Wednesday, December 7, 2011

பெண்ணியம் - ஒரு பார்வை


மீரா கிருஷ்ணன்குட்டி: படைப்புகளை தலித் என்றும் பெண்ணெழுத்து என்றும் பலவிதப்பட்ட லேபிள்களை ஒட்டி வெவ்வேறு அறைகளில் அடுக்கி வைக்கும் இன்றைய நிலையைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்?

ஜெயகாந்தன்: இது அவரவர்கள் தங்களுக்குத் தாங்களே ஒட்டிக்கொள்ளும் லேபிள் ஆயிற்றே -- அதனால் அவர்களுக்கு நன்மை இருக்கிறது என்று நினைத்துத்தானே அவர்கள், அதைச் செய்கிறார்கள். இல்லாவிட்டால் எழுத்தாளர்கள் அதைப் பிடித்து கிழித்து எறியட்டும். மாறுபட்ட முகவரியை விரும்புபவர்கள் அதைத் தொடரட்டும்.

மீரா கிருஷ்ணன்குட்டி: பெண்ணெழுத்து என்ற லேபிளை பெண்களே எடுத்து அணிந்து கொள்கிறார்கள் என்று கூறலாமா?

ஜெயகாந்தன்: தேவையில்லை என்பவர்கள் போராடி அதைக் கழற்றி எறியட்டும் தீர்மானிக்க வேண்டியவர்கள் பெண்களே.

மீரா கிருஷ்ணன்குட்டி: இப்படிப்பட்ட பிரிவினை வாசகர்களை சிந்தனைக் குழப்ப ங்களில் சிக்க வைத்துவிடாதா? நீங்கள் அதை ஆதரிக்கிறீர்களா?

ஜெயகாந்தன்: பிரிவினையால் உண்டாகும் சிந்தனைக் குழப்பம் படிப்படியாக மறைந்து விடும். தெளிவு மீண்டும் பிறக்கும். பிறகு... நான் ஒரு சட்டம் உண்டாக்குகிறவன் அல்லது--நல்லது, கெட்டது என்றெல்லாம் கூறக்கூடிய ஆள் இல்லை நான்.

தமிழில் - சுரா

சிவதாணு: தற்போதைய பெண் கவிஞர்கள் உடல்மொழியை மையப்படுத்தி எழுதும் எழுத்துக்களை தவறு என்று பேசுபவர்களைப் பற்றி...

பாமா:
இதுவரையில் மொழியென்றாலே ஆண் மொழிதான். மொழியின் மீது ஆதிக்கம் செலுத்தி வந்தவர்களுக்கு, பெண்கள் சுதந்திரமாக அவர்கள் மொழியில் எழுத ஆரம்பித்தபோது கூப்பாடு போடுகிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வு இல்லை என்பதையே இது காட்டுகிறது. காலம் காலமாகப் பெண்களை ஒடுக்கி வந்த கூட்டத்திற்கு, பெண்கள் மொழியாலும் ஒடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இது.

சிவதாணு: பெண் கவிஞர்கள் தங்களின் உடல் மொழிகளில் எழுதுவதை ஆபாசம், வக்ரம் என்று சிலர் கடுமையாக எதிர்க்கிறார்கள். தாங்கள் இதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

நாஞ்சில் நாடன்: ஒருவிதமான ஆபாசமும் இல்லை. வக்ரமும் இல்லை. மனதளவில் உணர்ச்சியளவில் அதை இலக்கியமாக வெளிப்படுத்துவதில் ஆணுக்கு உண்டான சகல சுதந்திரங்களும் பெண்ணுக்குமுண்டு. நமது மொழியில் இது மிகவும் தாமதமாக வெளிப்பட்டுள்ளது. இவர்கள் ஆபாசம் என்றும், வக்ரம் என்றும் எதைச் சொல்கிறார்கள் என்றே எனக்குத் தெரியவில்லை. பெண் உடல் ஆபாசம், பெண்மொழி ஆபாசம், பெண்ணின் வேட்கை வக்ரம், பெண்ணின் சுதந்திரதாகம் வக்ரம் என்று சொல்பவர்கள் பிற்போக்குவாதிகளும் மனநோயாளிகளுமாகவே இருப்பார்கள். அவ்வையாரும், ஆண்டாளும், சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்களும் அன்று எடுத்துக்கொண்ட சுதந்திரத்தில் அரைப்பங்கு கூட இன்றைய பெண் இலக்கியவாதிகள் எடுத்துக் கொள்ளவில்லை என்பதே உண்மை.

