Monday, September 5, 2011

இரண்டால் பால் -பெண்களின் “வேதநூல்”


பெண் விடுதலை பற்றிப் பேசுகின்ற பெண்ணியம் என்னும் சொல் உலகளாவியது. பெண்ணியம் என்ற சொல் ஆங்கிலத்தில் Feminism என்று சொல்லப்படுகிறது. இச்சொல் லத்தீன் மொழியில் உள்ள பெமினா (Femina) பெண்ணின் தன்மைகள் உடைய (having the qualities of women) என்ற சொல்லில் இருந்து மருவி வந்ததாகும். அதாவது பெண்ணின் உடற்கூறு பற்றிக் குறிப்பிட இச்சொல் பயன்படுத்தப்பட்டது.

பிற்காலத்தில் பெண்ணியம் என்ற இச்சொல்லே பெண்களின் உரிமைப்பற்றிப் பேசவும் உபயோகப்படுத்தப்பட்டது. தமிழ் நாட்டில் இச் சொல்லாடல் பெண் விடுதலை, பாலின சமவுரிமை, மகளிரியல் போன்றவற்றிற்கும் கையாளப்படுகிறது. உலகநாடுகளில் குறிப்பாக மேலை நாடுகளில் பதினேழாம் நூற்றாண்டிலேயே கருக் கொண்ட பெண் விடுதலைச் சிந்தனைகள் இந்தியாவைப் பொறுத்த வரையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் வேர் பெற்றன.

உலகம் முழுவதிலும் ஏராளமான பெண்கள் பெண்ணியத்தின் வளர்ச்சிக்கு அடிகோலி இருக்கிறார்கள். பதினேழாம் நூற்றாண்டின் “அப்ராபென்” தொடங்கி இன்றைய “கேட்மில்லட்’ வரை நிறையப் பெண்கள் பெண்ணுரிமைக்காகப் போராடியும் எழுதியும் வந்திருக்கிறார்கள். அமெரிக்க எழுத்தாளரான கேட் மில்லட் எழுதிய “பாலின அரசியல்” என்ற நூல் 1970ல் வெளிவந்தது. பெண் விடுதலைக் கருத்துக்களின் மிகப்பெரிய எழுச்சிக்கு இந்நூல் வித்திட்டது, எனில் அது மிகையன்று.

இதற்கு முன்பாகவும் பல பெண்கள், பெண்கள் நிலை பற்றியும் அதனின்றும் மீள வேண்டியதன் தேவை பற்றியும் பற்பல சிந்தனைகளை நூலாக்கி வைத்தனர். அவற்றுள் மேரி வோல்ஸ்டன் கிராப்ட் எழுதிய பெண்ணுரிமைக் கொள்கை நிறுவீடு (The Vindication of the Rights of Women) ஜான் ஸ்டூவர்ட் மில் எழுதிய “”பெண்ணடிமை நிலை” (The Subjection of Women) பெட்டி ஃபினாட்னன் எழுதிய “பெண்ணியல்பு நிலை” (Feminism Mystique) மற்றும் சைமன்டிபெவாயர் (Simon-de-Beauvoir) எழுதிய “”இரண்டாம் பால்” (The Second Sex) போன்ற நூல்கள் பெண்களை மற்றும் பெண்ணினத்தின் வரலாற்றை மாற்றுவதற்குப் பெரிதும் உதவி இருக்கின்றன.

இத்தகைய தலைசிறந்த பெண்மணிகளுள் ஒருவரான சைமன்டிபெவாயர் பிரெஞ்” நாட்டவர். இவர் கதாசிரியர், கட்டுரையாளர், தத்துவஞானி மற்றும் பெண்ணியவாதி என்றழைக்கப்படும் பன்முக ஆற்றல் நிறைந்தவர். இவர் 1949ம் ஆண்டு எழுதிய “இரண்டாம் பால்” எனும் நூல் பெண்ணியத்தின் வேதநூல் என்று போற்றப்படுகிறது. சமூகப் படிநிலைகளின் வளர்ச்சியினூடே, பெண் எவ்வாறு இரண்டாமிடத்திற்குத் தள்ளப்படுகிறாள் என்பதை இந்நூல் உளவியல் பூர்வமாக விளக்கிச் சொல்கிறது.

நவீன சமுதாயங்கள் அனைத்துமே தந்தை வழிச் சமூகமாகவே அமைக்கப்பட்டுள்ள காரணத்தால், பெண்கள் ஆண்களை விடத் தாழ்ந்தவர்கள், பலவீனமானவர்கள் என்ற கருத்தை ஒட்டு மொத்த சமூகமும் பிரதிபலிக்கிறது. ஆனால் உண்மை நிலை அதுவல்ல என்பதைப் பெண்ணியவாதிகள் ஏராளமான சான்றுகளோடு மறுத்தனர்
சைமன்டி பெவாயர் தனது நூலான இரண்டாம் பாலில் பெண்களின் தாழ்வு நிலை என்பது அவர்களுடன் பிறந்ததல்ல; சமூகத்தால் உருவாக்கப்பட்டது என்பதைத் அழுத்தமாக வெளிப்படுத்தினார்.

