Sunday, January 8, 2012

தஞ்சைப் பெரியகோவிலும் தேவதாசி மரபும்...





சங்க காலம் தொடங்கி நம்முடைய வரலாறெங்கும் குடும்ப அமைப்பைத் தாண்டி பொது வெளிக்கு வந்த பரத்தையர், விறலியர், ஆடல் பெண்கள், தேவதாசியர் ஆகியோரின் வாழ்வியலும், ஒழுக்கமும் ஆண் மைய ஒழுக்கவியல் பார்வைகளால் கடும் விவாதத்துக்கும், சிக்கலுக்கும் உள்ளாகி இருப்பதை நாம் பார்க்க முடியும். கல்வி, கலைத்தேர்ச்சி, புலமை ஆகிய வாழ்வியல் செறிவுக்கான தகுதிகள் இருந்த நிலையிலும், அவர்கள் தொடர்ந்து இழிவுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையே நம்முடைய கலாச்சார மரபாக உள்ளது. தமிழ்ச் சமூகத்தின் இத்தகைய மனஇயலை நாம் மீண்டும் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. ஏனென்றால் இது ஆண், பெண் உறவுநிலைகள் குறித்த சமூகத்தின் நுண்ணுணர்வு சார்ந்த விஷயமாக இன்று உள்ளது.

தலித்துகள், அரவாணிகள் போன்ற விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் குறித்த கவனங்களும் பதிவுகளும் பெருகி வரும் நிலையில் ஆணியச் சமூகத்தின் சுரண்டல் கருவிகளாக ஆக்கப்பட்டிருந்த பரிதாபத்திற்குரிய தேவதாசியரின் சுயவாழ்க்கை குறித்த பதிவுகளும் நிலைப்பாடுகளும் அவர்களுடைய வாழ்வியல் பற்றிய மேலான புரிதலுக்கு உதவ முடியும். தேவதாசி மரபில் வந்தவரும், கலைத்திறமையும், புலமையும் கொண்டவருமான பெங்களூர் நாகரத்தினம்மா தன்னுடைய சுயசரிதையை கன்னடத்தில் எழுதியிருக்கிறார். அண்மையில் அரவாணித் தோழியரான லிவிங் ஸ்மைல் வித்யா ‘என் பெயர் வித்யா’ என்று எழுதிய சுயசரிதை சில கல்லூரிகளில் துணைப்பாடமாக வைக்கப்பட்டுள்ளது. நம்முடைய சமூகத்தின் ஒழுக்கவியல் கண்ணோட்டத்தை தேவதாசியர் பார்வையிலிருந்து பரிசீலனை செய்யும் போதே கற்பொழுக்கம் குறித்த ஆணிய இரட்டை அளவுகோல்கள் புலப்படும்.

களவொழுக்கம், பரத்தமை போன்ற பண்புகள் நம்முடைய தமிழ்க் கலாச்சாரத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டவையாக இருந்தும் கற்பின் மறு பக்கமாக விளங்கிய இந்தப் பிற ஒழுக்கங்களுக்கு வழங்கப்பட்ட தகுதி பரிசீலனைக்குரியதாக உள்ளது. குடும்ப அமைப்புக்கு வெளியே ஆணின் சமூக, கலாச்சார மற்றும் பாலியல் தேவைகளுக்காக பெண்ணின் இருப்பு கொண்டாடப்பட்ட நிலையிலும் அதற்கான மதிப்பு வழங்கப்படாமல் அவள் இழித்துரைக்கப்படுவது ஒரு நோய்க்கூறான பார்வையே ஆகும். ஒரு வகையில் கலைகள் கைவரப் பெற்றவர்களையும், குடும்ப நிறுவனத்தைச் சார்ந்திராதவர்களையும் ஆணினம் அச்சத்துடன் நோக்கியதையே இது காட்டுகிறது.