சிவதாணு : தற்போது எழுதிவரும் கவிஞர்களின் கவிதை பற்றிய உங்கள் பார்வை என்ன?

வல்லிக்கண்ணன்: எப்பவும் இரண்டு வகையாக எழுதுகிறார்கள். ஒன்று தனி மனித உணர்ச்சிகளை மையமாக வைத்து எழுதுகிறார்கள். இவர்கள் தங்களின் மனப்பதிவுகளை எழுதுவதால் சில சமயம் கவிதைகள் புரியாமல் போய்விடுகிறது. இன்னொரு வகை, சமூகப் பார்வையோடு, அரசியல் உணர்வோடு எழுதுகிறார்கள். இவர்களில் பலபேர் சொன்ன விஷயங்களையே திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் சமூக அவலங்களையும் வாழ்க்கைக்குறைபாடுகளையும் சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகிறார்கள். இவர்களில் மாறுபட்ட ஒரு போக்காக பழமலை, தொன்மங்கள் பழைய மூதாதையர்கள் பற்றி கதைச்சுவையுடன் கவிதை எழுதி வழிகாட்டினார். சிலர் இவரைப் பின்பற்றுகிறார்கள். தலித்திய நோக்கில் அனேகர் எழுதுகிறார்கள். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுடைய உணர்வுகளையும், வாழ்க்கைமுறைகளையும் கவிதையில் வெளிப்படுத்துகிறார்கள்.

பெண்ணியம் சார்ந்து பெண்கள் பலர் தீவிரமாகக் கவிதை புனைகிறார்கள். இவர்கள் பெண் உணர்வுகளையும், ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்களின் வாழ்க்கை நிலைகளைப் பற்றியும் எழுதுவதுடன், அவர்கள் உடல் ரீதியான உறவுகளையும் காம வெளிப்பாடுகளையும் ஒளிவு மறைவு இல்லாமல் எழுதுகிறார்கள். இது ஆண்களோடு போட்டியிடுவது போலவும், வாசகர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், புரட்சிகரமான போக்கு என்று கருதி செயல்புரிவதாகவே எனக்குத் தோன்றுகிறது. அவர்களுக்கு அப்படி எழுத உரிமை இருக்கிறது. என்றாலும் அது பண்பாட்டுச் சிதைவையே காட்டுகிறது. இப்படி சில ஆண்களும் எழுதுகிறார்கள். பெண்கள் எழுதினாலும் ஆண்கள் எழுதினாலும் இது தவறான போக்கேயாகும்.

சமீப காலத்தில் ஹைகூ என்று மூன்று வரிகளில் எழுதுவது அதிகரித்திருக்கிறது. அதிலும் சென்றியூ, லீமர்க்கூ என்றெல்லாம் சொல்லிக்கொண்டு புதுமை பண்ணுகிறார்கள். இவை பெரும்பாலும் கவிதையாக இருப்பதில்லை. எந்த வடிவத்தில் சொல்லப்பட்டாலும் கவிதை, கவிதை அழகுடன் விளங்கவேண்டும்.

சிவதாணு: “சில பெண்களைப் பார்க்கும் போது கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது. ஆபாசமாகக் கவிதை எழுதும் பெண்களை அண்ணா சாலையின் நடுவில் நிறுத்தி சுடத் தோன்றுகிறது.” இப்படி சொன்ன திரைப்பட பாடலாசிரியர் சினேகனின் கூற்று பற்றி?

பா. செயப்பிரகாசம்: மனித சமூகத்தில் சரிபாதியாக இருப்பவர்கள் பெண்கள். ஒரு பாதி இன்னொரு பாதியை அடிமைப்படுத்துவது என்பதை நாம் அனுமதிக்க முடியாது. இந்த அடிமைத்தனம் என்பது பெண் ஒரு எதிர் பாலியல் என்ற கருத்தின் அடிப்படையில்தான் நிலவி வருகிறது - செயல்படுத்தப்படுகிறது. அடிமைப்படுத்தப்பட்ட பகுதி தன்னை விடுதலை செய்து கொள்வதற்காக எல்லா துறைகலும் மேலெழுந்து போராடுகிறது. விடுதலை என்பது விரும்பி தரப்படுவது அல்ல, தானே எடுத்துக்கொள்வது. எனவே அடிமைப்படுத்தப்பட்ட எதிர்ப் பாலியல் முதலில், எதன் காரணமாய் அடிமைப்படுத்துதல் தோன்றியதோ அந்த பாலியல் விடுதலையைக் கோருகிறார்கள். பெண் என்றாலே பாலியல் உறுப்புகளின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறாள். எனவே பாலியல் விடுதலையை வேண்டுகிற பெண் வர்க்கம் பாலியல் உறுப்புகளைப் பேசாமலோ பாலியல் செயல்பாடுகளைக் குறிப்பிடாமலோ படைக்க முடியாது. அதை இவர்கள் ஆபாசம், வக்ரம் என்று விஞ்ஞானமற்ற சொற்களால் குறிப்பிடுகிறார்கள்.

