Thursday, September 22, 2011
பூப்பு நீராட்டு - ஒரு வரலாற்று பார்வை - புதியமாதவி
புதிய உலகத்தில்
பெரியமனுசியாய்
கடமைகளுடன்
கால்தடம் பதிக்கிறாய்.
வா.
பெருமையுடனும்
மரியாதையுடனும்
வலிமை பொங்க
நடந்து வா.
இன்று முதல்
நீ -
நம் மக்களின் தாய்.
நம் தேசத்தின் தாய்.
பெண்ணின் பூப்படைதலைப் பெருமையுடன் பாடும் அப்பச்சி (Apache) இனக்குழு மக்களின் பாடல் இது.
பெண் பூப்படைதல் என்பது பல்வேறு இனக்குழு மக்களின் வாழ்க்கையில் கொண்டாட்டத்திற்குரிய சடங்காகவே இருந்து வந்துள்ளது. பூப்பு என்பது தீட்டு, விலக்கு, தீண்டத்தாகதது என்று எதிர்மறையாக நோக்கப்படவில்லை. பூப்பு என்ற சொல் தொடர்ச்சியாக வண்டு நுகர்தல், பிஞ்சு, காய், கனி, என்ற பிம்பங்களை மட்டுமே உருவாக்கி அதன் வழி இனவிருத்திக்கு காரணமான நேர்மறைச் செயலாகவே கருதப்பட்டது. ஆரிய இனப்பண்பாட்டின் தாக்கமும் வைதீகமும் ஆண் சமுதாயமும் கலந்து பெண்ணை அடிமைப்படுத்த முனைந்த காலத்தில் தான் பூப்பு என்ற செயல் "தீட்டாகிப்" போனது.
மனித வரலாற்றில் இனவிருத்தியின் நிலமாக இருந்தப் பெண்ணின் ஆளுமையைக் கண்டு வியந்து அச்சம் கொண்டு அவள் தலைமையை ஏற்றுக்கொண்ட இனக்குழு வாழ்க்கையில் பெண் தெய்வ வழிபாடே இருந்தது என்பதும் இன்றும் சிவப்பு நிறமும் நெற்றியில் இடப்படும் குங்குமச் சிவப்பும் ரத்தப் பலியிடலும் ஆகிய சடங்குகளின் காரணத்தை ஆராயப் புகுந்தால் பூப்பு என்ற சடங்கின் வேர்களை அடையாளம் காண முடியும். நிலமும் நிலம் சார்ந்த மருதமும் இனக்குழு வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்களில் குறிப்பிடத்தக்கது.
பெண் -இல்லாள் என்றும் மனைமாட்சி என்றும் மாற்றம் பெற்ற காலம். பூப்பு பெண்ணின் ஆளுமையாக இருந்தது மறைந்து இனவிருத்திக்கான அடையாளமாக மட்டுமே சுருங்கிய காலம்.
ஆண் -பூப்படைதல் சடங்கு
ஆணுக்கான சடங்குகள் அனைத்தும் போர், வேளாண்மை, அரசாட்சி என்று சமூக ஆள்வினைக்கான சடங்குகளாகவும் பெண்ணுக்கான சடங்குகள் அனைத்தும் பாலியல் உடல் சார்ந்தும் அவ்வுடல் பாலுறவு, மகப்பேறு என்று இனவிருத்தி சார்ந்தும் அமைந்ததாக காணப்படுகின்றன. அருந்தா இனக்குழு வாழ்க்கையில் ஆண் பூப்படைதல் சடங்கு கொண்டாடப்பட்டதைக் காணலாம். அதுவரை ஆடையின்றி அலைந்த ஆண்மகன் வயதுக்கு வந்துவிட்டான் என்பதை அறிவிக்கவும் கொண்டாடவும் அவன் பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் சடங்கு இது. அக்குழுவின் வயதான முதியவர் இச்சடங்கை நிகழ்த்துவார்.
