Showing posts with label அடையாளத்தின் புதிய வெளியீடுகளாக. Show all posts
Showing posts with label அடையாளத்தின் புதிய வெளியீடுகளாக. Show all posts
Thursday, September 22, 2011
அடையாளத்தின் புதிய வெளியீடுகளாக
அடையாளத்தின் புதிய வெளியீடுகளாக என் கவிதைகள் - குட்டி ரேவதி
எனது ஐந்து கவிதை நூல்கள் யானுமிட்ட தீ, உடலின் கதவு, தனிமையின் ஆயிரம் இறக்கைகள், முலைகள், பூனையைப் போல அலையும் வெளிச்சம் ஆகியவை அடையாளம் வெளியீடாக வந்துள்ளன.
நூல்கள் கிடைக்குமிடம்:
அடையாளம், 1205/1 கருப்பூர் சாலை, புத்தா நத்தம் 621310,
திருச்சி மாவட்டம், இந்தியா தொலைபேசி 04332 -273444
1. யானுமிட்ட தீ (2010)
சாதியப்படுத்தப்பட்ட மூடுண்ட மனித உடலை இக்கவிதைகள் இயல்பூக்கத்துடன் திறக்கின்றன. உடலையே இயக்கமாக்கி அதை அதன் ஆதி நிலைக்குத் திருப்புகின்றன. தொல் அறத்தை மீட்டெடுக்கின்றன. வரலாற்றிலிருந்து உடலின் விடுதலை என்பது மோதலில் மட்டுமே நிகழ முடியும். அத்தகைய மோதலின் உக்கிரமான ஒரு புள்ளியில் இக்கவிதைகள் பீறிடுகின்றன. இதுவே இக்கவிதைகளை உயிர்த்துடிப்புடன் இயங்க வைக்கிறது.
2. தனிமையின் ஆயிரம் இறக்கைகள் (2003)
நவீன தமிழ்க்கவிதை வெளியில் பெண் குரல், பெண் உடல், உடலரசியல் போன்ற தளங்களில் ஒலிக்கும் ஒரு குரலை இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் பதிவு செய்திருக்கின்றன. ஏக்கம், நிராசை,காமம், மரணம் போன்ற அனுபூதிகள் இக்கவிதை வரிகளில் சாகாவரம் பெற்று இயங்குகின்றன. இயற்கையின் மீதான அவதானிப்பு இக்கவிதைகளில் பெண்ணியத்தின் குறியீடுகளாக மிளிர்கிறது. பெண்ணிடமிருந்து விலக்கப்பட்ட சொற்களை இவை துணிந்து உச்சரிக்கின்றன. அந்தச் சொற்கள் ஆணாதிக்க மனத்தின் செவிப்பறைகளில் போய் மோதி அதிர்கின்றன. இதுவே இத்தொகுப்பை பிற கவிதைத் தொகுப்புகளிலிருந்து வித்தியாசப்படுத்திக்காட்டுகிறது.
3. உடலின் கதவு (2006)
ஆணாதிக்கச் சமூகத்துக்கெதிரான ஒரு பெண் மனத்தின் சீற்றம் இக்கவிதைகளில் தெறிக்கிறது.காமம், புணர்ச்சி,கருவுறுதல் என்று விரியும் குறியீடுகள் இந்தப் பிரபஞ்சத்தையே ஒரு பெண்ணின் உடலாகவும், ஒரு பெண்ணின் உடலையே பிரபஞ்சமாகவும் உருவகித்துக் காட்டுகின்றன. கவிதை வரிகள் தோறும் படிமங்களும், தொடர் உருவகங்களும் காட்டாற்று வெள்ளம் போல் பிரவகித்துப் பாய்கின்றன. சில தருணங்களில் வெள்ளம் வடிந்த பின் படியும் நுரையாய் மனத்தில் ஒட்டிக் கொள்கின்றன. கவிதையில் உற்பவிக்கும் உணர்ச்சிப் பெருக்கு கவிஞரிடமிருந்து வாசகனையும் தொற்றிக் கொள்ளும் அதிசயம் இந்தத் தொகுப்பில் சாத்தியப்பட்டிருக்கிறது.
4. முலைகள் (2002)
பெண்ணின் உடலரசியலைப் பேசும் இந்தப் பிரதி முலைகள் துடைத்தகற்ற முடியாத இரு கண்ணீர்த்துளிகள் என்று அறிவித்து பெண்ணை நுகரும் உடலாகப் பார்க்கும் ஆணாதிக்கப் பொதுப்புத்தியைத் தகர்க்கிறது. இத்தொகுப்பில் இயங்கும் கவிதை மனம் வாழ்க்கையின் முட்களில் சிராய்த்துக் கொண்டு கண்ணீர் வடிக்கிறது. அதே சமயத்தில் வாழ்வின் அதீதமான தருணங்களை போகிற போக்கில் தரிசிக்கவும் செய்கிறது. உத்வேகத்துடன் அலைவுறும் கவிதை மனம் விடுதலை வேட்கையுடன் இயங்கும் இக்கவிதைகளில் படிமங்கள் அழகாகக் கைகோர்க்கின்றன. இயல்பான தன்மையுடன் நடனமாடுகின்றன.
5. பூனையைப் போல் அலையும் வெளிச்சம் (2000)
தொண்ணூறுகளில் கவனம் பெற்ற முக்கியமான கவிதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இக்கவிதைகள் கோபம் கொள்கின்றன; காதல் வயப்படுகின்றன; காமம் துய்க்கின்றன.. வாழ்வின் வெம்மை பொறுக்க முடியாமல் போகும்போது நிழலைத் தேடும் மன நிலை, ஜீவிதத்தின் உயிர்த்துடிப்பு, பேரனுபவத்தை சுட்டிக் காட்டும் தன்மை; இருமை எதிர்வுகளை வெகு இயல்பாகப் படிமமாக்கிக் காட்டும் அழகியல் ஆகியவற்றுடன் இயங்கும் இக்கவிதைகள் தங்கள் அளவில் தனித்து நிற்கின்றன. ஆணால் வடிவமைக்கப்பட்டு பெண்ணுக்கு வழங்கப்பட்ட பெண் சிந்தனையைப் பார்த்து கெக்கலி கொட்டிச் சிரிக்கின்றன. புதிய சொல்லாட்சிகளும், புதுப்புது சொல்லிணைகளும், மின் தெறிப்பாய் தெரிந்து மறையும் படிமங்களும் இக்கவிதைகளை நினைவுகூறுமாறு செய்கின்றன.
Subscribe to:
Posts (Atom)