தமிழ் இலக்கிய மரபில் ஆண்டாள், காரைக்கால் அம்மையார், ஒளவையார், காளிமுத்து, முத்துப்பழனி போன்ற பதியை உதறியவர்களே அறிவுவெளியில் சுதந்திரமாய் இயங்கி பெண் குரல்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். காளமேகப் புலவர் காலத்தில் வாழ்ந்த கணிகை காளிமுத்துவின் வருண குலாதித்தன் மடல் நூலில் பெண்ணுடல் மொழி தைரியமாக முன் வைக்கப்படுறது. அதேபோல், தஞ்சை ஆண்ட பிரதாபசிம்மன் அவையில் புலவராகவும், கணிகையாகவும் இருந்த முத்துப்பழனி எழுதிய ராதா சாந்தவனம் என்ற காதல் பிரபந்தத்தை யாரும் பதிப்பிக்க முன் வராத நிலையில் பெங்களூர் நாகரத்தினம்மா அதைத் தானே பதிப்பித்து முன்னுரையும் எழுதினார். அது நாவலாசிரியரும், சீர்திருத்தவாதியுமான வீரேச லிங்கத்தின் எதிர்ப்பால் தடை செய்யப்பட்டது. மரபை மீறிய பெரியாரின் வழி வந்த திருவாரூர் தங்கராசுகூட ரத்தக் கண்ணீரில் மரபு வழிக் கண்ணோட்டத்துடனேயே வேசையை இழிவு செய்துள்ளார். மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் தாசிகள் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர் நாவல் இன்னொரு உதாரணம். அண்மையில் நவீனப் பெண் கவிஞர்களின் உடல் மொழி சார்ந்த கவிதைகளை திராவிட இயக்கக் கவிஞர்களும், அப்துல் ரஹ்மான் போன்ற முற்போக்கு என்றுகூறி கொள்பவர்களும் வன்முறையுடன் எதிர்கொண்டதை நாம் இங்கு நினைவு கூர வேண்டும். மரபான ஆணியல் ஒழுக்கவாதப் பார்வையிலிருந்து இவர்களும் தப்பவில்லை.

ஆனால் அவைதீக இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவற்றில் ஆடற் கணிகையர் குறித்த அனுதாபம் உள்ளது. அவர்களுடைய கலைத்திறமை போற்றப்படுகிறது. மாதவி, மணிமேகலை, அம்ரபாலி போன்றவர்கள் பிக்குணிகளாக ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள். நம்முடைய பாணர் மரபிலும் வைதீகம் சாராத ஆடல், பாடல் சார்ந்த இயற்கை நெறிமரபு இருந்தது. விழாக்களும், கொண்டாட்டங்களும் அவைகளுக்கு அடிப்படைகளாக இருந்தன. இந்திர விழா கொண்டாட்டங்களில் மாதவியும், மணிமேகலையும் ஆடுவது வழக்கமாக இருந்தது. பேரிலக்கியங்கள் வலியுறுத்திய ஆண் மைய கற்பு நெறிக் கோட்பாடுகளுக்கு மாறாக நம்முடைய நாட்டுப்புற இலக்கியங்களிலும் சிற்றிலக்கியங்களிலும் வாழ்வியல் சார்ந்த நெகிழ்வான பாலியல் நிலைப்பாடுகளை நாம் பார்க்க முடியும்.

நாட்டார் புராணமான அல்லி அரசாணி மாலையில் செவ்வியல் சம்பிரதாயத்துக்கு மாற்றான ஒரு ஆணாதிக்க எதிர்ப்புக்குரல் தீவிரமாக ஒலிக்கிறது. மகாபாரத காவியத்தின் கதைக்கூறுகள் பல மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு, ஒரு தமிழ் நாட்டுப்புறக் கதையாடல் பின்புலத்தில் பெண்ணின் ஒரு மாறுபட்ட கட்டுமானம் முன்நிறுத்தப்படுகிறது. சநாதன பாலியல் சமன்பாடு தலைகீழாக்கப்பட்டு ஒரு தன்னிச்சையான சுயத்திறன் மிக்க ஒரு பாலியல் பெண் படிமம் இக்கதைப் பாடலில் முன் வைக்கப்படுகிறது. ஆண்மை பெண்மை தொடர்பான மாறாத கருத்தாக்கங்களை மறுவடிவாக்கம் செய்து அதுவரை பிரபலமாக இருந்த ஆண் மையக் கோட்பாடுகளை நாட்டார் கதைப் பாடலான அல்லி அரசாணி மாலை துணிச்சலாகக் கட்டுடைப்பு செய்தது. மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் வில்லுப்பாட்டு வடிவில் இது போன்ற பல பெண் மையப் புராணங்கள் வெளிப்பட்டுள்ளன.