தன் தலையால் ஆண்மகனின் தலையை மோதி ரத்தம் சிந்த வைப்பார். எறும்பு கடிக்கும் குழிக்குள் அவனை தள்ளி உணவின்றி சில நாட்கள் வைப்பார்கள். வீரமும் வலி பொறுத்தலும் போர் வாழ்க்கையில் ஆணுக்கான அம்சங்களாக இருப்பதால் இச்சடங்கை ஆணின் "மறுபிறப்பு" என்று சொல்கிறார்கள்.
ஆண் பூப்படைதல் சடங்கை "பிணை அறுத்தல்" - க்யா மோட்டு டி செலி (kia motu te sele - to snap the tie) என்றும் பெண் பூப்படைதல் சடங்கை "பாவாடை அணிதல்" ( hakatiti - titi skirt) என்றும் மேற்கத்திய நாடுகளின் இனக்குழு மக்களின் சடங்குகளிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.
பல்வேறு நாடுகளில் பூப்பு சடங்குகள்:
பெண் கருத்தரிக்கும் தகுதியை அடைந்துவிட்டாள் என்பதற்கான உடற்கூறு அறிகுறியை பூப்படைதல் என்று சொல்வர். பெண்ணுக்கு முதலாவதாக நேரும் இந்தப் பூப்படைதல் நிகழ்ந்த பிறகே அவளுக்குப் பாலியல் சுகம் உண்டாகிறது என்பதில்லை. தனி நபரின் உடல் வளர்ச்சியைப் பொறுத்து பெண்ணின் பூப்புக்கு முன்போ பின்போ அத்தகைய சுகத்தை அவள் உணரலாம். எனவே பூப்பு எனில் பெண் கருத்தரிக்கும் ஆற்றலைப் பெற்றுவிட்டாள் என்ற அளவில்தான் பொருள் கொள்ள வேண்டும். பெண் பூப்படைதல் சடங்கு பல்வேறு நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
ரஷ்யாவில் பெண் பூப்படைந்த உடன் அவள் தாய் பெண்ணின் முகத்தில் ஓங்கி அறைவிடுவாளாம். அவள் அடித்த அடியில் பெண்ணின் கன்னங்கள் சிவந்துவிடுவதை நல்ல அறிகுறியாக நினைக்கிறார்கள். கொண்டாடுகிறார்கள்.
நேபாளத்தில் பெண் பூப்படைந்தவுடன் அவளை ஒரு இருட்டறையில் அடைத்து வைக்கிறார்கள். வெளியில் வரவோ சூரிய ஒளியைப் பார்க்கவோ கூடாது. அதன் பின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவள் திருமணத்திற்கு தகுதியுடையவளாகிவிட்டாள் என்பதை உணர்த்தும் வகையில் அவளுக்கும் சூரிய பகவானுக்கும் திருமணம் செய்யும் சடங்கு நடைபெறும்.
ஆப்பிரிக்கா சுலு (Zulu) இனத்தில் பெண் பூப்படைந்த நாளில் ஆடு பலியிடுதல் நடக்கும். அந்தப் பெண் அவள் ஒத்தப் பெண்களுடன் காலையில் எழுந்து நதியில் நீராடி வந்தப் பின் அவள் உடல் எங்கும் சிவந்த களிமண்ணைப் பூசுவார்கள். பூப்படைந்த அந்த நாட்களில் சில உணவுகளை அவள் விலக்க வேண்டும். வயதானவர்களும் அவளைப் போல ஏற்கனவே பூப்படைந்தப் பெண்களும் பூப்படைந்தப் பெண்ணின் உடல் மாற்றங்களையும் வாழ்க்கை முறையையும் சொல்லிக் கொடுப்பார்கள்
ஜப்பானில் பெண்ணின் பெருமைக்குரிய சடங்காக பூப்படைதல் நிகழ்வைக் கொண்டாடுகிறார்கள். விருந்துக்கு அழைக்கும் போது விருந்துக்கான காரணத்தைச் சொல்வதில்லை. சிவந்த அரிசியும் பீன்ஸ்சும் நிறைந்த பெரிய தட்டை பூப்படைந்தப் பெண்ணின் முன்னால் வைத்திருப்பதன் மூலம் விருந்துக்கும் கொண்டாட்டத்திற்குமான காரணம் சொல்லப்படும்.