இதற்குமுன் ஆண்கள் பெண் உறுப்புகளின் செயல்பாடுகளை தங்களுடைய இச்சைக்கு உகந்ததாக வர்ணித்து வந்தார்கள். உண்மையில் இவர்கள் எழுதியதுதான் அநாகரீகம். சினேகன் தன்னை மேலாகவும் பெண்ணைக் கீழிடத்திலும் வைத்துப் பார்க்கிறார். பொதுவாக ஆண் பார்வையின்படி பெண்களை இரண்டாகப் பிரிக்கிறார். ஒருவர் பூஜிக்கத் தக்கவர் -- இன்னொருவர் அண்ணாசாலையில் வைத்து சுட்டுக் கொல்லத் தக்கவர் என்று. இந்த இரண்டுமே பெண்ணை அடிமைகளாகப் பார்க்கும் பார்வைதான். இந்த சினேகன் போன்றோர் குரல் கொடுக்காததனாலேயே பெண்கள் தங்களுக்காகவே தாங்கள் எழுத எழுந்தார்கள். அவர்கள் எழுதிய எழுத்துக்களுக்கு அண்ணாசாலையில் வைத்து அவர்களுக்கு மரணதண்டனை என்றால் - சினேகன் போன்றோர்க்கு என்ன தண்டனை அளிப்பது?

சிவதாணு : இலக்கியத்தில் தலித் இலக்கியம் என்று ஒன்று தேவையா என்று சிலர் கேட்கிறார்கள். இதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன?

ரமேஷ் – பிரேம் : இலக்கியம் என்பதில் முழு முற்றான- பொதுவான இலக்கியம் என்று எதுவுமில்லை. ஒவ்வொரு எழுத்திலும் மிகத் தீவிரமான அரசியல் படிந்துள்ளது. உண்மையான இலக்கியம் வேறுபாடுகளைப் பதிவு செய்யக்கூடியது. தமிழ் மரபில் மேலாதிக்க சாதி மனோ நிலை மறைமுக நஞ்சாகப் படிந்து கிடக்கிறது. இனி வரும் இலக்கியங்கள் வரலாற்றில் மறுக்கப்பட்ட, மறைக்கப்பட்ட குரல்களைப் பதிவு செய்வதாக இருக்கும். அவ்வகையில் தலித்தியமும், பெண்ணிய எழுத்துக்களும் மிக மிகத் தேவை யானவை. தலித்துகளும் பெண்களும் தமக்கு மறுக்கபட்ட மொழியில் தமது எதிர்ப்பையும் தமது உள்ளார்ந்த புலன் களையும் பதிவு செய்ய வேண்டியதிருக்கிறது. அந்தப் பதிவுதான் இப்போது தொடங்கப்பட்டிருக்கிறது. தலித்திலக்கியத்தை தலித் எழுத்தாளர்களும், பெண்ணிய எழுத்துக்களைப் பெண்களும் எழுதுதல் என்பதுதான் அறிவியல் அடிப்படையில் சாத்தியமாகும்.

சிவதாணு : ஆண் எழுத்தாளர்கள், பெண் எழுத்தாளர் என்று வகைமைப்படுத்துவது பற்றி உங்கள் கருத்து என்ன?

அசோகமித்திரன்: ஒவ்வொரு எழுத்தாளரும் ஒவ்வொரு வகை. ஆண், பெண் என்பது இயற்கையிலேயே உள்ளது. அதை நாம் ஏன் மறுக்க வேண்டும்?

சிவதாணு: தற்போதைய பெண் கவிஞர்களைப் பற்றி...

அசோகமித்திரன்: அனாமிகா, இளம்பிறை, வெண்ணிலா போன்றோரின் சில கவிதைகளைப் படித்து ரசித்திருக்கிறேன். மாலதி மைத்ரியின் கட்டுரைகள் பல சிறப்பாக அமைந்திருந்தன. ஆனால் அவரும் ஒரு பெண் கவிஞர்தான்.

சிவதாணு : பெண்ணியம் பற்றி...

