Thursday, September 22, 2011

பெண்ணியம் எதிர்வினைக்கு - எனது மறுவினை



பெண்ணியம் எதிர்வினைக்கு - எனது மறுவினை:
"பெண்கள் தீர்மானித்துக் கொள்கிறோம்"
- கொற்றவை


'உயிர் எழுத்து' ஜூலை மாத இதழில் நான் எழுதிய "பெண்ணியம் ஓர் உரையாடலுக்கான தொடக்கம்” எனும் கட்டுரையை வாசித்து, அதற்கு எதிர்வினையாக க.சி.அகமுடைநம்பி சில மாற்றுக் கருத்துகளை எழுதியுள்ளார். அதற்கு 'பெண்ணியவாதிகளின் பிறழ்வான கருத்துகள்' என்றும் தலைப்பிட்டிருக்கிறார்.

என் போன்ற பெண்ணியவாதிகளின் கருத்துகள் மறு சிந்தனைக்குரியது எனும் வார்த்தைகள் வரவேற்கத்தக்கது என்றாலும் அதற்காக க.சி.அகமுடைநம்பி முன்வைக்கும் உதாரணங்கள் ஆதாரமற்றவை; முன்முடிவுகள் கூடிய ஆணாதிக்கத்தின் சொற்கள். ஒரு கட்டுரைக்கு எதிர்வினை எழுதும்பொழுது அக்கட்டுரையிலிருக்கும் குறிப்புகளை கேள்விக்குட்படுத்துவதன் மூலம் ஒரு புரிதலை நோக்கி உரையாட முடியும். அக்கட்டுரை முன்வைக்கும் கருத்துகளை ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட கருத்தாக்கங்களிலிருந்தும் முன் முடிவுகளில் இருந்தும் விடுபடாமல், எதிர்பார்ப்புகளை அப்படியே எழுதுவதென்பது மாற்றுச் சிந்தனை என்பதைவிட, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கருத்தியல் கட்டமைப்புக்கு அடிமையாகிப்போன மனத்தின் வெளிப்பாடாகவே கருதத் தோன்றுகிறது.

"ஒரு ஆண் ‘ஆண்மை’ திறத்துடன் விளங்க வேண்டும், பெண் மக்கள் பெண்மைப் பொலிவுடன் ஒளிர்ந்து விளங்க வேண்டும்” என்கிறார். ஆண்மை பெண்மை என்பதை எந்த அடிப்படையில் வரையறுக்கிறார் க.சி.அகமுடைநம்பி? அவருடைய கட்டுரை முழுதும் ஆண் வலிமைமிகுந்தவன், பெண் மென்மையானவள் என்கிறார். ஆணாதிக்கம் வகுத்துள்ள ‘ஆண் அறம்’ ‘பெண் அறம்’ எனும் அரசியலையும் சம்மபந்தப்பட்ட என் கட்டுரையில் விளக்கியுள்ளேன். சதவிகிதங்கள் கொடுத்து அதில் குறைபாடு ஏற்படும்போது ஆண்மை பெண்மை திறன் மாறுவதாகவும், அதுவே ‘அரவாணிகள்’ என்று அறியப்படுவதற்கு காரணம் என்றும் கண்டுபிடித்திருக்கிறார்! பாலியலையும் கட்டமைக்கப்பட்ட பாலின அடையாளத்தையும் (sex and constructed gender qualities) போட்டு குழப்பிக் கொண்டுள்ளார்.

பாலியல் என்பது உயிரியல் அடிப்படையில் உடற்கூறை வைத்து அடையாளப்படுகிறது. ஆனால், பாலின அடையாளம் என்பது சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் ஆதிக்க சக்திகளினால் கட்டமைக்கப்படும் ஒன்று. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்வரை அப்படி ஒரு கட்டமைப்பு நடந்திருக்கிறது என்பது அறியப்படாமலும் அல்லது அறிந்தாலும் அது குறித்து செய்வதறியாமலும் இருந்திருக்கிறது. பல்வேறு போராட்டங்கள் மூலம் 'ஒடுக்கும்’ வரலாறு, அரசியல் குறித்தான ஆய்வுகள், விழிப்புணர்வுகள் நடந்தேறுகின்றன. அத்தகையப் போராட்டங்களில் ஒன்றே பெண் விடுதலைப் போராட்டம் என்பது. இருமை அடையாளங்களுக்குள் எல்லாவற்றையும் நிறுத்தி எடைபோடுவதென்பதும் துறக்கப்படவேண்டும் என்றும் சமீப காலங்களில் குரல்கள் எழுப்பப்படுகின்றன.

