Thursday, December 22, 2011
பெண்ணும் பரதமும்: பெண்விடுதலையும் பரதநாட்டியமும் - கவிதா
பெண்விடுதலை என்பது ஆழமான விடயம். பெண்ணியவாதிகள் பலர் பெண்ணியம் என்ற பெயரில் ஆண் எதிர்ப்புப் போராட்டம் நடாத்துகின்றனர். பெண்ணியம் என்பது ஆணாதிக்கத்தை தடுப்பதே தவிர ஆண் இனத்தையே எதிர்ப்பது இல்லை. ஆணாதிக்கம் என்பது எமது சமூகத்தில் ஆழவேரூன்றி விட்ட ஒரு விடயம். அதை வேரோடு பிடுங்குவதென்பது உடனே நடைமுறைப்படுத்தக்கூடிய காரியம் அல்ல. நிறையக் காலங்கள் தேவை.
இதில் ஆண்களை விட பெண்கள்தான் பெண்களுக்கு பல விசயங்களில் எதிரி. பெண்ணுரிமை என்ற பேரில் சிகரெட் குடிப்பது, குடிவகை பாவிப்பது, பல ஆண்களுடன் சுற்றுவது என்பதைக் கூட சிலர் பெண் உரிமை, சமஉரிமை என்ற பெயரில் செயலாற்றி வருகின்றனர். இப்படிப்பட்ட வளர்ச்சி எமது சமூகத்தை எந்த நிலைக்குக் கொண்டு வரும் என்பதை ஊகித்தே தெரிந்து கொள்ளலாம். எமது கலை கலாச்சாரம் என்பதை நாங்கள் ஊன்றிப் பார்த்தோம் என்றால் அனைத்திலும் ஆண் ஆதிக்கம் இருக்கத்தான் செய்கிறது.
பரதநாட்டியம் என்ற கலையையே எடுத்துக் கொள்ளுங்களேன் அதில் நாங்கள் கற்றுக் கொடுக்கும் விடயங்கள் என்ன? பழைய புராணக் கதைகளை நாட்டிய நாடகமாகப் போடுகின்றோம். அதில் சொல்லப்படுகிற விசயங்கள் எப்படிப்பட்டவையாக இருக்கிறது? புராணக் கதைகள் அனைத்துமே ஆண்களால் எழுதப்பட்டவை. ஆண்களுக்குச் சாதகமாகவே, அவர்கள் விரும்புகிற விதத்திலேதான் அனைத்துப் பெண் பாத்திரங்களும் சித்தரிக்கப்பட்டு இருக்கின்றன. அதில் புதிய மாற்றங்கள், எம்முடைய புதிய சிந்தனைகள் என்பதை நாம் வெளிக் கொணர முடியும். குறைந்த பட்சம் எமது கருத்துக்களையாவது கொண்டுவர வேண்டும்.
ஆனால் சமூகத்திற்குப் பயந்து அவைகளில் நாம் கை வைப்பதில்லை. அதற்கு இன்னுமொரு காரணம் பல இதிகாசங்கள் அனைத்தும் மதத்துடன் தொடர்புடையவையாகவே இருப்பது. சீதையை தீயில் இறக்கிய இராமாயணம், நளாயினி தன் கணவனை கூடையில் சுமந்து தாசியிடம் சென்றது, மகாபாரதத்தில் பெண்ணை வைத்து சூதாடியது இவைகள் சமூகத்திற்குக் கூறுவதென்ன?
