Thursday, October 27, 2011
செல்லுபடியாகும் குழந்தைத் திருமணங்கள்
மும்பை நகரில் 4-4-2011 அன்று குழந்தைத் திருமணங்கள் எனும் தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய தேசிய மகளிர் ஆணையத்த்தின் தலைவர் (Chairperson, National Commission for Women) கிரிஜா வியாஸ் அம்மையார், நாட்டின் பல பகுதிகளில் இன்னமும் குழந்தைத் திருமணங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன என்றும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடக்கும் திருமணங்களில் 73% குழந்தைத் திருமணங்களே என்றும் இந்தியாவிலேயே அதிகமான குழந்தைத் திருமணங்கள் நடக்கும் மாநிலம் இது தான் என்றும் அவர் கூறினார். இராஜஸ்தான் இரண்டாவது இடத்திலும், அதைத் தொடர்ந்து பீகார், உத்தரப் பிரதேசம், சட்டிஸ்கர் மாநிலங்கள் உள்ளன என்றும் மேற்கு வங்காளத்திலும் கேரளாவிலும் குழந்தைத் திருமணங்கள் கணிசமான அளவில் நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இது அதிர்ச்சி தரக் கூடிய செய்தியாக இருக்கலாம்.
ஆனால் இச்செய்தியை அமாவசை அலைக்கு ஒப்பிட்டால் சுனாமி அலையைப் போன்று அதிர்ச்சி தரக் கூடிய இன்னொரு செய்தியையும் அவர் கூறினார். அது தான் குழந்தைத் திருமணங்கள் சட்டத்தின் முன் செல்லுபடியாகின்றன எனும் செய்தி.
பெண்களின் திருமண வயது குறைந்த பட்சம் 18 என்றும் ஆணுக்கு 21 என்றும் சட்டம் இருப்பதாக அனைவரும் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் குழந்தைத் திருமணங்கள் சட்டத்தின் முன் செல்லுபடியாகிறது என்றால் அது எப்படி?
இந்திய அரசியல் நிர்ணயச் சட்டம், அண்ணல் அம்பேத்கரின் சுதந்திரமான படைப்பு அல்ல என்பதையும், அண்ணலின் கோரிக்கைகள் பல நிராகரிக்கப்பட்டன என்பதையும் அவர் ஏற்றுக் கொள்ளாத பல அம்சங்கள் திணிக்கப்பட்டன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது நடப்பில் உள்ள எல்லாச் சட்டங்களும், இந்தச் சட்டம் (இந்திய அரசியல் நிர்ணயச் சட்டம்) நடப்புக்கு வந்த பிறகு செல்லுபடியாக மாட்டா என்று அண்ணல் முன்மொழிந்தார். ஆனால் இராஜேந்திரப் பிரசாதும், நேருவும், மற்ற பார்ப்பனர்களும், பழமைவாதிகளும் அதை நிராகரித்து விட்டனர். இது போன்ற நிகழ்வுகளின் தொடர்ச்சியில் தான் "இந்த அரசமைப்புச் சட்டத்தை நான் எழுதியதாக நண்பர்கள் கூறினார்கள். இதை எரித்துச் சாம்பலாக்கிடவும் நான் முதலாவது ஆளாக இருப்பேன்" என்று 2-9-1953 அன்று மனம் வெதும்பியும் துணிவுடனும் கூறினார்.