சமுதாயம் உருவாக்கியுள்ள ஆண் பெண் எனும் அடையாளம் இருப்பதால்தான் அது விவரிக்கும் தன்மைக்குள் வராதவர்களை பலவாறாக எள்ளல் செய்யும் போக்கும் அவர்களை நிராகரிக்கும் போக்கும் நிலவுகிறது. அரவாணிகள் குறித்து அவர் கூறியிருக்கும் விளக்கம் சற்றும் அறிவியல் தன்மை அற்றது; உயிரியலை இருமை அடையாளங்களை வைத்து எடை போடும் குறுகிய சிந்தனை. எளிய எடுத்துக்காட்டாக க.சி.அகமுடைநம்பி கூறிய கருத்தின்படி, குறையுடைய ஆணை பெட்டை, மலடன் பொண்டுகன், பேடி என்ற சொற்களை ஆண் சமூகமே ஏற்றிவைக்கிறது. அந்தச் சமூகமே ஆண்களுக்கு இளம் வயதில் வழுக்கை விழுவதை வாழ்வியல் முறையில் ஏற்படும் மாற்றம், சூழலியலில் மாசு, சுரப்பிகளில் மாற்றம் என்று எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் அவ்வடையாளத்தை பெண்மையின் வெளிப்பாடாய் கருதுகிறது. அதை அழகியல் குறைபாடாக கருதுகிறது. இந்த அழகியல் அபத்தமானது; ஆண்களுக்கு எத்தகைய நெருக்கடிகளை ஏற்படுத்துகிறது என்பதை எவரும் அறிவர். இதற்கிடையில் அறிவியல் வளர்ச்சியை முழு முற்றாக நம்பும் க.சி.அகமுடைநம்பியின் போக்கானது, எவ்வகையில் நிறைவு, நிறைவற்றது என தரம் பிரிக்கிறது?

ஆணாதிக்கமானது பெண்கள் மேல் ஏற்றிவைத்திருக்கும் அழகியல் எதிர்பார்ப்புகளுக்கு நிகராக ஆண்களின்மேலும் பலவித எதிர்பார்ப்புகளை ஏற்றிவைத்திருக்கிறது. அதிலிருந்து விடுபட முடியாமல், அது சாத்தியம் என்றுகூட அறியாமல்தான் ஆண்கள் பல்வேறு ’தளர்வு’ சாதனங்களை நாடுகின்றனர். ஒருவகையில் மனநோய், மன அழுத்தம், தற்கொலைச் சிந்தனை, கொலைச் சிந்தனை என எல்லாவற்றையும் இந்தச் சமூக அமைப்பே ஒருவருள் விதைக்கிறது. பாலியல் அடையாளத்தையே மீள்கட்டுமானம் செய்யவேண்டும் எனும்பொழுது அவ்வடையாளங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள நடை, உடை, பாவனை, மனநிலை, நடத்தை, கடமைகள் ஆகியவைகளை எப்படி கேள்வியின்றி ஏற்றுக் கொள்வது?

பெண்மை நிறைவாகப் பெற்றுள்ள பெண் தன் கணவரிடம் அடங்கி இருக்கவே விரும்புவாள், அதுபோல் ஆண்மை நிறைவாகப் பெறாத ஆண்மகன் தன் மனைவியிடம் அடங்கியிருக்க விரும்புவான் என்கிறார் க.சி.அகமுடைநம்பி. இதற்கான தரவுகளை ஊகங்களிலும் அவர் கூறுகிற முழு வளர்ச்சியும் நிறைவும் அடைந்த ஆண்களின் ஆணாதிக்க விருப்பத்திலிருந்தும் ஆசையிலிருந்துமே கூறுகிறார். எந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் பெண் அடங்கி இருக்க விரும்புவாள் என்கிறார்? ஃப்ராயிடின் “ஆண்குறி ஏக்கம்” (penis envy) என்பதைக்கூட பெண்ணியலாளர்கள் கட்டுடைத்துவிட்டனர் இன்னும் சொல்லப்போனால் நிராகரித்தும் விட்டனர். ஆணாதிக்கத்தின் வழிமுறையான ஆணின் ‘எதிர்ப்பார்ப்புகளை’ பெண்களுக்குரிய விதிகளாக, குணாதிசயமாக மாற்றும் சிந்தனையின் அடிப்படையே க.சி.அகமுடைநம்பியின் எழுத்துகளில் உள்ளது.