“ஒருவர் பெண்ணாகப் பிறப்பதில்லை, பெண்ணாக உருவாக்கப்படுகிறார்” என்பதே அந்நூலில் உள்ள புகழ்பெற்ற மேற்கோளாகும். மிகவும் பிரபலமான இந்த மேற்கோள் பெண்ணியம் குறித்த அனைத்து விவாதங்களிலும் இடம் பெற்று பெண்ணிய மறுமலர்ச்சிக்குப் பெரிதும் அடிகோலியது. அந்நூல் ஆண்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டாலும், பெவாயர் துணிச்சலுடன் இருபாலரின் சம உரிமையை வலியுறுத்தினார். குறிப்பாக பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை முன்வைத்துப் போராடினார்.

சைமன்-டி-பெவாயர் 1908ம் ஆண்டு ஜனவரித் திங்கள் 9ம் நாள் பிறந்தார். தந்தையின் பெயர் ஜார்ஜ் பெர்ட்டிரண்ட்-டி-பெவாயர், தாய் பிரான்சு வாஸ் ப்ரஸர் என்பவர். ரோமன் கத்தோலிக்கக் குடும்பம் எனினும் சைமன் சமூகம் மற்றும் மதம் பற்றிய மதிப்பீடுகள் அனைத்தையும் அறவே ஒதுக்கினார்.

சோர்போன் பல்கலைக் கழகத்தில் வேதாந்தம் பயின்று பின்னர் அங்கு பேராசிரியராகவும் பணிபுரிந்தார். அங்கு ஜான்பால் மர்த்ரெ என்ற பிரெஞ்சுத் தத்துவ ஞானியுடன் ஏற்பட்ட நெருங்கிய தொடர்பு அவரது வேதாந்த கருத்துக்களின் முன்னேற்றத்திற்கும், வெளிப்பாட்டிற்கும் மிகவும் உதவியாக இருந்தது.

சைமன் 1970ம் ஆண்டிற்குப் பிறகு பெண்கள் விடுதலை இயக்கத்தில் தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டார். 1971ம் சீசல் ஹலினி என்கிற வக்கீலுடன் சேர்ந்து “சுவாசிர்” என்னும் இயக்கத்தைத் துவங்கினார். அப்போது பிரான்சு நாட்டில் பெண்கள் கருத்தடை உரிமைக்காகவும், சட்டபூர்வ கருக்கலைப்பு உரிமைகேட்டும் பெரும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தனர். 1971ம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி “லா நூவெல் ஆப்ஸர் வேட்டர்” என்கிற பிரெஞ்சுப் பத்திரிகை 343 பெண்களின் கையெழுத்தோடு ஒரு மனுவைப் பிரசுரித்திருந்தது. அதில் பெரும்பாலான பெண்கள் பிரபலமானவர்கள். இந்தப் பெண்கள் அனைவரும், தாங்கள் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்து கொண்டதாகவும், அதற்கான தண்டனைக்கும் மற்றும் சிறை செல்லவும் தயாராய் இருப்பதாகவும், அந்த மனுவில் உறுதிப்பூர்வமாக பிரகடனப்படுத்தி இருந்தனர்.

பிரெஞ்சுப் பெண்களின் துணிகரமான இந்த நடவடிக்கை ஆணாதிக்கவாதிகளால் மிகுந்த அவதூறுக் குள்ளானது. சைமன்-டி-பெவாயர் இந்த அறிக்கைக்குத் தலைமையேற்று, தானும் அதில் கையெழுத்திட்டிருந்தார். இந்த நடவடிக்கை “தி மானி பெஸ்ட் ஆஃப் 343” என்றழைக்கப் பட்டதோடு நாட்டின் மிகப் பெரிய சட்டப் புறக்கணிப்பிற்கு ஒரு சான்றாக நின்றது. இதில் கலந்து கொண்ட பெண்ணிய வாதிகளில் வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், பிற்காலத்தில் பிரான்சில் அமைச்சரான “வெட் ரூடி” போன்றோர் இருந்தனர்.