இப்பொழுது நமது அரசியல் நிர்ணயச் சட்டத்தில் "இப்போது நடப்பில் உள்ள சட்டத்தை இந்த விதியிலுள்ள எதுவும் தடை செய்யாது" (Nothing in this article shall affect the operation of any existing law) என்றும் "இப்போது நடப்பில் உள்ள சட்டங்கள் இனிமேலும் தொடர்ந்து செல்லுபடியாகும்... (continuance in force of existing laws...) என்றும் விதிகள் உள்ளன. இது மட்டும் அல்லாமல் "இந்த விதியில் இப்போது நடப்பில் உள்ள சட்டம் என்பது எதைக் குறிக்கிறது என்றால் - இந்தச் சட்டம் நடப்புக்கு வருவதற்கு முன்னர், அதிகாரம் வாய்ந்த ஒரு சட்ட மன்றத்தாலோ, வேறு அமைப்பினாலோ நிறைவேற்றப்பட்டு இருந்து அப்படிப்பட்ட சட்டம் ஏற்கனவே நீக்கப்படாமல் இருந்தால், அது இன்றும் செல்லும்" என்று விளக்கம் வேறு தெளிவாக எழுதப்பட்டு உள்ளது. இவற்றிற்கு எல்லாம் என்ன பொருள்?
இந்தப் பின்னணியோடு குழந்தைத் திருமணப் பிரச்சினைக்கு வருவோம். இப்போதைய திருமணச் சட்டம் பெண்ணின் திருமண வயது 18 என்றும் ஆணின் திருமண வயது 21 என்றும் வரையறுத்து இருக்கலாம். ஆனால் 1929 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட சாரதா சட்டத்தில் பெண்ணின் குறைந்த பட்ச திருமண வயது 14 என்று வரையறுக்கப்பட்டு உள்ளது. ஆகவே 14 வயதுப் பெண்ணைத் திருமணம் செய்து வைக்கும் யாரும் இது வரைக்கும் சாரதா சட்டத்தை எந்த சட்ட மன்றமோ நாடாளுமன்றமோ செல்லாது என்று நீக்கவில்லையே; ஆகவே அது இன்றும் நடைமுறையில் இருக்கிறது; அதன்படி 14 வயதுப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தது இந்திய அரசியல் நிர்ணயச் சட்டப்படி செல்லும் என்று வாதிட்டால் நீதிமன்றம் ஒப்பக் கொள்ளும். (எனக்குத் தெரிந்து சாரதா சட்டத்தை மேற்கோள் காட்டி இருக்கிறேன். இத்துறை நிபுணர்கள் இன்னும் எத்தனை/எத்தகைய சட்டங்களை எல்லாம் தெரிந்து வைத்து இருக்கிறார்களோ; தெரியவில்லை)
இதே விதிகளின்படி தான் பாபர் மசூதி வழக்கில் இந்திய மக்கள் - ஏன் உலக மக்களே - அதிர்ச்சியடையும்படியான தீர்ப்பு வந்தது. கோவில்களில் சாதி வேற்றுமை பார்க்காமல் அர்ச்சகரை நியமிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றினால் அச்சட்டம் செல்லாது என்று தீர்ப்பை வாங்கி வருவதும் இவ்விதிகளின் படிதான். உடன்கட்டை ஏற்றிவிடும் "மகா புண்ணியவான்களை" இவ்விதிகளின் படி தான் மேலும் புண்ணியத்தைச் சேர்க்க விடுதலை செய்து அனுப்பி வைக்கிறார்கள். மொத்தத்தில் பழைய மனு (அ)நீதியை நம் மீது திணித்து நம்மை அடிமைகளாக வைத்திருப்பது இவ்விதிகளின் மூலமாகத் தான்.
ஆனால், பழைய சட்டங்களைச் செல்லாததாக்குவதற்கு அண்ணல் அம்பேத்கர் முன்மொழிந்த திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று எந்த அரசியல்வாதியும் அக்கறை கொண்டதாகவே தெரியவில்லை. பொது மக்கள் ஓட்டுக்காகத் தங்களை நாடி வரும் அரசியல்வாதிகளிடம் இதைப் பற்றிக் கேட்க வேண்டும். ஒடுக்கப்பட்ட வகுப்பு அறிவு ஜீவிகள் இதைப் பற்றிய விழிப்புணர்வையும் பொதுக் கருத்தையும் உருவாக்க வேண்டும். இப்பணி நிறைவேறாத வரையில் நாம் மனிதர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பொருளே இல்லை.
இராமியா
(சிந்தனையாளன்) க்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.