தன் மனைவிமேல் அன்புகொண்டு ஒரு கணவன் விட்டுக் கொடுத்து வாழ்வதை கொச்சைப்படுத்தும்விதமாக இருக்கிறது அவரது இரண்டாவது விவரிப்பு. இதுபோன்ற 'சமூகப் பார்வைகளே’ ஆணை தன் மனைவி மீது அன்பை செலுத்தவிடாமல் தடுக்கிறது. (அன்பு என்றால் என்ன என்பதை பின்நவீனத்துவமும், மார்க்சியமும் யதார்த்தத் தளத்தில் எப்படி பொருத்திப் பார்க்கிறது என்பது இங்கு ஆராயப்படவேண்டியது.) குடும்பத்தில் வன்முறைகளை ஏவிவிடுகிறது. அமைதியாக செல்வதும் விட்டுக் கொடுப்பதும் அன்பின் வெளிப்பாடாக கருதாமல் வெறும் கொடுக்கல் வாங்கல் பரிமாற்றம், பற்று, வரவு என்ற நிலையிலும், இது தவிர்த்து நான் மேற்கூறிய ஆண்மைக் குறைவு என்பது ஆதிக்கச் சிந்தனையாக உள்ளது. இதை ஆண்களேகூட விரும்பமாட்டார்கள்.

பாரதியாரையும் திருக்குறளையும் மேற்கோள் காட்டியுள்ளார். கற்பு நெறி வழுவாமல் இருபாலரும் இருக்க வேண்டும் என்பதும் கட்டுப்பாடற்ற பாலியல் உறவை பாரதி கடுமையாகக் கண்டிக்கிறார் என்பதும் மகிழ்ச்சியே. பாரதி இன்னொன்றும் சொல்லியிருக்கிறார், 'தனியொருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என்று. அது குறித்து எந்தக் கவலையுமின்றி ஆணாதிக்கத்தின் வழி ’சிறந்த ஒழுக்கத்தோடு’ விளங்கும் ஆண்கள் மேலும் மேலும் ‘தனிச் சொத்தை’ பெருக்கிக் கொண்டுபோவது, அப்பாவி மக்களின் சொத்துகளை மிரட்டி அபகரிப்பது, கொலைகள் செய்வது, கொள்ளைகள் அடிப்பது இவைகள் குறித்து க.சி.அகமுடைநம்பியின் கருத்துகளை தெரிவித்தால் முன்னோர்கள் சொல்லியுள்ளவற்றில் ஆண்கள் எத்தனை விசயங்களை அப்படியே நெறி மாறாமல் பின்பற்றுகிறார்கள் என்று புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். பலதார மணமுறை என்பது முந்தைய உலகாயத (பொருள்முதல்வாத) சமுதாயத்தில் நிலவிய ஒன்று, தாய்வழிச் சமூகம் குலைக்கப்பட்டு தனிச் சொத்துப் பேணும் தந்தைவழிச் சமூகம் (கருத்துமுதல்வாத சமுதாயம்) தோன்றிய பின்னரே ஒரு தார மணமுறை தோன்றியது. அந்த முறையானது தனி மனித நலனை மட்டுமே கருத்தில்கொண்டு, சமூக நலன் எனும் போர்வையில் கட்டமைத்த விதிகளில் ஒன்றே கற்பு நிலை என்பது. ஒரு தார மணமுறை சரியா தவறா, அவசியமா இல்லையா என்பது வேறொரு விவாதம். ஆனால், அது உருவான வரலாற்றை தெரிந்து கொள்வதென்பது அவ்வமைப்பு குறித்தான கருத்து முரண்பாடுள்ளவர்களுக்குரிய உரிமை. அப்படி அறியும் தகவல்களை முன்வைத்து கேள்விகள் எழுப்புவதும் அதை ஏற்க மறுப்பதும் உரிமைக்குரியதே. விதிகளை உருவாக்க ஒரு சமூக அமைப்புக்கு உரிமை இருக்கும்பொழுது, பாரதியின் வழியில் தனி ஒருவருக்கு அதில் உடன்பாடில்லை என்றாலும் அதை மீள்கட்டுருவாக்கம் செய்யும் கேள்விகளை முன்வைக்கும் உரிமையும் இருக்க வேண்டும் என்பது கணக்கில் கொள்ளவேண்டிய ஒன்று. அப்படி கேள்விகள் வைக்கப்படும்பொழுது பழைய சிந்தனை சட்டகத்திற்கு வெளியே வந்து உரையாடலைத் துவங்கினால் ஒழிய, புதிய சிந்தனை முன்வைக்கும் கருத்துகளை புரிந்துகொள்வது சாத்தியமில்லை.