பெண்ணடிமையை வலியுறுத்தும் பல செவ்வியல் பெருங்கதையாடல்களுக்கு மாற்றாக நம்முடைய பல நாட்டுப்புற இலக்கியங்களில் பெண் குரல் என்பது உரிய மதிப்புடனும், கௌரவத்துடனும் எதிரொலிக்கிறது.

தற்கால நவீன இலக்கியங்களில் தேவதாசிகளை அனுதாபத்துடன் பார்க்கும் போக்கு உள்ளது. தி.ஜானகிராமனின் மோகமுள், ஜி.நாகராஜனின் குறத்தி முடுக்கு மற்றும் நாளை மற்றுமொரு நாளே நாவல்களில் போலி மதிப்பீடுகள் இன்றி அவர்கள் வாழ்க்கை சித்தரிக்கப்படுகிறது. கோபி கிருஷ்ணனின் அவலம் சிறுகதையில் ஒரு பாலியல் தொழிலாளியிடம் ஆழ்ந்த பிணைப்பும் பாதுகாப்பும் பெறும் ஒரு ஆணின் மனநிலை சித்தரிக்கப்படுகிறது. பிரெஞ்சு எழுத்தாளர் ஜெனேயின் பால்கனி நாடகத்தில் ஒரு பாசிச அரசாங்கத்துக்கு எதிரான போராட்ட ஆலோசனை ஒரு பாலியல் தொழிலாளியின் வீட்டிலேயே பாதுகாப்பாகத் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. ஆணுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்த பொது வெளியில் இப்பெண்களே இடம் பெற்றிருக்கின்றனர். ஆனால் மனிதாபிமானமற்று போலி ஒழுக்க வரையறைகளுடன் அவர்களுடைய பங்களிப்புகளைப் புறம் தள்ளி இழிவு செய்கிறது நம் சமூகம். இப்போது கூட தமிழ் ஊடகங்களும் வணிகப்பத்திரிகைகளும் நடிகைகளைப் பற்றிய செய்திகளை வைத்தே வியாபாரம் செய்கின்றன. ஆனால் அவர்களின் ஒழுக்கத்தைப் பற்றி இழிவாக விமர்சிக்க அவை தயங்குவதில்லை.

தங்கர்பச்சான் நடிகைகளை விபச்சாரிகள் என்று சொல்லிய போது தமிழ்ச் சூழலில் பெரிய எதிர்ப்பு உருவாகவில்லை. ஆனால் குஷ்பூ பாதுகாப்பான பாலியல் உறவு பற்றிப் பேசியபோது கலாச்சாரம் கெட்டு விட்டதாக ஆர்ப்பாட்டங்கள் செய்யப்பட்டன. சமூக ஒழுக்கம் என்பது குறித்த அக்கறையில்லாமல் பெண்ணின் கற்பு குறித்த மிகைப்படுத்தப்பட்ட சொல்லாடல்களே கலாச்சாரம் என்பதாக இந்தக் கலாச்சாரக் காவலர்களால் முன் வைக்கப்படுகின்றன. பெண்ணின் சமூக வெளியை மறுத்து அநீதிக்கு எதிராகப்பெண் கிளர்ந்தெழாதபடி அவளைப் பழமைக் கருத்துகளால் முடக்கும் வேலையையே நம்முடைய ஊடகங்கள் அன்றாடம் செய்து வருகின்றன.