இந்த மாபெரும் சட்டப் புறக்கணிப்பு ஏற்படுத்திய தாக்கத்தினால் 1973ம் ஆண்டில் 331 மருத்துவ வல்லுநர்கள் கூடி கருத்தடை செய்ய உரிமை கோரி ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டனர். இது போன்ற தொடர் நடவடிக்கைகளால் 1974ல் வெலில் சட்டம் (Viel Law) உருவானது. இதன் மூலம் பத்து வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்வது சட்டபூர்வ மாக்கப்பட்டது. பின்னர் அதுவே 12 வாரங்களாக மாற்றம் பெற்றது. இவ்வெற்றி பிரெஞ்சுப் பெண்ணிய வாதிகளின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாகக் கருதப்பட்டது.

சைமன்-டி-பெவாயர் தலைமையேற்று நடத்திய நடவடிக்கை வெற்றி பெற்றதைப் போன்றே அவரால் 1949ம் ஆண்டு பிரெஞ்சுமொழியில் எழுதி வெளியிடப்பட்ட இரண்டாம் பால் என்னும் நூல் பெருத்த ஆதரவைப் பெற்று, 1952ல் The Second sex என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வெளிவந்தது. உலகமெங்கும் பலமுறை பதிப்பிக்கப் பெற்ற இந்நூல் பெண்ணியத்தின் வேதநூல் என்று போற்றப்பட்டதோடு, அதனை உருவாக்கிய பெவாயர் “பெண்ணியத்தின் தாய்” என்று அழைக்கப்பட்டார்.

மதங்கள், மூடநம்பிக்கைகள், சனாதனக் கோட்பாடுகள் மற்றும் இலக்கியங்கள் வாயிலாக பெண்களைப் பற்றி ஆண்கள் உருவாக்கிய போலியான கட்டுக்கதைகளை அந்த நூலில் சைமன் வெளிச்சம் போட்டுக் காட்டினார். ஒவ்வொரு சம்பவத்திலும் ஆண் தன்னை முன்னிலைப் படுத்தியதையும், பெண்ணைப் பின்னுக்குத் தள்ளியதையும் ஆதாரங்களோடு விளக்கினார்.

பெண்ணுரிமைக்கு ஆதரவாக எழுதப்பட்ட அந்த நூலில் “ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் எவ்வித வேறுபாடும் இல்லை” என்றே சொல்லப்பட்டிருப்பதாக சைமனுக்கு எதிரானோர் புரளி கிளப்பினர். ஆனால் உண்மையில் ஆண், பெண் இடையிலான ஏற்றத்தாழ்வுகள் பாரம்பரியத்தாலும், கலாச்சாரத்தாலும் வந்நதே தவிர இயற்கையானது அல்ல என்பதைத் தான் பெவாயர் அந்நூலில் உறுதிப்படுத்தி இருந்தார். பெண்ணுக்கு இந்த உலகம் கொடுத்தது கொடுக்காதது, புறக்கணிப்புகள் – சாதனைகள் என்பதைப் பல கோணங்களில் அவர் ஆய்வு செய்திருந்தார்.

செயின்ட் தாமஸ் என்பார் பெண்ணை “முழுமை பெறாத மனித இனம்” என்றறிவித்தார். இவ்வாறு மனித இனம் என்பது ஆண் மட்டும் தான். பெண், ஆணைச் சார்ந்தவள்; தனித்துவம் அற்றவள் என்றே சமூகம் கருதி வந்திருக்கிறது. சில தன்மை குன்றிய பண்புகளால், பெண் பெண்ணாகவே இருக்கிறாள் என்றும், “அந்தப் பெண்களை இயற்கைக் குறைபாடுள்ளவர்களாகவே நாம் காண வேண்டும்” என்றும் அரிஸ்டாட்டில் குறிப்பிடுவது இங்கு நினைவு கூரத் தக்கது.

கிறித்துவத்தின் வேத நூலோ பெண்ணை ஆணின் விலா எலும்பிலிருந்து உருவானவள் என்று கூறி அறிவியலையே புறக்கணிக்கிறது.
இத்தகைய கடுமையான சூழ்நிலைகளில் பெண்ணினத்திற்கெனப் போராடிய சைமன்-டி-பெவாயர் தலைசிறந்தவராகப் போற்றப்படுகிறார். பெண்களின் விடுதலைக்காக ஒரு பெண்ணே போராடும்போது போராட்ட உணர்வுகள் கூர்மை பெற்று மதிப்புப் பெறும் என்ற உண்மை பெவாயரின் வாழ்க்கை மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 1986ம் ஆண்டு ஏப்ரல் 14ம் நாள் உயிர்நீத்த பிரெஞ்சுப் பெண்ணியவாதி சைமனின் புகழ் பாலின உரிமை பெற்ற சமத்துவ சமூகத்திலும் நிலைத்திருக்கும்!


Saturday, September 4, 2010 @ 8:15 PM
(நன்றி. தலித் முஸ்லிமிலிருந்து ஊடறுவுக்காக யசோதா)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.