பாரதியாரையும் திருவள்ளுவரையும் பெண்ணியத்துக்கு துணையாய் அழைக்கும் நம்பி, தமிழகத்தில் பெண்ணியத்தின் ஆசானாய் பெரியார் என்று ஒருவர் இருக்கிறார், அவருடைய கருத்துகளை ஒரு சிறு மேற்கோளாகக்கூட எடுத்துக்காட்டாமல் பெண்ணியம் குறித்து பேசுவது ஏன்? முதலில் இருப்பவர் கற்பு பற்றி அதிகாரம் எழுதியவர். பின்னவர் காணி நிலத்தோடு பத்தினிப் பெண்ணும் கேட்டவர். அது அவர் தொழும் பராசக்திக்கே வெளிச்சம்.

"அரசுக் காவல்துறை வல்லின வகையைச் சார்ந்தது, ஆகையால்தான் மெல்லினமாகிய பெண்கள் அதில் அல்லாடுகிறார்கள்” - இது என்ன ஒரு விவரிப்பென்றே புரியவில்லை. வலிமை பற்றிய நம்பியின் இந்தக் கருத்து நகரத்தில் குறிப்பாக மேற்தட்டு வர்க்க பெண்களையே மனத்தில் கொண்டு சொல்லப்பட்டதாகத் தெரிகிறது. மாறாக, கிராமங்களில் ஒரு பெண் ஆணுக்கு நிகராக புல் பிடுங்குவதிலிருந்து அதை சுமப்பது, விறகு வெட்டுவது, எல்லாவற்றிற்கும் மேலாக பலமணி நேரம் குனிந்தபடியே பின்னால் நகர்ந்தபடி செய்யும் ஒரே வேலையான நாற்று நடுதல் பற்றி அவர் அறிந்திருக்கிறாரா? ஆனால், எனக்குத் தெரிந்து எந்த ஆணும் இதுவரை நாற்று நட்டு பார்த்ததில்லை. அந்த வேலையை ஒரு ஆண் செய்து அதன் அனுபவத்தைப் பதிவு செய்தால் நம்பிக்கு வலிமை பற்றிய கருத்து முரண்படலாம்.

பெண்கள் ஆண்களின் கருத்தாக்கத்தால் அடக்கியாளப்பட்டதாலேயே மென்மையான காரியங்கள் மட்டுமே செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டாள். இங்கு மார்க்சின் மேற்கோளை நினைவூட்டுகிறேன்: "ஒரு கருத்தானது லட்சம் பேரைப் பற்றுகையில் அது பொருளாக மாறுகிறது". உதாரணத்திற்கு, திருப்பதி ஏழுமலையானையோ பத்மநாபபுரம் இறைவனையோ யாரும் பார்த்ததில்லை ஆனால், அவர்கள் பெயரில் சொத்து, வங்கிக் கணக்குகள்கூட இருக்கிறது. இந்த வேடிக்கையின் உச்சமாக குறிப்பிட்ட ஓர் அறையைத் திறந்தால் திறப்பவனின் தலைமுறையே விளங்காமல் போய்விடும் என்று சகலவிதத்திலும் ஆணாதிக்கம் முழங்கும் ஒழுக்கவிதிகளுக்குட்பட்ட ஆண் கூட்டம் சொல்வதை முழுநிறைவான ஆண்கள் கேள்விகள் ஏதுமின்றி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஊரார் சொத்தை கடவுளின் பெயரால் கொள்ளயடிக்கும் பெண்களை பற்றிய செய்திகள் மிக மிக சொற்பமே. அப்படி ஓரிருவர் இருந்தாலும் அவர்களைப் பின்னால் இருந்து இயக்குபவர்கள் ஆண் முதலாளிகளும் அரசியல்வாதிகளுமாக இருப்பர்.

உடல் சக்தியைக் கூட்டும் பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் பெண்ணும் ஆணுக்கு நிகரான, அதற்கும் மேலான திறனை வெளிப்படுத்தமுடியும் என்பதையும் என் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். குழந்தை பெறும் பேற்றைவிட பெண்ணின் வலிமைக்கு வேறு சான்றுகள் இருந்துவிட முடியாது. மாதவிடாய் காலங்களில் குலைத்து தள்ளும் வலிகளையும் பொருட்படுத்தாமல் பெண்கள் ’இரட்டை உழைப்பில்’ ஈடுபடுவதையும் வலிமைக்கான உதாரணம். க.சி.அகமுடைநம்பியின் கருத்துப்படி முழு நிறைவு பெறாத ஆண்கள்தான் நகரங்களில், உணவகங்களில் சமையல் மாஸ்டர்களாய் சமையல் செய்கிறார்கள். துரதிருஷ்டம் அதில் முழு நிறைவு பெறாத பெண்களும் ஆண்கள் சமைப்பது தெரிந்தும் சாப்பிடுகின்றனர்.