இந்தியாவிலும் பெண் பூப்படைதல் சடங்கு எல்லா இன மக்களிடமும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் இச்சடங்கு இன்றும் கொண்டாடப்படுகிறது. "பூப்பு நன்னீராட்டல்" என்று இச்சடங்கை கொண்டாடும் வழக்கம் இன்றும் தமிழர்கள் வாழ்வில் இடம் பெற்றுள்ளது. இச்சடங்கு குறித்த பதிவுகளை தமிழ்த் திரைப்படங்கள் அளவுக்கு யாரும் பதிவு செய்திருக்க முடியாது! தாய்மாமன் உரிமையிலிருந்து பூப்படைந்தவுடன் பாலியல் உணர்வு ஏற்படுவதாக காட்டப்படும் காட்சிகள் வரை உண்மை, பொய் அனைத்தையும் பூப்பு நன்னீராட்டில் கலந்து காட்டிய பெருமை நம் தமிழ்த் திரைப்படங்களுக்கே உண்டு.
சங்க இலக்கியத்தில் பூப்பு
பெண் பூப்படைதல் சடங்குகள் குறித்த தகவல்கள் சங்க இலக்கியத்தில் விரிவாக இல்லை. தொல்காப்பியம் பொருளதிகாரம் கற்பியலில்
"பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்
நீததகன் றுறையார் என்மனார் புலவர்
பரத்தையின் பிரிந்த காலையான" (நூற்பா 1133)
என்று மணமான பெண்ணோடு கணவன் புணரும் காலம் குறித்த தகவலைப் பதிவு செய்துள்ளது. இவ்விடம் குறிக்கப்படும் பூப்பு குழந்தைப் பருவத்து பெண் கருத்தரிக்கும் பருவத்திற்கு மாறிவிட்டதைக் குறிக்கும் பூப்பன்று.
பெண்ணின் முதல் பூப்பு, அதனை ஒட்டிய சடங்குகள் குறித்து ஒரேயொரு புறநானூற்றுப் பாடல், மகட்பாற் காஞ்சித்துறைப் பாடல் (337:6:12) குறிப்பிட்டுள்ளது.
"பாரி பறம்பின் பனிச்சுனை போல
காண்டற் கரியளாகி மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவோடு மண்ணிய
துகில்விரி கடுப்ப நுடங்கி தண்ணென
அகில் ஆர் நறும்புகை சென்றடங்கிய
கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு
மனைச் செறிந்தனளே வாணுதல்"
பெயர் குறிப்பிடப்படாத ஒரு மறக்குடிச் சிற்றரசனின் மகள் பூப்பு அடைந்ததால் பிறரால் காண்பதற்கு அரியவளாக, பெண்மை நிரம்பிய பொலிவோடு நன்கு வெளுத்து மடித்த துகில் போல அகலின் நறும்புகை கமழும் கபிலநிற வீட்டிற்குள் மனைச் செறிக்கப்பட்டாள் என்று இப்பாடல் பதிவு செய்துள்ளது.
காண்டற்கரிய பாலியல் பொலிவு, நுடக்கம், அகில் நறும்புகை, மனைச்செறிப்பு ஆகியவை சங்க காலத்தில் பூப்பு எய்தியதை ஒட்டி நிகழ்த்தப்பட்ட சடங்குகள் எனலாம். வேறு விளக்கமாக அறிந்திட சான்றுகள் இல்லை.
