Monday, April 2, 2012

பெண் விடுதலை: ஒரு புதிய தரிசனம் – ஓஷோ




..... மேலைப் பெண்ணுக்கும் கீழைப் பெண்ணுக்கும் இடையிலான வேறுபாடுக் குறித்த காரணங்களில் முதலாவது காரணம் காரல் மார்க்ஸ். வறுமைக்கும், போன ஜென்மம், விதி, தலையெழுத்து இவற்றுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யார் ஏழையாயிருக்க வேண்டும், யார் பணக்காரனாயிருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது கடவுள் அல்ல, சமூகப் பொருளாதார அமைப்பே யார் ஏழையாகப் போகிறார் என்பதைத் தீர்மானிக்கிறது. இந்த அமைப்பை மாற்ற முடியும். ஏனென்றால் இது கடவுளால் படைக்கப்பட்டதல்ல, மனிதரால் உண்டாக்கப்பட்டது. உண்மையில் கடவுள் என்று ஒருவர் இல்லை என்ற கருத்துக்களை காரல் மார்க்ச் உலகம் முழுவதிலுமுள்ள அறிவாளி வர்க்கத்தின் முன் வைத்து அக்கருத்துக்களை அவர்கள் ஏற்கும்படி செய்தார்.

காரல் மார்க்சின் கருத்து சரியே என்பதை பரிசோதனை அடிப்படையில் ருசியப் புரட்சி நிரூபித்தது. அதாவது இந்த அமைப்பை மாற்ற முடியும். அரசர்கள் ஆண்டிகளாக முடியும். ஆண்டிகள் அரசர்களாக முடியும். கடவுள் இதில் எந்த குறுக்கீடும் செய்யவில்லை. ‘இப்படி நீங்கள் செய்யக் கூடாது. அவர்கள் தலையில் நான் எழுதியதை உங்களால் மாற்ற முடியாது’ என்றெல்லாம் கூறவில்லை.

ருசியாவில் ஜாரின் குடும்பம் முழுவடும் – ஆண்கள், பெண்கள், முதியவர், இளையவர், குழந்தைகள், ஆறுமாதமே ஆன பச்சைக் குழந்தை, 95 வயதான கிழவன் – ஆக மொத்தம் அரச குடும்பத்தைச் சேர்ந்த பத்தொன்பது பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டார்கள். அப்போது கடவுள் குறுக்கிட்டு ‘இந்தக் குடும்பத்தை என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்? அது நான் எடுத்த முடிவு. ஏறக்குறைய உலகின் ஆறில் ஒரு பங்குக்கு நான் சொந்தக்காரர்களாக்கிய அவர்களை நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்கவில்லை. அக்காலத்தில் ருசியப் போரரசே மிகப்பெரிய பேரரசாக இருந்தது. ஜாரே உலகின் மிகப்பெரும் பணக்காரராக இருந்தான்.

ஆக முதல் சம்மட்டி அடி காரல் மார்க்சிடமிருந்து வந்தது. இரண்டாவது சம்மட்டி அடியோ சிக்மண்ட் பிராய்டிடமிருந்து வந்தது. ஆண்களும் பெண்களும் சமமானவர்கள், ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்; பெண்களைக் கண்டனம் செய்யும் எவ்விதக் கோட்பாடுகளும் தத்துவங்களும் முற்றிலும் மனிதத் தன்மை அற்றவை, ஆணதிக்க வெறி கொண்டவை – இவ்வாறு அறிவித்தார் பிராய்டு. அடுத்து மூன்றாவதான கடைசி சம்மட்டி அடியோ மாஸ்டர்ஸ் ஜான்சனின் ஆராய்ச்சிகளில் இருந்து வந்தது. பெண்ணானவள் நூற்றாண்டுகளாக உடலுறவின் உச்சத்தை அனுபவிக்க விடாமலே தடுக்கப்பட்டு வந்திருக்கிறாள். உண்மையாகவே தன் நடத்தையில் மனிதத் தன்மையற்றவளாகவே பாலியல் தேவைகளுக்காகவே பெண்ணை அவன் பயன்படுத்தினான். ஆனால் அதே காமத்தை பெண் அனுபவிக்க அவன் அனுமதிக்கவில்லை.

இந்த மூன்று விஷயங்களும் மேற்கின் மொத்த சூழலையே மாற்றி இருக்கிறது. ஆனால் கிழக்கின் மரபுரீதியான மனத்தை இம்மூன்று விஷயங்களும் இன்னும் ஊடுருவவே இல்லை. இவற்றின் விளைவாக மேலைப் பெண்மணி போர்ப் பாதையில் இருக்கிறாள். ஆனால் அது எதிர்வினை நிகழ்வுதான். எனவே பெண்விடுதலை என்ற பெயரில் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அதை நான் ஆதரிப்பதில்லை.