இல்லற வாழ்வில் ஆண் குடும்பத் தலைவன். புறச் செயல்கள் ஆணுக்கு, அகச் செயல்கள் பெண்ணுக்கு என்று அதே இரண்டாயிர கால தமிழ் பல்லவி. அகம், புறம், உடல், ஆத்மன் போன்ற மதம் சார்ந்த கருத்துமுதல்வாதத்திலிருந்து வேறுபட்டு இயற்கையோடு ஒன்றிணைந்த பொருள்முதல்வாத நிலையை எடுத்துரைப்பதே பகுத்தறிவின் நோக்கம். அத்தகைய பகுத்தறிவைக் கொண்டு பெண் எழுத்தாளர்கள் திருக்குறளில் இருந்து சில அதிகாரங்களை நீக்க வேண்டும் என்று சொல்வதில் என்ன புரிதலின்மை இருக்கிறது. திருக்குறளை எழுதியவர் ஓர் ஆண், அதற்கு உரை எழுதியவர்களும் ஆண்கள், ஆண்களின் வார்த்தை அரசியலை கட்டுடைப்பது பெண்கள். அதில் உண்மை இருப்பதால் பதறும் ஆண் மனம் எதிர்வினைக் கண்டு அச்சமுறுகிறது என்றுதான் சொல்லவேண்டும். பெண்ணியம் கோருவது விழிப்புணர்வு, தனி மனித சுதந்திரத்தின் மீதான சுயமரியாதை. ஒவ்வொருவரின் மீதும் சுயமரியாதை கடைப்பிடிக்கப்படும் ஒரு சமுதாயத்தில் இதுபோன்ற அதிகார கட்டமைப்புகள் சாத்தியமில்லை. சுயமரியாதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எந்த நபரும் அடுத்தவரை துன்பப்படுத்துவது நடக்காதபோது ‘ஒழுக்கம்’ என்பதற்கான விதியின் அவசியம் இருக்காது.

பெண்கள் வெளியில் சென்று பணியாற்றுவதால் பிள்ளைகளை சீராகவும் செம்மையாகவும் பராமரிக்க முடிவதில்லை என்கிறார். இதைவிட ஆணாதிக்க, சுயநல சிந்தனை ஒன்று இருந்துவிட முடியாது. இருக்கவும் முடியாது; இதை எதற்கும் நிகரற்ற அயோக்கியத்தனம். அதற்கு வேறு காரணங்கள் இருக்க, க.சி.அகமுடைநம்பியின் கருத்துப்படி தாய்களால் சீராகவும் செம்மையாகவும் பராமரிக்கப்பட்ட ஆண்கள்தான் அரசியலில் கொலையும் கொள்ளையும் அடிக்கிறார்கள். கோயில்களில் அறங்காவலர்கள் என்ற பெயரில் பொதுச் சொத்தை சுருட்டுகிறார்கள். மடங்கள் கட்டி பெண்களை சீரழிக்கிறார்கள். இன்னும் அழுத்தம் கொடுத்தால் வன்புணர்ச்சிக்கும் ஆளாக்குகிறார்கள். குழந்தைகளில் வளர்ப்பதில் ஆணின் பங்கு வெறும் சம்பாதித்துப் போடுவதுதானா? குழந்தையை வளர்ப்பதில், வழிகாட்டுதலில் அவனுக்கென்று உள்ள பங்குகள் என்ன? ஆண்கள் சினிமாப்பாட்டை எழுதியிருக்கிறார்கள். "அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம், தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்" என்ற பாடலையே நினைக்கத் தோன்றுகிறது. இந்த வரிகளின்படி ஒருவன் தீவிரவாதி, தேசியவாதி, வன்புணர்ச்சிவாதி, கொள்ளைவாதி, கொலைவாதி ஆவதற்கான வழிகாட்டும் அறிவை தந்தையிடம் இருந்தே பெறுகிறான். பாலியல் தேவைக்கு, பணிவிடை செய்வதற்கு, பிள்ளை பேற்றுக்கும், வாரிசு வளர்ப்பதற்கும்தான் பெண் என்று கூறப்பட்டு வருவதைத் தானே பெண்ணியவாதிகள் கேள்விக்குட்படுத்துகிறார்கள். எவ்வாறு இந்தக் கடமை பெண்களுக்கு, பெண்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டது என்பதுதானே இங்குள்ள கேள்வி.