சடங்குகளூம் சமூக மாற்றங்களும்
அறிவியலும் கலை இலக்கியமும் "உண்மைகளை" வெவ்வேறு மொழிகளில் பேசுகின்றன. சடங்குகளும் அவ்வாறே பேசுகின்றன. மானிட வாழ்க்கையின் இருத்தலில் ஓர்மை மனதுக்கு (conscious mind) எந்த அளவுக்குப் பங்கு உண்டோ அந்த அளவிற்கும் குறையாமல் ஓர்மையற்ற மனதுக்கும் (unconsciousmind) பங்கு உண்டு. ஓர்மை மனதை அறிவு, பகுத்தறிவு ஆகியவற்றொடு சம்பந்தப்படுத்துவதைப் போல ஓர்மையற்ற மனதை சடங்குகள், கலை இலக்கிய படிமம் ஆகியவற்றோடு சம்பந்தப் படுத்த முடியும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து இனக்குழு நாகரிக வாழ்க்கையிலிருந்த சடங்குகள் மாந்தரைச் சமூக வயமாக்கும் கருத்தியல் செயல்பாடுகளைச் செய்து வந்துள்ளன: என்பார் ராஜ்கவுதமன்.
இத்தகைய சமூக முக்கியத்துவம் வாய்ந்த சடங்குகளைப் பற்றி ஆராய்ந்த அர்னால்டு வான் கென்னப் (Arnold Van Gennep) அவற்றை ஒரு குடும்ப/சமூக/பாத்திர நிலையிலிருந்து ஒருவர் அல்லது ஒரு குழு மற்றொரு குடும்ப/சமூக/ பாத்திர நிலைக்கு மாறிச் செல்வதற்கான சடங்குகள் (Rites of passage) என்று குறிப்பிடுவார். "தமிழர் மானுடவியல் நோக்கில் தமிழ்ப் பண்பாட்டில் பெண்ணுக்கு நான்கு இன்றியமையாத வாழ்க்கை வட்டச் சடங்குகள் வழியாக பூப்பு, வதுவை, மகப்பேறு, கைம்மை ஆகிய மாற்றங்கள் நிகழ்கின்றன " என்பார் பக்தவச்சலபாரதி- (தமிழர் மானுடவியல்) இந்த மாற்றங்களின் ஊடாக குமரி, மனைவி, தாய், கைம்பெண் முதலான குடும்ப/சமூக பாத்திரங்களை ஒரு பெண் ஏற்கிறாள்.
பெண்ணுக்கு இயற்கை வழங்கியிருக்கும் மறு உற்பத்தி அதிகாரம் கண்டு ஆண் பொறாமை அடைகிறான். அச்சம் கொள்கிறான். பெண்ணின் மறு உற்பத்தியை பெண் மூலமாக ஆண் அறிய வேண்டி இருப்பதால் தன் அதிகாரத்தை நிலைநிறுத்த தீவிரமாக சிந்திக்கிறான். தாய்வழிச் சமூக அதிகாரம் தடை செய்யப்பட்டு தந்தை உரிமைச் சமூக மேலாதிக்கம் நிலைநிறுத்த கொண்டாடப்பட்ட பெண்ணின் பூப்பு தீட்டாகி விலக்கி வைக்கப்படுகிறது. எதைக் கண்டு ஆண் அச்சப்பட்டானோ அதையே காரணமாக்கி பூப்பு, பெண்ணின் மறு உற்பத்தி உறவு, மகப்பேறு அனைத்தும் அவள் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்ட சமூகக் காரணிகளாக மாறியது.
மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோர் வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தில் பெண்ணைப் பற்றி பெண்ணின் சமூகத் தகுதி நிலையைப் பற்றி விளக்கும் போது உயிர் உற்பத்தி செய்வதிலும் சமூகத்தில் உற்பத்திச் சக்திகளை உருவாக்குவதிலும் சுதந்திரமாகவும் சம உரிமை பெற்றும் வாழ்ந்து வந்த பெண்கள் முதலாளித்துவ போக்கினாலும் தனிச்சொத்துரிமையாலும் துணைநிலையினரகவும் சார்பு மாந்தராகவும் மாறிப் போயினர். இம்மாற்றம் வரலாற்றி நிகழ்ச்சியில் தவிர்க்கவியலாத மாற்றமாகியது என்று விளக்குகின்றனர்.