எனக்குத் தெரிந்த கலையை வைத்தே நான் சில விடங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். பரதநாட்டியம் தாசிகளால் கோயில்களிலும் அரச சபைகளிலும்; ஆடப்பட்டு வந்தது அனைவரும் அறிந்ததே. அதனால்தான் பரதநாட்டியத்தில் இருக்கும் அனேக உருப்படிகள் காதல் ரசத்தை மையமாக வைத்து எழுதப்பட்டு இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
அவைகளைத் தான் நாம் இன்னமும் மீண்டும் ஆடவேண்டிய தேவை என்ன? புதிய சாகித்தியங்கள் இயற்றப்பட முடியாதா? இன்றை சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை நாம் நாட்டியம் மூலம் வெளிப்படுத்துதல் தவறாகுமா? ஆனால் நாம் ஒதுக்கப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில் அவைகளில் ஆர்வம் காட்டுவதில்லை. மீண்டும் மீண்டும் பழையனவே பழக்கி மரபு, தொண்மை பாதுகாத்தல் என்பதை தவறாகப் புரிந்து கொண்டு செயற்படுகிறோம் என்பதே உண்மை. மாற்றங்களை நாம் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வது மிகமிக அவசியம். ஆனால் அந்த மாற்றங்கள் நல்ல மாற்றங்களாக அமைய வேண்டும்.
எமது திருமணச் சடங்குகளையே எடுத்துப் பார்ப்போம். பெண்களுக்கு தாலி, மெட்டி, குங்குமம் (சிவப்புப் பொட்டு) என்று பல அடையாளங்களைக் கொடுத்து அபகரித்துக் கொள்ளும் சமூகம் திருமணம் முடிந்த ஆண்களுக்கு என்று அடையாளத்தை கொடுக்கின்றது? பூப்புனித நீராட்டு விழாக்கள் அக்காலத்தில் தேவையான ஒன்றாகி இருந்திருக்கலாம், இக்காலத்திலும் தேவையான ஒன்றா? இவைகளை யார் அதிகமாகக் கட்டி காத்து வருகின்றனர்? ஆண்களா? பெண்களா? தமிழ்ப் பெண்கள் சின்ன வயதில் நிறைய விடங்களைக் கற்றுக்கொள்கின்றனர். அந்த விடயங்கள் திருமணமான பிறகு தொடர்வதில்லை. சிலர் நோர்வேயில்; தாமாக கௌரவம், நேரமின்மை, குடும்பம் என்று பல காரணங்களை முன் வைத்து விட்டுவடுவது உண்டு.
தம்மை முற்போக்கு வாதிகளாக வெளியுலகிற்குக் காட்டிக்கொள்ளும் பல ஆண்கள் தமக்கு என்று வரும் பொழுது சிறுக சிறுக குத்திக்காட்டியே பெண்களைச் செயலிலக்கச் செய்பவர்களும் உண்டு.
ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, ஒருவருடைய உணர்வை ஒருவர் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், மதிக்கப் பழகிக் கொண்டால் இந்த எதிர்ப்பு வாதங்களிற்கு அவசியமற்றுப் போய்விடும். மதிப்பும், விட்டுக்கொடுப்பும், நேசமும்தான் பெண்ணியம். ஆணாதிக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் செய்யும் சக்தி வாய்ந்தவை. ஒருவர் மீது ஒருவர் உண்மையான நேசம் இருக்குமென்றால் விட்டுக்கொடுப்பும் மதிப்பும் தானாக வந்து விடும். நேசம் தான் இப்பெரும் வியாதிக்கு ஏற்ற மருந்து.
(கவிதா இரவிக்குமார் சிறுவயதிலேயே நோர்வேய்க்கு புலம்பெயர்ந்து வந்து ‘வளர் நிலா’ என்ற சிறுவர் இதழின் ஆசிரியராக இருந்தவர். இவர் ’பனிப்படலத் தாமரை’ என்ற கவிதைத் தொகுப்பை தமிழிலும், நோர்வேஜிய மொழியிலும் எழுதி வெளியிட்டு உள்ளார். ’நோர்வே முத்தமிழ் அறிவாலயம்;’ என்ற தமிழ் பாடசாலையில் ஆரம்ப நடனத்தைப் பயின்று, அதே பாடசாலையில் நடன ஆசிரியையாகக் கடமையாற்றுகின்றார். இவர் நவஜோதி யோகரட்ணத்திற்கு வழங்கிய நேர்காணலின் ஒரு பகுதியே இது. முழுமையான நேர்காணலை லண்டன் உதயன் பத்திரிகையில் பார்க்க.)
நன்றி: http://thesamnet.co.uk/?p=277
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.