"பெண்ணியம்" என்ற சொல்லுக்கு “பெண்மைக்குரிய எல்லா நல் இயல்புகளும் பொருந்திய நிலை" என்று பொருள்கொள்ளலாம் ஆயின், அத்தகைய பெண் இயக்கத்துக்கு இலக்கணமாகத் திகழ்பவளே திருவள்ளுவர் படைத்துக் காட்டுகிற மனைவி " என்ற நம்பியின் கருத்தே பெண்களின் மேல் வன்முறை செலுத்துவதாக இருக்கிறது. இதில் அவரது கடைந்தெடுத்த இரண்டாயிர வருட இலக்கிய கயமை. ஆம் இலக்கியம் உட்பட அனைத்தும் தமிழில் (உலக அளவில்) பெண்களுக்கு எதிராகவே படைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு பெண் மகளாய், மனைவியாய், சகோதரியாய், தாயாய், மாமியாராய் அறியப்படுவதைத் தவிர அவளுக்கென்று முதலில் ஓர் உயிரியல் அடையாளமும் தனிமனித அடையாளமும் இருக்கிறது. இதையும் தாண்டி ஆண்கள் கற்பிக்கும் மேற்கண்ட உறவுகள் ஆணைச் சார்ந்து அவனைவிட்டால் விதியில்லை என்று ஏற்படும் உறவை மட்டுமே சித்திரிக்கிறது. இதையே ஒரு வாதத்துக்கு கணவன், தந்தை, மகன் விபச்சாரகன், வாழாவெட்டி என்று ஆணுக்கும் சொல்லலாம். வாழாவெட்டிக்கு ஆண்சொல் கிடையாது. அதேபோல் பெண்களில் வேசிதான் உண்டு ஆண்களில் பொம்பளைப் பொறுக்கி உண்டு. அதையும் ஓர் எல்லைவரை தமிழ் சமூகம் 'மைனர்' என்று பெருமைப்படுத்தியது. (விபச்சாரகன் இங்கு என்னுடைய பதம்.) ஆக, ஆண்களின்றி பெண் தனித்து வாழமுடியாது. சிறுமியாய் இருக்கும்போது தகப்பனிடத்திலும் பருவத்தில் கணவனிடத்திலும் வயதான காலத்தில் மகன்களின் பொறுப்பில் மட்டுமே பெண்கள் இருக்கவேண்டும் என்ற மனுதர்மத்தையே வேறு வார்த்தைகளால் ஆண்கள் முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர். அதை அடியொற்றியே நம்பியின் வார்த்தைகளும் வந்திருக்கிறது.

'பெண்மைக்குரிய நல் இயல்பு’ பற்றி பேசும் முன், முதலில் நல் இயல்பு என்றால் என்ன, அது யாருக்கான நல் இயல்பு, அதனால் சம்பந்தப்பட்ட இரு உயிர்களுக்கும் சமமான உரிமையும் மகிழ்ச்சியும் சுயமரியாதையும் சுதந்திரமும் எஞ்சுகிறதா, அல்லது அது ஒருவழிப் பாதை மட்டுமா என்பதையே பெண்ணியவாதிகள் கேட்கிறார்கள். பெண்ணியம் என்றால் என்ன என்பதைக்கூட ஆண்களின் தேவை கருதித்தான் பேசவேண்டுமா. இது அதிகாரமில்லையா.

ஆணும், பெண்ணும் மட்டுமல்ல அந்த ‘வரையறைக்குள்’ அடங்காதவரும், மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் நுண்ணிய வேறுபாடுகளுடன் பிறந்தவர்கள், பிறப்பவர்கள். தற்போதைய சமூக அமைப்பு (ஆணாதிக்கச் சமூகம் என்று சொல்ல விரும்பாவிட்டால் இப்படி வைத்துக் கொள்ளலாம்) அப்படிப்பட்ட நுண்ணிய வேறுபாடுகளை பொது “அளவுருக்குள்” (parameters) அடக்கி, அதற்கென ஒரு கருத்தாக்கத்தை உருவாக்கி, அதை நோக்கிய பற்றை வெறியோடு வளர்த்துவிடுகிறது. இது பல்வேறு வகையான மனநெருக்கடிகளுக்கு ஒருவரைத் தள்ளி, சமூகக் குற்றங்களுக்கு வழிவகுக்கிறதேயன்றி, பெண்கள் ஆணுக்கு அடங்க மறுப்பதால் அல்ல. கற்பு நெறி, கணவனைத் தொழுதல் ஆகிய சிந்தனைகள் பெண்ணை வெறும் உற்பத்திப் பண்டமாகவும், குடும்பம் எனும் அமைப்புக்கான, அதிலும் ஆண்களுக்கு ஒரு சொகுசுக் கருவியாக மட்டுமே பார்க்கிறார்கள் என்பதைத் தெளிவாக விளக்குகிறது.