எம். ஜி. சுரேஷ் : ‘சிமோன் தி பூவா’ என்ற பிரெஞ்சு பெண் சிந்தனையாளர்தான் ‘தி செகண்ட் செக்ஸ்’ என்ற நூலில் முதல் தடவையாகப் பெண்ணியம் பற்றிப் பேசினார். இதிலிருந்துதான் பெண்மொழி, பெண் உடல், பெண்ணியம், பெண் விடுதலை போன்ற சொல்லாடல்கள் தோன்றின. ஒரு ஆணாதிக்கச் சமூகத்தில் ஒரு ஆணுக்கான மதிப்பீட்டை ஆண் உருவாக்குகிறான். அதேபோல் ஒரு பெண்ணுக்கான மதிப்பீட்டையும் ஆணேதான் உருவாக்குகிறான். இதிலிருந்து பெண் தன்னை விடுவித்துக் கொண்டு, தன்னுடைய மதிப்பீட்டை தானே உருவாக்க வேண்டும். பெண்ணைப் பற்றி ஒரு புதிய பார்வையைப் பெண்ணே உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஜேக் லக்கான் என்ற பிரெஞ்சு உளவியல் அறிஞர் ‘பெண் என்று யாருமே இல்லை’ (Women does not exit) என்கிறார். இதுதான் ஆணாதிக்கச் சமூகத்தில் ஒரு பெண்ணின் நிலை. எனவே பெண் என்பவள் உருவாக்கத்தில் இருக்கிறாள். அதைச் சாதிப்பதற்குத்தான் பெண்ணியத்தின் பங்களிப்பு இருக்கிறது.

சிவதாணு : கலாச்சாரக் காவலர்களால் இன்று பெண்ணியம் கேள்விக்குறியாகியுள்ளது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கலாப்ரியா : இதிலும் அடிப்படையான கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுவது எனக்கு உடன்பாடு இல்லை. இது உளவியல்ரீதியாக அணுக வேண்டிய ஒரு விஷயமாகத்தான் எனக்குத் தெரிகிறது. இதை அவர்கள் உணர்ச்சிப் பூர்வமாக அணுகுவதால் சமூகத்திற்கு ஒரு பிரயோசனமும் இல்லை. இதை ரொம்ப பரபரப்பான விஷயமாக மீடியாக்களோ, தனிநபர்களோ ஆக்குவதுகூட எனக்கு உடன்பாடு இல்லை. இவர்களுக்கு இன்னொரு ஸ்கூப் கிடைக்கும் பட்சத்தில் தானாகவே இந்தப் பிரச்சினை மறைந்துவிடும். ஒட்டு மொத்தமாக ஆணாதிக்கத்திற்கு எதிரான போராக கருத்து மற்றும் அறிவியல் ரீதியாக எடுக்கச் சொல்லப்பட வேண்டிய பிரச்சனை இது.

சிவதாணு : பெண் கவிஞர்கள் எழுதும் உடல்மொழிக் கவிதைகளைச் சிலர் கடுமையாக எதிர்க்கிறார்கள். நீங்கள் இதை எதிர்க்கிறீர்களா? ஆதரிக்கிறீர்களா?

கலாப்ரியா : முழுக்க முழுக்க இதை நான் ஆதரிக்கிறேன். என்னுடைய கவிதைகளி லேயே இதற்கான கூறுபாடுகள் இருக்கின்றன. ஒரு விடுதலையை நோக்கிய புதிய பயணத்தில் இதுபோன்ற எதிர்க்குரல்களை நிர்தாட்சண்ய மாகப் புறம் தள்ளிவிடலாம். இப்போது பரபரப்பாகப் பேசக்கூடிய உடல்மொழியை மிகச் சாதாரணமாகச் சொல்லுவதென் றால், இது அடுக்ளைமொழிதான். அடுக்களை மொழியைக்கூட நாம் இன்னும் முழுமையாக வெளிக்கொணரவில்லை.

சிவதாணு : இன்றைய பெண் கவிஞர்களின் அனேக கவிதைகளில் உடல்மொழி பிரதானப்படுத்தப்படுகிறது. இதை ஆண் ஆதிக்கச் சிந்தனைக்கு எதிரான ஒரு செயல்பாடாகக் கருதலாமா?