பெண்கள் விடுபட வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். ஆனால் எதிர்க்கோடிக்கு போய்விடுவதை விரும்பவில்லை. பெண்கள் விடுதலை இயக்கம் எதிர்க் கோடிக்கு போய்க்கொண்டிருக்கிறது, பழிவாங்கத் துடிக்கிறது. ஆண் தனக்குச் செய்ததையே அவனுக்குத் திருப்பிச் செய்ய முயலுகிறது. இது சுத்த மடத்தனம். நடந்தது நடந்து விட்டது. இப்போது அது இல்லை. ஆண் தான் செய்ததை எல்லாம் தன்னுணர்வில்லாமலேயே செய்து விட்டான். பெண்களூக்கு எதிராக தெரிந்தே சதி செய்யவில்லை. அவனும் உணர்வுடன் இல்லை. பெண்ணும் உணர்வுடன் இல்லை.


...............................

..................................


கடந்த காலம் முழுவதும் எல்லாவிதமான தவறுகளாலும் நிரம்பியுள்ளது. கடந்தகாலத்திலிருந்து விடுபடுங்கள். எல்லாவற்றையும் – ஆண் பெண் உறவு உள்பட – புதிய கண்டுபிடிப்புகளின் ஒளியில் புதியதாய் தொடங்குங்கள். கடந்த காலத்தில் நடந்த எந்த அசிங்கமும் இல்லாமல் வாழ்க்கை ஒரு அழகிய அனுபவமாக, ஆனந்த நடனமாக இருப்பதற்கான வழிகளை இருவரும் சேர்ந்தே கண்டுபிடியுங்கள். பழைய தவறை திரும்பச் செய்யாதீர்கள். அப்படிச் செய்வது கடிகார ஊசலின் இயக்கத்தைப் போலவே ஆகிவிடும். முன்பு ஆண் மடத்தனமான காரியங்களைச் செய்தான். இப்போது பெண்ணும் அதே மடத்தனங்களையே செய்வாள் (என்றாகிவிடும்).

ஆனால் மனித இனம் முழுவதுமே தொடர்ந்து துன்பப் பட்டுக் கொண்டே இருக்கிறது. மடத்தனமான செய்கையை யார் செய்தார் என்பது முக்கியமில்லை. ஆனால் மனிதகுலம் தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடையாமலே இருக்கிறது. ஆணும் பெண்ணும் ஒரு ஒத்த புரிதலுக்கு வந்தாக வேண்டும். கடந்த காலத்தை அவர்கள் மன்னித்து மறந்து விட வேண்டும். ஒன்றை மட்டும் அவர்கள் நிணைவில் கொள்ளட்டும். அதாவது பெண் ஆணைப் போலவே நடித்து போலியாகக் கூடாது. ஏனென்றால் அவளுடைய கவர்ச்சிக்கும் அழகுக்கும் ஒரு வித்தியாசமான பரிமாணம் இருக்கிறது.


...................................

.............(பக். 16-19) பெண் விடுதலை: ஒரு புதிய தரிசனம் – ஓஷோ




தமிழாக்கம்: சிங்கராயர், சுவாமி அம்ரித் யாத்ரி, கவிதா வெளியீடு.







//ஆண் தான் செய்ததை எல்லாம் தன்னுணர்வில்லாமலேயே செய்து விட்டான். பெண்களூக்கு எதிராக தெரிந்தே சதி செய்யவில்லை. அவனும் உணர்வுடன் இல்லை. பெண்ணும் உணர்வுடன் இல்லை.

...............................

..................................

கடந்த காலம் முழுவதும் எல்லாவிதமான தவறுகளாலும் நிரம்பியுள்ளது. கடந்தகாலத்திலிருந்து விடுபடுங்கள். எல்லாவற்றையும் – ஆண் பெண் உறவு உள்பட – புதிய கண்டுபிடிப்புகளின் ஒளியில் புதியதாய் தொடங்குங்கள்//

இதை தட்டையாக அப்படியே புரிந்து கொண்டால் ஆத்திரமூட்டும் உணர்வுகள் ஏற்படக்கூடும். ஒவ்வொரு ஆணும் பெண்ணுக்கெதிரானவன் அல்ல, பல்வேறு காரணங்கள், குறிப்பாக பொருளாதார அமைப்பில் மாற்றம் ஆகியவை மனித மனதை எவ்வாறு கையாள்கிறது அல்லது கையாண்டது எனும் கோணத்தில் விரிவாக பேசவேண்டிய ஒரு கருத்து அது என்பதாக நான் உணர்கிறேன்.

அதேபோல் கடந்த காலத்திலிருந்து விடுபடுங்கள் என்பதிலும் வரலாற்றை புறக்கணித்து விட்டு, எல்லாவற்றையும் மறந்துவிட்டு கைகுலுக்கிக் கொண்டு நண்பர்களாகி விடுவேண்டும் என்பதல்ல (முடிவு அவ்வாறாகத்தான் இருக்க வேண்டும்). ஒருவரை ஒருவர் தூற்றிக் கொண்டிருக்காமல், கடந்த கால வரலாற்றை, அதில் நடந்த தவறுகளை திறந்த மனதோடு இருபாலாறும் கற்று ஆய்ந்து தீர்வை காண வேண்டும், கண்ட பின்பு கடந்த காலத்திலேயே உழல்வது அவசியமில்லை என்பதாக புரிந்துக் கொள்ளலாம்.


நன்றி - கருவனம்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.