ராஜாராஜன் சோழன் காலத்தில் நிறுவனப்படுத்தப்பட்ட தேவதாசி முறை மற்றும் அதன் வீழ்ச்சியின் விளைவுகளாகவே இதுபோன்ற பெண் இழிவுக் கருத்துகள் சமூகத்தில் வேரூன்ற ஆரம்பித்தன. ஆனால் தேவதாசி எதிர்ப்பு என்பது அப் பெண்ணின் ஒழுக்கப் பிறழ்வைத்தான் குறி வைத்துத் தாக்கியதே தவிர, அத்தகைய ஒழுக்கக் கேட்டுக்கு ஆதாரமான சமூக பொருளாதார ஏற்பாடுகளை அல்ல. தேவதாசி முறை என்பது விபச்சாரம் என்ற நிலைக்குத் தாழ்ந்ததின் காரணம் அவர்களது சமூக வாழ்வியல் கண்ட மாற்றங்கள் தான் என்பதை அங்கீகரித்து அம்மாற்றங்கள் அவர்களை மேலும் சேதப் படுத்தாமல் இருக்க அவர்கள் ஜீவனத்துக்கு வேண்டியதை அவர்களுக்குப் பெற்றுத்தர முனைந்தார் முத்துலட்சுமி ரெட்டி. ஆனால் அதில் அவர் முழுவெற்றி பெறமுடிய வில்லை.

கோவில்களில் சோழர்களால் நிலை பெற்ற தேவதாசி முறையை ஆராய்வதற்கு முன்னால் நம்முடைய கலாச்சார வாழ்வில் கோவில்கள் வகித்த இடம் குறித்த உணர்வு அவசியமானது. கோவில்கள் நம்முடைய கலாச்சாரத்தில் வெறும் வழிபாட்டு உணர்வுக்கான இடங்களாக மட்டும் இல்லை. நம்முடைய பல்வேறு அழகியல் உணர்வுகள் மற்றும் செயல்பாடுகளுக்கான வடிகால் களாக கோவில் சூழல் பயன்பட்டது. சிற்பம் மற்றும் ஓவியக்கலை வெளிப்பாட்டிற்கான இடங் களாகவும் அவை இருந்தன. நம்முடைய வழி பாட்டு மரபின் ஒரு அங்கமாக இசையும், நடன மும் பல காலங்களாக இருந்து வருகின்றன. நடனப் பெண் வடிவம் என்பது கோவில் கலாச் சாரத்தின் பிரிக்க முடியாத அடையாளமாகவே உள்ளது. நீண்ட கோவில் பிரகாரங்கள் இத்தகைய படிமங்களைத் தாங்கி ஒரு பிரத்யேகமான அழகியல் பயணத்தைச் சாத்தியப்படுத்தி இருக்கின்றன.

உண்மையில் தேவதாசி மரபின் தோற்றம் குறித்து பல மாறுபட்ட கருத்துகள் உள்ளன. வேத இலக்கியம் அதிகாலை தெய்வமாகிய உஷையைக் குறிப்பிடும் போது பூ வேலைப்பாடுகளுடைய ஆடையை அணிந்த ஒரு நாட்டியப் பெண்ணாக வர்ணிக்கிறது. ஆகமங்களில் கணிகையர் என்று அழைக்கப்பட்ட தேவதாசிகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆகம வழிப்பட்ட கோவில்களின் பெருக்கம் ஏற்பட்ட 5 -6ம் நூற்றாண்டிலேயே இம் மரபு உறுதியடைந்த நிலை உள்ளது. சோழர்களுக்கு முந்தைய பல்லவர் ஆட்சிக்காலத்திலேயே கோவில்கள் கலைக்கூடங்களாகத் திகழ்ந்தன. ருத்ர கணிகையர் என்ற பெயரில் தேவதாசியர் பணியாற்ற அமர்த்தப்பட்டனர் என தேவராம் கூறுகிறது. “காரிகையார் பண்பாட சேயிழையார் நடமாடுந் திருவையாறே” என்று சம்பந்தர் பதிகம் பாடுகிறது. சுந்தரமூர்த்தி நாயனார் திருவாரூர் கோவிலில் நடனமாடிய பரவையார் என்ற நாட்டியப் பெண்ணை எல்லோர் முன்னிலையிலும் திருமணம் செய்து கொண்டார். பெரிய கோவில்களில் எல்லாம் அவர்கள் பணியாற்றி இசையையும், நடனத்தையும் வளர்த்தனர். கும்பகோணம், திருவையாறு, திருவொற்றியூர், காஞ்சிபுரம் ஆகிய கோவில்களில் தேவதாசியர் நடனமாடியதற்கான கல்வெட்டுகள் உள்ளன. பல்லவர்களின் ஓவியக் களஞ்சியமான சித்தன்னவாசலில் உள்ள நடனமாதர் ஓவியங்கள் தேவரடியார் பற்றிய வடிவமே.

ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் தேவதாசி முறை நிறுவனப்படுத்தப்பட்டு தேவதாசிகள் கோவில் ஊழியர்களாக்கப்பட்டனர். ஒருவிதமான அடிமை முறை அவர்கள் மேல் திணிக்கப்பட்டது. இவர்கள் காலத்தில் பெரும் போர்கள் நடைபெற்ற நிலையில் போர் நடைபெற்ற இடங்களிலிருந்து சிறைபிடிக்கப்பட்ட பெண்கள் அரசுப் பணிக்கெனவும், கோவில் பணிக்கெனவும் நியமிக்கப்பட்டனர். சிறைப்பிடிக்கப்பட்ட பெண்கள் கோவில் பணிக்கென போர் நடைபெற்ற இடங்களிலிருந்து வெவ்வேறு இடங்களில் குடியமர்த்தப் பட்டனர். தேவரடியாராக நியமிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் நாட்டியமாடும் பெண்களாக இல்லை. அத்திறமை இல்லாதவர்களும் வயது வந்தவர்களும் கவரி வீசவும் திருப்பதியம் பாட வும், கோவிலைத் தூய்மை செய்யவும் நெல் குத்தும் தொழிலுக்கும் பயன்படுத்தப்பட்டனர். ராஜராஜன் தஞ்சைப் பெரிய கோவிலை நிர்மாணித்த காலத்தில் இக்கோவிலில் பணிபுரிவதற்காக வெவ்வேறு கோவில்களில் பணியாற்றிக் கொண்டிருந்த 400 தளிச்சேரிப் பெண்களைக் கொண்டு வந்து நியமித்தான். அவர்களுக்கு இரண்டாம் முறை பொட்டுக்கட்டப்பட்டது. இந்தத் தளிச்சேரிப் பெண்கள் வசிப்பதற்கென்று கோவிலை ஒட்டி மூன்று தளிச்சேரிகளை நியமித்தான். ராஜராஜனின் 29வது ஆட்சியாண்டு கல்வெட்டு அக்கோவிலில் பணியாற்றிய தளிச்சேரிப் பெண்களைப் பற்றிய செய்திகளைத் தருகிறது.

கோவிலில் பணிபுரிந்த தேவதாசியர் அனைவரும் போர்க் கைதிகளாகவோ அல்லது பரத்தையராயிருந்து வந்தவராக மட்டும் இல்லை. குடும்பப் பெண்களும் வறுமை காரணமாகவும், நேர்த்தி காரணமாகவும் கோவில்களுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். ராஜராஜன் காலத்தில் ஒருவன் நான்கு பெண்களை 700 காசுகளுக்கு வாங்கி திருவாலங்காட்டு இறைவனுக்கு தேவரடியாராக அர்ப்பணித்த செய்தி அவ்வூர் கல்வெட்டில் காணப்படுகிறது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் நிலவிய கொடிய பஞ்சம் காரணமாக வறுமைக்கு ஆளான சில குடும்பங்கள் தங்களை குடும்பத்தோடு கோவிலுக்கு விற்றுக் கொண்டனர். திருவாலங்காடு கோவிலுக்கு பெண்களுடன் சிறுவர் சிறுமிகள் விற்கப்பட்ட செய்திகளும் உண்டு. இப்படி சோழர் காலத்தில் தேவதாசியர் அடிமைமுறை, விற்பனை முறை நடைமுறையில் இருந்ததை கோவில்கள் தோறும் உள்ள கல்வெட்டுச் செய்திகள் மூலம் அறிய முடிகிறது.