தமிழ்ச்சமுதாயத்தில் நிலவும் தாய் தெய்வ வழிபாடும் கொற்றவை வழிபாடும் இதை உறுதிப்படுத்தும். இந்த தாய்தெய்வம் மிகப் பழமையான தெய்வம் என்பதால் "ப்ழையோள்" என்றும் மணிமேகலையில் "முதியோள் கோட்டம்": என்றும் குறிக்கப்படுவதைக் காணலாம். தாய்வழிச் சமூகத்தின் எச்சமாகவே பெண் பூப்படைதலைக் கொண்டாடும் சடங்கு பல்வேறு சமூகங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது.
எனினும் இன்றைய மத நம்பிக்கைகள் , தந்தை வழி ஆணாதிக்க சமூகம், முதலாளித்துவம் அனைத்தும் பெண்ணின் பூப்புடைதல் கொண்டாட்டத்தை ஆணின் நுகர்ப்பொருள் கொண்டாட்டமாக்கி, பாலியல் உறவில் ஆணின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் சட்டங்களாக்கிவிட்டது தான் உண்மை. சாதியக் கொடுமையை உணர்த்தும் தீண்டாமை, தீட்டு போன்ற சொற்கள் பெண்ணின் கொண்டாட்டத்திற்குரிய பூப்படைதலுடன் தொடர்புபடுத்தி தீட்டாகிப் போனது. பெண்ணின் பூப்படைதலும் மாதவிலக்கும் தீட்டாகிப் போனது. பெண் தீட்டாகிப் போனாள்., தீண்டத்தகாதவளாகிப் போனாள். பெண் அடிமையாகிப்போனாள். எனவே தான் பெண் பூப்படைதலைக் கொண்டாடுவதும் விளம்பரப்படுத்துவதுமான சடங்குகள் அவளை அடிமைப்படுத்தும் அடையாளங்கள் என்பதில் ஐயமின்றி ஒட்டுமொத்த பெண் விடுதலை விரும்பிகளும் பூப்பு நீராட்டு சடங்குகளை எதிர்க்கிறோம்.
பழமை என்பதால் பாதுகாக்கலாம் அருங்காட்சி அகத்தில். அதைப்போல தான் பழமையான சடங்குகளும் சம்பிரதாயங்களும் நம்பிக்கைகளும். சடங்குகளின் வேர்களைத் தேடி மனித வரலாற்றை ஆய்வு செய்யலாம். தேவையற்ற சடங்குகளை ஒழிப்பதன் மூலமே நிகழ்வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளமுடியும்,.
வடநாட்டின் குளிருக்கு
கால்சராயும் பூட்சோடும் பூசாரி
மோட்டார் போட்டாகிவிட்டது
பெருமாக் கோயில் தேருக்கு
திருப்பதிக்குப் போகமுடியாவிட்டால்
தி.ந்கர் கிளையில் காணிக்கைச் செலுத்தலாம்
மூணுநாள் விரதம்
ஐயப்பனுக்குப் போதும்
அரே ராமாவில்
ஆங்கிலேய அர்ச்சகர்
இந்தோனேசியக் கோவிலில்
செருப்புப் போட்டுக் கொள்ளலாமாம்
கணேசனுக்கும்
கோழிக்கறிப் படையல்
சட்டம் எழுதியாயிற்று
எல்லா சாதியும்
கோயிலுக்கு வர
என்னாடு போனாலும்
தென்னாடுடைய சிவனுக்கு
மாதவிலக்கான பெண்கள் மட்டும்
ஆவதே இல்லை.
- கவிஞர் கனிமொழி -
துணைநின்ற நூல்கள்:
1. பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும் - ராஜ்கவுதமன்.
2. welcome to womenhood - sharon supriya
நன்றி - கீற்று
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.