பணம், பிரதாபம் ஆகியன உள்ள பெரிய மனிதர்கள் போன்றோருக்கு இச்சிறுமிகள் சேவையாற்றுதல் வேண்டும். பாலியல் திருப்தியை கொடுக்க வேண்டும். இது தெய்வத்துக்கு செய்கின்ற திருத்தொண்டாகவே கொள்ளப்படுகின்றது. இத்தேவதாசிகள் ஆலயமே கதி என்று வழ்நாள் முழுவதும் இருக்க வேண்டியமைதான். தப்பிச் செல்ல முடியாது.

தப்பிச் செல்ல முயல்கின்றவர்களை சமுதாயம் மன்னிக்காது, ஏற்றுக் கொள்ளாது. தேவதாசி முறைமை பெண்கள் மீதான சுரண்டலுடன் சம்பந்தப்பட்டது. பொருளாதா மற்றும் சமூக ரீதியாக பின் தங்கிய சிறுமிகள் விபச்சாரத்தில் கடவுளின் பெயரால் ஈடுபடுத்தப்படுகின்றார்கள். இச்சிறுமிகள் தலித் என்று சொல்லப்படுகின்ற தீண்டத் தகாத சாதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். தேவதாசி முறைமை பகிரங்க விபச்சாரம் ஆகும்.

அறியாமை மற்றும் வறுமையில் வாடுகின்ற பெற்றோர் நல்லது நடக்கும் என்கிற நம்பிக்கையில் பிள்ளைகளை கடவுளுக்கு தாரை வார்க்கின்றார்கள். தேவதாசிகள் கன்னித் தன்மையை வயதான ஒருவருக்கு அர்ப்பணிக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். தேவதாசியாக செயல்படுகின்றமை மூலம் பெண்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற பணம் பெற்றோரைச் சென்றடைகின்றது. ஒரு விதத்தில் கூட்டிக் கொடுப்பவர்களாக பெற்றோர் செயல்படுகின்றனர்.

இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அறிக்கையின்படி தேவதாசி முறைமை பணம் சம்பாதிக்கின்றமைக்கான பாலியல் சுரண்டல் நடவடிக்கைகளில் ஒன்றாக அண்மைய காலங்களில் நவீனத்துவம் அடைந்து உள்ளது. தேவதாசிப் பெண்கள் நகரங்கள், தூர இடங்கள் ஆகியவற்றுக்கு சென்று விபச்சாரத்தில் ஈடுபடுகின்றார்கள். இங்கு 45.9 சதவீதமான தேவதாசிப் பெண்கள் விபச்சாரிகள் ஆவர். தேவதாசிகள் பிச்சை எடுக்கின்றமையையும் காண முடிகின்றது.

தென்னிந்தியாவில் மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேஷ், தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தேவதாசி முறைமையை காண முடிகின்றது. 1934 ஆம் ஆண்டு தேவதாசிகள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இது தேவதாசி முறைமையை தடை செய்கின்றது. இச்சட்டத்துக்கு 1980 களில் மீண்டும் உயிர் ஊட்டப்பட்டது.

ஆனால் இச்சட்டம் ஒவ்வொரு நாளுமே மீறப்படுகின்றது. தேவதாசியாக சிறுமியை ஆக்குகின்றமைக்கு துணை புரிபவர்கள் அல்லது தேவதாசியாக சிறுமியை ஆக்குகின்ற சடங்குக்கு செல்பவர்கள் இரு வருட சிறைத் தண்டனையுடன் அதிக பட்சம் இந்திய ரூபாய் 2000 அபராதமாக விதிக்கப்படுகின்றமைக்கு உரித்து உடையவர்கள். சிறுமியை தேவதாசி ஆக்குகின்றனர் என்று குற்றவாளிகளாக காணப்படுகின்ற பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு அதிக பட்சம் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகின்றது.


மனிதன் செய்திகள்
16 Aug 2011