கிரேக்க ரோமானிய நாடுகளில் அடிமை களுக்கு முத்திரை இடுவதைப் போல சோழர் காலத்தில் தேவதாசிகளுக்கு இலக்கினை இடும் பழக்கம் இருந்தது. சைவக் கோவில் தேவதாசிகளுக்கு சூல இலக்கினையும் வைணவக் கோவில் தேவதாசிகளுக்கு சக்கர இலக்கினையும் இடப்பட்டன. முதலாம் குலோத்துங்கன் ஆட்சியில் காளகஸ்தி கோவில் தேவரடியார்கள் அரசு இலக்கினை இடப்பட்டு அரண்மனைக்கு அனுப்பப்பட்டனர். மக்கள் எதிர்ப்பு மற்றும் முறையீட்டின் பேரில் அவர்கள் மீண்டும் இலக்கினை மாற்றப்பட்டு கோவிலுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக செய்தி உள்ளது. இவ்வாறு அயல்நாட்டுப் படையெடுப்பின் போது சிறைப்பிடித்து வந்த அந்தப்புர மகளிர், இறைத் தொண்டுக்காக பெற்றோரால் நேர்ந்து விடப்பட்டவர்கள், வறுமை காரணமாக விற்கப்பட்ட பெண்கள் என பல திறத்தாரும் கோவிலில் இசை, நாட்டியம் மற்றும் இதர பணிகள் செய்ய பணிக்கப்பட்டனர். தேவதாசிகளுக்கு வரி ஒன்று விதிக்கப்பட்டது விஜய நகர ஆட்சிக் கால கல்வெட்டில் புலப்படுகிறது.

சோழப் பேரரசு தன்னுடைய அதிகார பலத்தால் தேவதாசியர் நிலையும் கோவில் கலைகளும் மேம்பாடு அடைந்த தோற்றத்தை உருவாக்கியது. அதன் பின்புலத்தில் நிகழ்ந்த வன்முறையும், மனித உழைப்புச் சுரண்டலும் வரலாற்றின் கண்களிலிருந்து மறைக்கப்பட்டுவிட்டன. சோழர் காலத்துப் பிறகான பாண்டியர் ஆட்சியில் பூசல்களும், கலகங்களும், கொள்ளைகளும் மிகுந்து கோவில் வழிபாட்டுச் சூழல் சிதைவடைந்தது. தேவதாசியர் வாழ்வியலும் நசிந்து துன்பங்களுக்குள்ளானது.

சிதம்பரம் வைப்பி மற்றும் ஸ்ரீரங்கம் அம்சலேகா ஆகிய தேவதாசிகள் அந்நியப் படையெடுப்பின் போது தங்கள் உயிரைக் கொடுத்து கோவில் விக்ரகங்களைக் காப்பாற்றினர். சோழர், பாண்டியர் அவர்களுக்கு வழங்கிய நிலங்களும் பின்னர் பறிபோயின. நாயக்கர் ஆட்சியிலும் மராட்டியர் ஆட்சியிலும் கலைகள் மீண்டும் புத்துயிர் பெற்று ஒரு மறுமலர்ச்சிக்கான சூழல் சில காலம் நிலவியது. கம்பர் தன்னுடைய ராமாயண அரங்கேற்றத்துக்கு அஞ்சனாட்சி என்ற தேவதாசியிடம் சாற்றுக் கவி பெற்றார். ஆங்கில ஆட்சியின் தொடக்கத்தில் ஊர்ப் பெரிய மனிதர்கள் கையில் கோவில் நிர்வாகம் சென்று அவர்களுடைய விருப்பு வெறுப்புப்படி தேவதாசிகளுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் வழங்கப்பட்டன. காலம் காலமாக கோவில் வழிபாட்டின் அம்சமாக இருந்த நடனச் சடங்கும் தேவதாசியருக்கு அளிக்கப்பட்ட மரியாதைகளும் காலப்போக்கில் சிதைவுற்றன.