சுதந்திரம் பேசும் பெண்கள், பெண்ணியவாதிகள் பாலியல் சுதந்திரம்தான் கோருகிறோம் என்று “முழு நிறைவான” ஆணைக் கட்டமைத்த ஆணாதிக்கத்தின் கைப்பிள்ளையாய் ஆண்கள் இன்னமும் எத்தனைக் காலம் பெண்ணிய சிந்தனைகளை, பெண் விடுதலைப் போராட்டங்களை திசை திருப்பப் போகிறார்களோ. ஆண்களுக்கு அச்சுதந்திரம் எழுதா விதியாக இருக்கிறது. பாலியல் உறுப்புக்காகவும் உற்பத்தி சக்திக்காகவுமே தாங்கள் அடிமைப்படுத்தப்பட்டிருப்பதை அறியும் பெண்கள் ‘கற்பு’ சிந்தனையைக் கட்டுடைக்க அதை விமர்சித்துப் பேசுவது ஆண்களுக்கு இடைஞ்சலாக இருப்பதில் ஒன்றும் வியப்பில்லை. ஆண்கள் தலைமையில் நடக்கும் சுதந்திரப் போராட்டங்கள் மனித விடுதலைக்காக, பெண்கள் தலைமையில் நடக்கும் சுதந்திரப் போராட்டங்கள் “பாலியல் புரட்சிக்காக” எனும் திரிபு இனியும் விலை போகாது. அறிவியல், மருத்துவம், கல்வி இன்னும் பிற துறைகளில் காலத்திற்கேற்ப மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் சமுதாயம் ஏன் பெண்கள் விசயத்தில் மட்டும் முரண்டுபிடிக்கிறது. சொல்லாமலேயே ஆணுக்கு எல்லாச் சுதந்திரங்களும் கிட்டிவிடுகிறது, பெண் அனைத்தையும் போராடியே பெற்றிருக்கிறாள். இன்னமும் போராடி வருகிறாள். இதை சகித்துக்கொள்ள முடியாத ஆணாதிக்கவாதிகளின் கட்டுக்கதையே பெண்ணியவாதிகள் "ஒழுக்கங்கெட்டவர்கள்” எனும் கருத்தாடல். கணவனை இழந்த பெண் மொட்டையடிக்கப்பட்டு, பல் பிடுங்கப்பட்டு, வெள்ளைப் புடவையுடன் மட்டுமே வாழவேண்டும் என்பதுபோல் ஆணுக்கு அத்தகைய விதிகள் எதுவும் இல்லையே. ஆண்களின் அகராதிப்படி மெல்லினமான பெண்ணுக்கு வல்லின ஆண், ஏன் இத்தனை ‘வன்மையான’ தண்டனை கொடுக்கவேண்டும்?

முதலில் தனி மனிதர் ஒவ்வொருவருக்குமான உரிமைகளை சரிவரப் புரிந்துகொள்ளாமல் இருவர் இணையும் ஓர் அமைப்புக்குள் ஒவ்வொருவருக்கும் உள்ள பங்கு குறித்து உரையாடுவது முரண் நகை; .அது பயனற்றது. ஒவ்வொரு உயிரினத்திற்குமான தனிமனித உரிமைகளை முதலில் வரையறுப்போம். இதுவரை ஆணாதிக்கம் கட்டமைத்துள்ளவற்றை புறந்தள்ளிவிட்டு பகுத்தறிவுகொண்டு உருவாக்கப்படவேண்டிய ஒன்று அது. பிறகு, இருவர் சேர்ந்து இணையும் ஓர் அமைப்பில் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகளை சம்பந்தப்பட்ட இரு துணைகள் தீர்மானிக்கட்டும். பொத்தாம்பொதுவாக சமூக அமைப்பு எனும் நிறுவனம் தீர்மானிப்பது என்பது லாப நோக்கம் சார்ந்த செயல்பாடாக இருக்குமேயன்றி மனித நேய அடிப்படையில் இருக்காது.

ஆண்களால் ஏற்படக்கூடிய உடல் சிதைவிலிருந்து காத்துக் கொள்ளவே பல பெண்கள் திருமணம் செய்யும் மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால், அந்நிறுவனமும் அவள் மீது வன்முறையை வெவ்வேறு வழிகளில் ஏற்றிவைக்கிறது. இந்த பாதுகாப்பின்மை குறித்து க.சி.அகமுடைநம்பியின் கட்டுரை எந்தக் கண்டனங்களையும் எழுப்பவில்லை என்பது சற்று ஆச்சரியமாக இருக்கிறது.

ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது போர் தொடுக்கும்பொழுது வல்லின ஆண்களால் முதலில் சிதைவுறுவது மெல்லின பெண்களின் பிறப்புறுப்புகள், குழந்தைகள். மாறாய் பெண்களோ, பெண்ணியச் சிந்தனை உள்ளவர்களோ, அத்தகைய அழிவுகளை ஏன் செய்வதில்லை? ஆண் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் இடங்களில் எல்லாம் முதலில் அவன் கைப்பற்றுவது பெண்ணின் உடலைத்தான் என்பதை வரலாற்றில் பதியப்பட்டு உள்ளது. நம் அண்டை நாடான சிங்கள நாட்டில், அவ்வரசு செய்த போர்க்குற்றங்கள் பற்றிய ஆவணப் படத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைகளை க.சி.அகமுடைநம்பி கண்டிருப்பார் என்று நம்புகிறேன். அதிகார நாட்டத்திற்கு அப்பாவி மக்கள் பலியாவதற்கு ஆணாதிக்கம் கண்டுபிடித்த கருவிகளும், ஆயுதங்களுமே காரணம் என்பதற்கு மாற்றுக் கருத்து இருந்துவிடமுடியாது.

மனுதர்மமும், இதர பார்ப்பனிய வேதங்களும் நால் வர்ணங்களின் பெயரால் மனிதனை பிறப்பின் அடிப்படையில் அடிமைப்படுத்தி அதை அவன் நம்பவும், ஏற்றுக்கொள்ளவும் வைத்தது. ஒரு காலகட்டத்திற்கு மேல் அதன் உண்மைகள் கண்டறியப்பட்டு ஒடுக்கப்பட்ட இனமானது தனது விடுதலைக்கான, உரிமைகளுக்கான போராட்டங்களைக் கையில் எடுக்கவில்லையா. அதுபோல் ஒடுக்கப்பட்ட இனமான பெண் இனமும் தான் பிறப்பின் அடிப்படையில் மென்மையானவள் அல்ல; அது ஆணாதிக்க தீர்மானம் என்று முழங்குவது எவ்வகையிலும் தவறில்லை.

எத்தனையோ ஆண்டுகளாக, ஆண்களால் ஒடுக்கப்பட்ட பெண்ணினமானது கடந்த 40 ஆண்டுகளில்தான் கல்வி, பொருளாதாரம் ஆகிய சுதந்திரங்களைப் பெற்றிருக்கிறது. அச்சுதந்திரத்தை அனுபவிக்கும் வழிமுறைகளில் சில தவறுகள் நேரலாம், அதை விவாதிக்கலாம். அதிலும் பெரும்பகுதி தவறுகளுக்கு முழு நிறைவான ஆண்களே காரணமாக இருப்பதுதான் இன்னும் துயரம்.

இத்தனை புள்ளிவிவரங்களைக் கொடுத்தும் ஆணாதிக்கம் எங்கிருக்கிறது என்று நம்பி சொல்வது, ஆண்மை பெண்மை பற்றிய கருத்தாக்கங்கள் அழியாதவரை ஆணாதிக்கத்தின் இருப்பு உறுதி செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கும் என்பதற்கான ஆதாரச் சான்று. .

க.சி.அகமுடைநம்பியின் எதிர்வினையை முழுவதும் வாசித்த பின்னர் அது உணர்த்துவது “பெண்களுக்கென்று சொல்வதற்கு எதுவும் இல்லை, ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளதை அப்படியே பின்பற்றுங்கள். அதுவல்லாத காரணத்தால்தான் தீவிரவாதம் பெருகி சமுதாயமே சீரழிகிறது. பெண்களாகிய நீங்கள் எவ்வளவு சொன்னாலும் நான் எனது கருத்துகளை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்” எனும் ஒப்புதல் வாக்குமூலமும்தான்.

இதற்கு ஒற்றைவரியில் நீங்கள் ஆணாக ஆண்மையுடன் இருந்துகொள்ளுங்கள். ஆனால், பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பெண்கள் தீர்மானித்துக் கொள்கிறோம் என்று முடித்திருக்கலாம்தான். ஆனால், ஆண்கள் செய்வதையே திரும்பச் செய்வதென்பது பெண்ணியச் சிந்தனையாகாது எனும் முழுமுற்றான எனது நம்பிக்கை 'பெண்ணியம்’ குறித்தான புரிதலை நோக்கி உரையாடலை தொடரச் செய்கிறது.

(இம்மாத உயிர் எழுத்தில் வந்துள்ளது)

நன்றி- சாவின்உதடுகள்.

பெண்ணியம் உரையாடலுக்கான தொடக்கம் கட்டுரைகளை சாவின் உதடுகள் பதிவுத்தளத்தில் காணலாம்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.