பொன்னீலன் : உடல்மொழிப் பிரதானப் படுத்துவதும், பிரதானப்படுத்தாமல் இருப்பதுவுமல்ல இலக்கியத்தின் பிரச்சினை. ஆது இலக்கியமாகி இருக்கிறதா? அழகியல் பார்வை பெற்றிருக்கிறதா? சமூக அர்த்தம் கொண்டிருக்கிறதா? என்பதுதான் பிரச்சினை. எனக்குத் தெரிந்த வரையில் குட்டி ரேவதியின் ஒரு சில கவிதைகள் தவிர மற்றவர்களின் படைப்புகள் வெறும் உடல்சார் சம்பவங்களாகச் சிறுத்து நிற்கின்றன. கலைப் படைப்புகளாக அவை பரிணமிக்கவில்லை. உடல்சார்ந்து எழுதுகின்றவர்களில் பலர் சுயகவனம் பெறுவதற்காக இப்படிச் செய்கிறார்களோ என்று எனக்குத் தோன்றுகிறது.

சிவதாணு : பெண் கவிஞர்கள் எழுதும் உடல் மொழிப் பற்றி...

ஜெயமோகன் : கவிஞர்கள் எப்படியும்- எதை வேண்டுமானாலும் எழுதலாம். சுதந்திரத்திற்கு மறுபெயர் கவிதை. அவை நல்ல கவிதைகள் என்றால் அச்சுதந்திரம் கொண்டாடப்படுகிறது என்றே பொருள்.

அதே சமயம் எதிர்ப்புகளைக் கண்டு அணிதிரள்வது படைப்பாளி செய்யக்கூடிய செயல் அல்ல. எழுத்தாளர்களின் எழுத்து சமூகத்தில் பரபரப்பையோ, எதிர்பையோ உருவாக்குவது இயல்பே ஆகும். மேலை நாட்டிலும் பெண் கவிஞர்களுக்கு எதிர்ப்புகளும் மறுப்புகளும் உண்டு. இது எழுத்தின் இயல்புகளே.

சிவதாணு : இன்றைய சூழலில் பெண் படைப்பாளிகளின் பங்களிப்பு எப்படி உள்ளது?

சாரு நிவேதிதா : பெண் படைப்பாளிகளின் எழுத்து சொல்லும்படியாக இல்லை. மிகப் பலவீனமாக உள்ளது. சுகிர்தராணியின் கவிதைகளில் பாலியல் வெளிப்பாடு உள்ளது - ஆனால் கவிதை இல்லை. சல்மாவிடம் சுயதொழில் செய்வோரின் (Entre preneur) முனைப்புதான் தெரிகிறதே தவிர இலக்கியம் இல்லை. மாலதி மைத்ரியின் கவிதைகள் மட்டுமே செறிவாக உள்ளது. ஆனால் அவர் எப்போதுமே கையில் குண்டாந்தடியுடன் அலைவதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. உமாமகேஸ்வரி பாவம்... எல். கே. ஜியிலேயே நான்கைந்து ஆண்டுகளாகப் படித்துக் கொண்டிருக்கிறார். பொதுவாக பெண்படைப்பாளிகள் எழுத்தில் பலவீனமாக இருப்பதன் காரணத்தை அவர்கள் கண்டுபிடித்துக் களைய வேண்டும். எனக்குத் தெரிந்து சில காரணங்களைச் சொல்லலாம்.

தன் எழுத்தை ‘promote’ செய்வதற்காகத் தன் மனசாட்சிக்கு விரோதமான காரியங்களில் ஈடுபடுவது. உலக இலக்கியங்களைக் கற்காதது. சுற்றுப்புறத்தையும் குடும்பத்தையும் பார்த்து பயப்படுவது. சில பெண் கவிஞர்களின் புத்தகங்களைச் சமீபத்தில் பார்த்தேன். தரத்தில் மிகவும் கீழே இருக்கும் அப்புத்தகங்களுக்குப் பிரம்மராஜன், ஞானக்கூத்தன், சுகுமாரன், ஜெயமோகன் போன்றவர்கள் முன்னுரை எழுதி ஆகா, ஓகோ என்று புகழந்து தள்ளியிருப்பதைப் பார்த்த போது, இக்கவிதை நூல்களை ஆண்கள் எழுதியிருந்தால் இவர்கள் இப்படிச் புகழ்ந்திருப்பார்களா என்று எண்ண வைத்தது. இப்படிச் செய்வது அதர்மம் அல்லவா; அதனால்தான் சொல்கிறேன். பெண் எழுத்தாளர்கள் எழுத்தில் கவனம் செலுத்துவதில்லை என்று. எழுத்து நன்றாக இருந்தால் எதற்கு இந்த முன்னுரை, பின்னுரை எல்லாம்?

நன்றி - உதயம் நேர்காணல்கள்


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.