அதிகார வழிபாடு கொண்ட வரலாற்றாசிரியர்கள் மன்னர்களின் பிரதாபங்களைப் பாடுவதையே வரலாறாக முன் நிறுத்தினர். வரலாற்றுச் சாதனைகளுக்குப் பின்புலத்தில் உள்ள வாழ்க்கை அவலத்தையும், மனித உழைப்புச் சுரண்டலையும் அவர்கள் முன்னிலைப்படுத்தத் தவறிவிடுகின்றனர். இதனால் ஒரு பக்க சார்புப் பார்வைகள் உருவாகிவிடும் சோகம் நேர்ந்து விடுகிறது. வரலாறுகள் மீண்டும் மீண்டும் மீள் வாசிப்பு செய்யப்பட்டு இருண்ட பகுதிகள் வெளிச்சம் பாய்ச்சப்பட வேண்டும். தங்களுடைய அவலமான வாழ்க்கைச் சூழலுக்கு இடையிலும், தேவதாசிகள் கலைகளுக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்த கணிப்புகளும், அவர்களுக்கு கிடைத்த சமூக அவமதிப்பு குறித்த பரிசீலனைகளும் தமிழ்ச் சமூகத்தின் பாலியல் உறவுநிலைகள் குறித்த கண்ணோட்டங்களை மேம்படுத்த உதவும். தான் கற்ற இசையை நாட்டியத்தை, ஓவியத்தை மற்றும் பிற நுண்கலைகளை சமூகத்துக்கு அர்ப்பணித்து தம் வாழ்நாளைக் கழித்தவர்கள் இன்று அவைகளுக்கு உரிமையில்லாத நிலையில் வெறும் அவப்பெயரை சுமக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.

தேவதாசி நடனத்துடன் இணைந்த சமூக அவப் பெயரை நீக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் பரத நாட்டியமாகி இசை, நடனம் போன்ற நுண்கலை களைப் பரவலாக்க உதவியிருந்தாலும்,வாழ்வு சிதைவுற்ற நிலையிலும், வீணை தனம்மாள். பால சரஸ்வதி, எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற அர்ப் பணிப்பு மிகுந்த கலைப்படைப்பாளிகள் உருவாக் கிய ஒரு மரபு சரியாக உள்வாங்கப்படாத நிலையே இன்று உள்ளது. இப்பிரச்சனையில் தேசிய மற்றும் திராவிடக் கட்சிகளின் போலிப் பண்பாட்டு வாதத்தைக் கடந்து பாரம்பரியம் குறித்த புரிதல், நுண்கலைகளின் சமகால இயக்கம், பெண் சுதந்திரத்துக்கான வெளி ஆகிய கூறுகளின் பின் புலத்தில் இம்மரபுகள் அணுகப்பட வேண்டும். பரதநாட்டியம் இன்று மேல்தட்டு வர்க்கத்தின் அந்தஸ்து அடையாளமாகி வர்த்தகப் பொருளாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில் தேவதாசிகள் உருவாக்கிய நாட்டிய மரபுகளின் செழுமையைப் பாதுகாக்க வேண்டும் என்று தபஸ்யா என்கிற ஒரு அமைப்பு உருவாகியுள்ளது. “வாழ்ந்து வரும் மரபுகள்” என்ற பெயரில் தஞ்சை நால்வரின் நாட்டியப் பங்களிப்பை அது ஒரு ஆவணப்படமாகத் தயாரித்துள்ளது. தமிழர் கலைகள் என்று போலிப் பெருமை பேசும் திராவிடக்கட்சிகள் நம்முடைய மரபு நடனக் கலையை சுலபமாக நிறுவனப்படுத்தி பரவலாக்கியிருக்க முடியும். ஆனால் அவர்கள் செய்யவில்லை.

நான் ஒரு நாடகக்காரன், இசையையும் நடனத்தையும் நாடகத்தின் அங்கமாக நினைப்பவன் சிறுவயதில் கோவில்களில் நான் கேட்ட இசையும், நான் உலவிய பிரகாரங்களும், நான் சந்தித்த நடனப் படைப்பாளிகளும் வாசித்த இலக்கியங்களும்தான் எனக்குள் நாடகத்தை விதைத்திருக்கின்றன.

கவனத்தைக் கோரி நிற்கும் எண்ணற்ற மௌனக் குரல்களிலிருந்தே நான் நாடகங்களுக்கான உத்வேகங்களைப் பெறுகிறேன்.

அவ்வகையில் புதிர்களும் அவலங்களும் அழகுகளும் நிறைந்த சமூகத்தின் அவமதிப்புக்கு உள்ளான தேவதாசி மரபின் சிக்கலான இழைகள், சமூகத்தின் மேலான புரிதலுக்கும் பரிசீலனைக்கும் உரியவை என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் இவற்றுடன் தமிழ்ச் சமூகத்தின் அழகியல் உறவு நிலைகள் குறித்த கண்ணோட்டங்கள் பின்னிப் பிணைந்திருக்கின்றன. தேவதாசி தடைச்சட்டம் வந்தபோது தேவதாசிகளில் ஒரு பிரிவினர் முக்கியமாக பெங்களூர் நாகரத்தினம்மா, வீணை தனம்மாள், மைலாப்பூர் கௌரி அம்மாள் போன்ற முன்னணி தேவதாசிக் கலைஞர்கள் தடையை எதிர்த்து ஏன் போராட வேண்டும் என்ற கேள்வி உள்ளது. நிச்சயம் பொருளாதாரக் காரணங்களுக்காக அந்த எதிர்ப்பு இருந்திருக்க முடியாது. அந்தத் தடையை ஏற்றுக் கொண்டால் அந்த அவப்பெயரையும் ஏற்றுக் கொண்டதாகி விடும் என்று அவர்கள் நினைத்திருக்க வேண்டும். இன்று சர்வ சாதாரணமாக பெண் இழிவு மற்றும் ஆணாதிக்கத்துக்கான சொல்லாடலாக அது மாறிவிட்டது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாக்கப் படும் சொல்லாடல்களே அக்காலக்கட்ட சூழலின் மனநிலை, கற்பனை, படைப்பு சக்தி இவற்றுக்கான அடையாளங்களாக இருக்கின்றன. இன்று குடும்பம், சமூகம் ஆகிய கட்டமைப்புகள் பெரிதும் மாற்றமடைந்து கொண்டு வரும் சூழலில் ஆண், பெண் உ றவு நிலைகளின் இறுக்கங்கள் தளர்ந்து நட்புணர்வு, தோழமை உணர்வுகளும் பெருகிக் கொண்டு வருகிற காலகட்டம் இது. முன்னெப்போதையும் விட இன்று கல்விக் கூடங்களிலும் வேலை பார்க்கும் இடங்களிலும் கலைப் பயிற்சிகளிலும் விளையாட்டுகளிலும் சமூக இயக்கங்களிலும் ஆணும் பெண்ணும் இணைந்து பணியாற்ற வேண்டிய சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன. ஆண், பெண் உறவுநிலைகள் சார்ந்த கலாச்சாரத்தின் நுண் உணர்வுகள் போலித்தனமான கற்பிதங்களுடன் கொச்சைப்படுத்தப்படுவது சமூகத்தின் தோழமை உணர்வுகளையும் படைப்புணர்வையும் பாதிக்கக்கூடியது. முக்கிய மாக பெண் இன்று எல்லாவிதமான அவமதிப்பு களுக்கும், அங்கீகார மறுப்புகளுக்கும் எதிராக வீறு கொண்டு எழக்கூடிய காலகட்டமாக இருக்கிறது. அதற்கான உத்வேகங்கள் காலத்தின் ஏடெங்கும் சிதறிக்கிடக்கின்றன.

வெளி ரங்கராஜன்

நன்றி - செம்மலர்


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.